ஞாயிறு, 11 நவம்பர், 2018

கிரண்பேடி ரூ. 50 லட்சம் நிதி மோசடி.. டெல்லி போலீஸ் எப்ஐஆர் பதிவு

saalaram.com : டெல்லி நீதிமன்ற உத்தரவின்படி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி மீது டெல்லி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி அன்னா குழுவில் சேர்ந்து ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிறார். இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் தேவீந்தர் சிங் சவுகான் கிரண் பேடி மீது கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கிரண் பேடி, `இந்தியா விஷன் அறக்கட்டளை', `நவஜோதி அறக்கட்டளை' என்ற இரு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளைகள் மூலம் எல்லைப் பாதுகாப்புப்படை, மத்திய ஆயுதப்படை, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை, மத்திய தொழிற்பாதுகாப்புப்படை ஆகிய துணை ராணுவத்தினரின் பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் மாநில போலீசாரின் பிள்ளைகள், குழும்பத்தினர் ஆகியோருக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க இருப்பதாகக் கூறி `மைக்ரோ சாப்ட்' நிறுவனத்திடம் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை பெற்றுள்ளார்.


ஆனால் அவர்களுக்கு இலவச கம்ப்யுட்டர் பயிற்சி அளிக்கவில்லை. இலவசமாக கம்ப்யூட்டரும் கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்து இருக்கிறார். மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு அவர் வேதாந்தா அறக்கட்டளைக்கும் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி கொடுப்பதற்கு பதில் ஒவ்வொருவரிடம் இருந்தும் மாதந்தோறும் தலா ரூ.20,000 கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளார்.

வேதாந்தா அறக்கட்டளையுடன் ஒரு நன்கொடை ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி அந்த அறக்கட்டளையிடம் மாதந்தோறும் தலா ரூ.20,000 கம்ப்யூட்டர் பயிற்சிக்காக வசூலிக்காமல், தலா ரூ.6,000 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளிடமும் அவர் பெருந்தொகையாக நன்கொடை பெற்றுள்ளார். இது குறித்து வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு தீர விசாரணை நடத்த வேண்டும். ஆகவே கிரண்பெடி மீது இ.பி.கோ. 420 (ஏமாற்றுதல்), 406 (நம்பிக்கை மோசடி), 477ஏ (பொய்க்கணக்கு), 120பி (கிரிமினல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு அமித் பன்சால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கிரண்பேடி மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டெல்லி போலீசுக்கு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்பேரில் டெல்லி போலீசார் கிரண்பேடி மீது மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கிரண் பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

என் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது கேட்டு நான் ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. இது என்னை மேலும் தீர்க்கமாக சேவை செய்யத் தூண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: