புதன், 14 நவம்பர், 2018

ஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே திரு. திருமாவளவனும் முன் வைக்கிறாரா?


LR Jagadheesan : இந்த பதிவை படிப்பதற்கு முன் திருமாவின் இந்த பேட்டியை அவசியம் பார்த்துவிடுங்கள்
இந்த பேட்டியில் அடுத்த நாடாளுமன்றத்தேர்தலில் மநகூ 2 வுக்கான விதைகளை திருமா வெகு நேர்த்தியாக தூவியிருக்கிறார். அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியும் பேரம் பேச முயலும். அதை திருமாவும் செய்வதை யாரும் குறை கூற முடியாது. ஆனால் அவர் இதில் சொல்லும் மூன்று செய்திகள் சர்ச்சைக்குரியவை.
சேலம் ராஜலட்சுமியின் கொடூர கொலையை திமுகவும் அதன் தலைவர் மு க ஸ்டாலினும் கண்டிக்கவில்லை என்கிறார். எனக்குத்தெரிந்த அளவில் இது தவறு. ஸ்டாலின் அதை கண்டித்ததை படித்ததாக நன்கு நினைவிருக்கிறது.
https://twitter.com/mkstalin/status/1057876500743999488?s=21
அப்படியிருக்க இதில் எதற்காக இவர் ஸ்டாலினையும் திமுகவையும் வாக்குவங்கிக்கு பயந்து சேலம் கொடூரத்தை கண்டிக்க பயந்ததாக சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அத்தோடு தர்மபுரி இளவரசன் காதலை ஒட்டி நடந்தேறிய தலித்துகளுக்கு எதிரான ஜாதிவெறியாட்டத்தின்போது அன்றைய திமுக தலைவர் கலைஞர் தைரியமாக திமுக சார்பில் உண்மை அறியும் குழுவை பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் கொடுத்த அறிக்கையை முரசொலியில் வெளியிட்டதை நினைவுகூர்கிறார். அதுபோல் ஸ்டாலினும் செயல்படவேண்டும் என்பது மறைமுக செய்தி/யோசனை/விமர்சனம்.
இந்த ஒப்பீடு தேவையற்றது என்பது மட்டுமல்ல, முறையற்றது. தர்மபுரி இளவரசன் விவகாரம் அப்பட்டமான ஜாதிவெறி அரசியல். முழுக்க முழுக்க தனிப்பட்ட மனிதர்களின் காதலில் ஒரு அரசியல்கட்சி ஜாதியக்கண்ணோட்டத்தோடு தலையிட்டு வன்முறை நிகழ்த்தி ஒரு உயிரை அநியாயமாக பலிவாங்கிய நிகழ்வு. சேலத்தில் நடந்திருப்பது தனிமனித குரூரம். கொடூரம் தான். ஆனால் அதில் ஜாதிக்கட்சிகள் தலையிட்டதாக இதுவரை தரவுகள் இல்லை.
இதில் கொலைகாரன் உடனடியாக கைதான நிலையில் வழக்கை விரைந்து நடத்தி அதிகபட்ச தண்டனை வாங்கித்தருவதும் பிள்ளையை அநியாயமாய் பறிகொடுத்த குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பும் நிவாரணமும் வழங்குவதும் மட்டுமே இனி செய்யக்கூடியவை. அதை இவரே முன்னின்று செய்கிறார்.
சரி 2012 ஆம் ஆண்டு தருமபுரி இளவரசன் விவகாரத்தில் நியாயமாக நடந்துகொண்ட திமுக தலைவர் கலைஞருடனா இவர் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி கண்டார்? இல்லையே. அந்த கலைஞர் ஆறாவது முறை தமிழ்நாட்டின் முதல்வராகாமல் தடுத்து தோற்கடிக்கும் பணியைத்தானே இவர் உக்கிரமாக செய்தார்? தர்மபுரி இளவரசன் விவகாரத்தில் வாக்குவங்கி அரசியல் நிர்பந்தங்களுக்கு பயப்படாமல் நின்ற கலைஞருக்கு தலித்துகளின் மேம்பாட்டுக்கு முதன்மையாய் பாடுபடும் திருமா காட்டிய மரியாதை என்ன? ஒன்றுமில்லையே? தர்மபுரி நிகழ்ந்தபோது முதல்வராய் கொலுவீற்றிருந்த ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக வெல்ல உதவியது தான் திருமா முன்னெடுக்க விரும்பும் தலித் மேம்பாடா?
அடிப்படையில் தனிமனித வக்கிரத்தால் நிகழ்ந்த கொடூரத்தையும் குற்றத்தையும் தர்மபுரி இளவரசன் விவகாரத்தைப்போன்ற அப்பட்டமான ஜாதிவெறி அரசியலோடு சமப்படுத்திப்பேசுவது அதிர்ச்சியாய் இருக்கிறது.
மேலும் சேலம் ராஜலட்சுமிக்காக இன்று தமிழக முதல்வரை சந்தித்த திருமா, அந்த சந்திப்பின்போது தர்மபுரி மாணவி சௌமியாவுக்கு நியாயம் கேட்டதாக செய்திகளில்லை. மாறாக தன் கட்சுயின் தலைவர் ரவிக்குமாருக்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டதாகத்தான் செய்திகள் கூறுகின்றன.
https://minnambalam.com/k/2018/11/13/18
இப்படியானவர்கள் மற்ற கட்சிகளை குறை சொல்ல முடியுமா?
அடுத்து, திண்ணியம் கொடூரத்தை செய்தவர்களை இன்னும் உயிரோடு விட்டுவைத்திருக்கிறீர்களா என்று பிரபாகரன் இவரிடம் கேட்டாராம். அது தான் தமிழ்நாட்டின் நிலை என்கிற அவமானம் தாங்காமல் இவரால் மூன்றுநாள் தூங்க முடியவில்லையாம்.
பிரபாகரனின் தற்காலிக தமிழீழத்தாயகத்தில் ஜாதி முற்றாக ஒழிக்கப்பட்டிருந்ததா? நினைத்தமாத்திரத்தில் எத்தனையோ பேரை, என்னென்ன காரணங்களுக்காகவோ கொன்றழித்த தமிழ்தேசிய சேகுவராவான பிரபாகரன் ஜாதி ஒழிப்புக்காக கொன்றவர்களின் பட்டியலை திருமா சேகரித்து வெளியிடலாம். மறைக்கப்பட்ட பிரபாகரனின் ஜாதி ஒழிப்பு பெருமைமிகு வரலாறு உலகத்துக்கு தெரிய வாய்ப்பாய் இருக்கும். ஜாதி ஒழிப்புக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் பிராபகரனை முன்னோடியாக கொள்ளும்படி கூறும் திருமா இதே பேட்டியின் துவக்கத்தில் ராஜீவ் கொலையில் தண்டிக்கப்பட்ட ஏழுபேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்கிறார். எதிரிகளை கொல்வதே சரியான தண்டனை என்கிற பிரபாகரனியத்தை ஏற்றுக்கொண்டால் இந்த ஏழுபேருக்கு எந்த அடிப்படையில் நாம் கருணை கோருவது? முள்ளிவாய்க்காலை பார்த்த பின்னும் தமிழ்நாட்டுத்தலைமைகளுக்கு பிரபாகரனின் வழியை பரிந்துரைக்க திருமாவால் மட்டுமே முடியும். வேறு யாராலும் அது சாத்தியமில்லை.
இறுதியாக சர்க்கார் படத்தில் ஏ ஆர் முருகதாஸ் சொன்ன இலவசங்களுக்கு எதிரான குரலில் ஒருபகுதியை திருமாவும் ஏற்கிறார் என்பது திருமாவே தங்களின் ஒரே லட்சியவாத தமிழக முதல்வர் வேட்பாளர் என்று களமாடிக்கொண்டிருக்கும் திராவிட திம்மிகளுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
குறிப்பாக எல்லா இலவசங்களும் நல்லதல்ல. சில இலவசங்கள் நல்லவை; சில இலவசங்கள் கெட்டவை என்று சொன்ன ஜெயலலிதா, பத்ரி சேஷாத்ரியின் கருத்தையே திருமாவும் முன் வைக்கிறார். பாவம் பத்ரி சேஷாத்ரியை திட்டித்தீர்த்த திராவிட திம்மிகளை நினைத்தால் தான் பாவமாய் இருக்கிறது. உங்கள் ஆதர்ஷநாயகனே அதைத்தான் சொல்கிறார். அதற்காக நீங்கள் திருமாவை முதல்வராக்கும் கொள்கையை விட்டுவிடாதீர்கள். தொடர்ந்து முன்னேறுங்கள்.

கருத்துகள் இல்லை: