வெள்ளி, 16 நவம்பர், 2018

மைத்திரி இறங்கி வருகிறார் ... ஆனால் ரணிலை பிரதமராக ஏற்க முடியாதாம் .. வேதாளம் மீண்டும் ,,,

இறங்கி வருகிறாரா இலங்கை அதிபர்?மின்னம்பலம்: இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காண அதிபர் மைத்திரி பால சிறிசேனா நேற்று மாலை (நவம்பர் 15) ஒரு சிறப்பு சந்திப்பை நடத்தினார். இந்த ஆலோசனையில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகிறன.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்களை அதாவது ராஜபக்‌ஷேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சிகளின் பிரமுகர்களை நேற்று மாலை முதல் இரவு வரை கூட்டாக சந்தித்தார் சிறிசேனா. சில மணி நேரங்கள் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருக்கிறார் இலங்கை அதிபர்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷேவுக்கு எதிராக புதிய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருமாறும், அதில் ஏற்கனவெ கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முதல் பகுதியை நீக்குமாறும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் முதல் பகுதியில், “ராஜபக்‌ஷேவை பிரதமராக நியமித்து அதிபர் வெளியிட்ட அரசிதழ் பிரகடனம் செல்லாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முக்கியக் கட்சித் தலைவர்களை சந்தித்த அதிபர் சிறிசேனா, “முதல் பகுதியை நீக்கிவிட்டு புதிய நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவாருங்கள். நான் நாடாளுமன்றத்தை மதிக்கிறேன். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள் பக்கமே நிற்பேன்” என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கும்போது, “சிறிசேனா எங்களிடம் உறுதிகளைத் தந்திருக்கிறார். ‘இனி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க மாட்டேன். சபையில் பெரும்பான்மைக்கு ஆட்சியதிகாரம் கிடைப்பதை தடுக்க மாட்டேன்’ என்று அவர் சொல்லியிருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் இந்தக் கூட்டத்தில் சிறிசேனா முக்கிய ஒரு நிபந்தனையை விதித்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது ரனில் விக்ரமசிங்கேவுக்கு பதில் வேறு ஒருவரை பிரதமராக முன்மொழியுங்கள் என்றும் அவர் பிரதமர் என்பதை தான் விரும்பவில்லை என்றும் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று மதியம் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் வரக் கூடும்.

கருத்துகள் இல்லை: