சனி, 17 நவம்பர், 2018

இலங்கை: மீண்டும் பேரம்!

     மின்னமாலம்: இலங்கையில் அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் திங்கட்கிழமையன்று கொண்டுவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், எம்.பி.க்களை இழுப்பதற்கான பேரமும் தொடங்கியுள்ளது.
இலங்கை: மீண்டும் பேரம்!இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்ஷே ஆட்சிக்கு எதிராக நவம்பர் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதிகளில் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு தீர்மானங்களும் வெற்றியடைந்துள்ளபோதும் அதனை ஏற்க முடியாது என அதிபர் மறுத்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகையில் உரிய நாடாளுமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 17) செய்தியாளர்களை சந்தித்த இலங்கை பொதுஜன முன்னணி உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் யப்பா அபேவர்தன, சரியான முறையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் ராஜபக்ஷே தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் குறித்து அவர் முடிவெடுப்பார் என்றும் அபேவர்தன கூறியுள்ளார்.


இதற்கிடையே, அமைச்சகங்களின் செயலாளர்கள், தலைமை செயலாளர்கள் உள்ளிட்டோர்களுடன் அதிபர் மாளிகையில் இன்று காலை சிறிசேனா ஆலோசனை நடத்தியுள்ளார்.
பேரம் தொடங்கியுள்ளது
திங்கட்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கலாம் என்று கூறப்படும் நிலையில், எம்.பி.க்களை இழுக்கப் பேரமும் தொடங்கப்பட்டுள்ளது. ரனிலின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருமான மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குப் போலி பிரதமருக்குத் திங்கட்கிழமை வரை கால அவகாசத்தை அதிபர் சிறிசேனா வழங்கியுள்ளார். ராஜபக்ஷேவின் மகன் யொசித்தா ராஜபக்ஷே தலைமையில் மீண்டும் பேரம் தொடங்கியுள்ளது. எங்களின் எம்.பி.க்களுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தர பேரம் பேசப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை யொசித்தா மறுத்துள்ளார். “தயவு செய்து என்னை அரசியலில் இழுக்க வேண்டாம். ரக்பி விளையாட்டில் தற்போது நான் மும்முரமாக உள்ளேன். அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட நேரமும் இல்லை. எனவே என் பெயரை அவதூறு செய்ய வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
ராஜபக்ஷேவின் மற்றொரு மகனான நமல் ராஜபக்ஷேவோ மாலத்தீவுவின் புதிய அதிபரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: