புதன், 14 நவம்பர், 2018

சீதாராம் யெச்சூரி : தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம்

திமுகவுடன் கூட்டணி: சீதாராம் யெச்சூரிமின்னம்பலம் : ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “வரும் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்போம்” என்று அறிவித்துள்ளார்.
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதுமுள்ள மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக ஸ்டாலினை சந்தித்த சந்திரபாபு நாயுடு, கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வந்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு இன்று (நவம்பர் 13) சென்றார். அவரை பொன்னாடை அணிவித்து ஸ்டாலின் வரவேற்றார். இருவரும் நாடாளுமன்றத் தேர்தலின் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
சந்திப்பின்போது திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி, “கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. பாஜக அரசு அகற்றப்பட வேண்டும், நாடு பாதுகாக்கப்பட வேண்டும், இந்தியாவின் ஜனநாயகத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசித்தேன். சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. இந்தியக் கட்சிகள் முன்பு தற்போது உள்ள பிரச்சினை இந்தியாவின் மதச்சார்பின்மையை பாதுகாப்பது ஆகும்” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் இடம்பெறுமா என்னும் கேள்விக்கு, “கூட்டணி முதலில் மாநில அளவில் தான் உருவெடுக்கும் அதனை தொடர்ந்து தேசிய அளவில் அரசியல் கூட்டணி உருவாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை வரும் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்க முடிவு செய்துள்ளோம். சிறப்பான இந்தியாவை உருவாக்கவே திமுக உடன் கூட்டணி அமைக்கிறோம். நாங்கள் இந்திய மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க ஒன்றிணைகிறோம்” என்று தெரிவித்தார்.
இடைத் தேர்தல் குறித்து பேசவில்லை. அது மாநில அளவில் முடிவு செய்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: