வியாழன், 15 நவம்பர், 2018

ஒருமாதத்தில் தமிழ்நாட்டில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பெரும்பாலும் சிறுமிகள்?

LR Jagadheesan : கடந்த ஒருமாதத்தில் தமிழ்நாட்டில்
நடந்த சுமார் பத்துக்கும்
மேற்பட்ட பாலியல் வல்லுறவுக்கொலைகளில் பலியானவர்கள் பெரும்பாலும் சிறுமிகள். அல்லது இருபது வயதொட்டிய பதின்பருவத்தினர். பெரும்பாலும் வறியவர்கள். சமூக, அரசியல் செல்வாக்கற்றவர்கள்.
அவர்கள் கொல்லப்பட்ட விதங்களின் குரூரமும் அவற்றை செய்தவர்களில் கணிசமானவர்கள் கூட்டாக இந்த கொடூரத்தை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கிறார்கள் என்பதும் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களின் வயதும் கூட இருபதுகளில் இருப்பதும் நம் சமூக அழுகலின் ஆபத்தான அறிகுறிகள்.

அதிலும் பழங்குடி மாணவி சௌம்யாவுக்கு நடந்திருப்பது சமூகத்தின் கூட்டுக்கொலை மட்டுமல்ல அரசாங்க நிர்வாகத்தின் ஆணவம் மிக்க கூட்டுக்கொலையும்கூட. அந்த சிறுமிக்கு அந்த கொடூரத்தை நிகழ்த்திய அந்த இரண்டு இளைஞர்களின் குரூரத்துக்கு மேலானது அந்த கொடுமைக்குப்பின்னான அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் காட்டிய அதிகபட்ச அலட்சியம்; வெளிப்படுத்திய ஆணவம்; மறந்துவிட்ட குறைந்தபட்ச மனிதாபிமானம்.
நீட் விவகாரத்தில் அனிதாவை கொன்ற இந்திய அரச நிர்வாக கட்டமைப்பின் அநியாயத்துக்கு ஈடானது பழங்குடி மாணவி சௌம்யாவை கொன்ற தமிழக அரசாங்க நிர்வாகத்தின் செயல். இது முழுக்க முழுக்க தமிழக சமூகமும் அரசும் சேர்ந்து செய்திருக்கும் கூட்டுக்கொலை.
தமிழக அரச நிர்வாகமும் காவல்துறையும் முற்று முழுதாக நிலைகுலைந்து, சீர்குலைந்து, கேட்பாரற்ற, யாருக்கும் பொறுப்பு கூறத்தேவையற்ற பயங்கரமானதொரு காலித்தனமான அமைப்பாக மாறியிருக்கிறது. இது ஆபத்தானது.
சமூகத்தை ஆழமாக உளவியல்ரீதியில் அச்சமூட்டக்கூடியது. எப்பொழுதெல்லாம் ஒரு சமூகம் கூட்டாக உளவியல் ரீதியில் அச்சமூட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அது சர்வாதிகாரத்துக்கு ஏங்கும். எல்லாவற்றையும் ஒற்றை விரலசைவில் சரிசெய்யும் ஆளுமையை தேடும். அமைப்புகள் மீது நம்பிக்கை இழக்கும். ஒற்றை ஆளின் மந்திரசொல்லுக்கு ஏங்கும். அது தான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இது பேராபத்து.
உதாரணமாக பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறப்படுகிறது. தன்னிடம் உதவிகேட்டுவந்த ஏழைப்பெண்ணிடம் பாலியல்ரீதியில் தவறாக நடந்துகொண்டார் என்பது குற்றச்சாட்டு. நான் அப்படி செய்யவில்லை என்கிற ஒற்றை வார்த்தையோடு அந்த அமைச்சர் அதை புறந்தள்ளிவிட்டு இயல்பாக இருக்கிறார். தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறார். சவால் விடுகிறார். அவருக்கு இதையொட்டி சிறு சங்கடம் கூட இல்லை. ஊடகங்களும் இதை அதற்குமேல் ஆராயவில்லை. ஒரு ஊடகம் ஒரு படி மேலே போய் அந்த பெண்ணின் கடந்தகால “சரித்திரத்தை ஆராய்ந்து” அவர் ஒழுக்கம் கெட்டவர் என்று தீர்ப்பே எழுதி முடித்துவிட்டது.
https://www.polimernews.com/…/36907-Minister-Jayakumar-audio
பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டையே அவரால் இவ்வளவு சுளுவில் கடக்க முடியும் ஒரு மாநிலத்தில்; அதற்கு துணைபோகும் ஊடகங்கள் சூழ் உலகில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் சிறுமிகள் மீதான கூட்டு பாலியல்வல்லுறவு கொலைகள் என்கிற கொடூர வடிவம் எடுக்காமல் என்ன செய்யும்?

கருத்துகள் இல்லை: