புதன், 14 நவம்பர், 2018

இலங்கை... இடைக்கால தடை உத்தரவும் அடுத்த பிரதமரும் .......

Ajeevan Veer : ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் பாராளுமன்றத்தைக்
கலைத்தமை அரசியல் யாப்புக்கு முரணானதென கருதி சுபீரீம் கோட் இடைக்கால உத்தரவை அறிவித்துள்ளது. அது டிசம்பர் 7ம் திகதிவரை இருக்கும். அதன்பின் அது தீர்ப்பாக மாறும்.
இந்த தீர்ப்புக்கு எதிராக எதிர் தரப்புகளும் - தீர்ப்புக்கு பக்க சார்பானவர்களும் சட்ட ரீதியான விவாதங்களை எதிர்வரும் 4ம் 5ம் 6ம் திகதிகளான 3 நாட்களில் நடத்தலாம். அதனடிப்படையில் இறுதி தீர்வு 7ம் திகதி கொடுக்கப்படும். அதன் பின் அதை பாராளுமன்றத்தால்தான் 2/3 பெரும்பான்மையோடு மாற்ற முடியுமே தவிர வேறெவராலும் மாற்றவே முடியாது.
சாதாரணமாக சுப்பரீம் கோட் இருவிதங்களில் செயல்படும். ஒன்று பெறும் வழக்கை கணக்கில் கொள்ளாது நிராகரித்துவிடும். இரண்டாவது அந்த வழக்கை விசாரித்து சரியான தீர்ப்பை வழங்கும்.
இந்த வழக்கில் உள்ள பிரச்சனையின் தன்மையை பொறுத்து தற்போதைய ஜனாதிபதி , சட்ட அடிப்படையில் பாராளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என சுப்ரீம் கோட், இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளது. அதை இனி ஜனாதிபதியால் மீற முடியாது.

இந்த வழக்கில் நீதிபதிகளாக இருந்த நலிண் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகிய மூவரும் ஒருமித்த கருத்தாக தமது நிலைப்பாட்டை எடுத்து, ஜனாதிபதி எடுத்த முடிவு தவறெனக் கண்டுள்ளனர்.
அநேகமாக மூவர் உள்ள பெஞ்சில் ஒருவராவது மாறிக் கருத்து சொல்வார்கள். ஆனால் அப்படி எதுவும் இங்கே நடக்காமல் மூவருமே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாதென்ற முடிவை ஏகமனதாக எடுத்துள்ளதைக் காண முடிகிறது.
இப்படியான தீர்பில் 7ம் திகதி மாற்றம் வருமா என்றால், இல்லை என்பதே மூத்தோரது கருத்தாக உள்ளது.
மூவரும் ஒருமித்த கருத்தாக எடுத்த தீர்பொன்றின் அடிப்படையிலேயே , இந்த இடைக்கால தடை முதற் கட்டமாக விதிக்கப்படுகிறது. அது இனி தீர்ப்பாகுமே தவிர, மாறப் போவதில்லை என்பதே உண்மை என பல வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவே வழமையாக இருந்துள்ளது.
இதேவேளையில் முன்னாள் பிரதமரை (ரணில்) பதவி நீக்கம் செய்து , இன்னொருவரை (மகிந்த) இந்நாள் பிரதமராக்கிய போது , அவர்கள் ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என்ற வாதத்தை முன் வைக்கிறார்கள். அதேபோல சுப்ரீம் கோட் பிரதமர் நியமனம் குறித்து எதுவித கருத்தையும் வைக்கவில்லை என்றும் வாதம் செய்கிறார்கள்.
ஒரு நாட்டின் பிரதமரை பெரும்பான்மையினூடாக தேர்வு செய்யும் இடம் பாராளுமன்றமாகும். பெரும்பான்மையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அது அதற்கான இடமல்ல.
அன்று பாராளுமன்றத்தில் பிரதமர் ஒருவரை பெரும்பான்மை மூலம் தேர்வு செய்ய வேண்டியிருந்தமையால், நீதிமன்றத்துக்கு போக வேண்டிய தேவையிருக்கவில்லை. ஆனால் பாராளுமன்றமே இல்லாமல் முடக்கப்பட்ட போது, நீதிமன்றத்தை தவிர வேறு எங்கும் போக அவர்களுக்கு வழி இல்லை. இதுவே நீதியை பெற்றுக் கொள்ளும் இறுதி இடம்.
அதனடிப்படையில் பாராளுமன்றத்தின் கதவுகளை திறக்க, நீதிமன்றம் மீண்டும் உத்தரவு வழங்கியுள்ளது.
இனி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறும் நபர் பிரதமராவார். அவரது தரப்பு பலம் பெற்று தனிக் கட்சியாகவோ அல்லது கூட்டு கட்சியாகவோ அமைச்சுகளை பெறுவார்கள்.
அந்நேரத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட தற்போதைய பிரதமர் (மகிந்த) மற்றும் அவரது சாகாக்களின் பதவிகள் இல்லாமல் போகும்.
ரணில் தரப்புக்கு ஆதரவு பலம் கிடைத்தால், இவர்கள் ஜனாதிபதி ஒருவரின் கீழ்தானே பதவிப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என சிலர் நினைக்கலாம். இல்லை! அவர்கள் சபாநாயகர் அல்லது ஒரு நீதியரசர் முன்னால் கூட பதவிப்பிரமாணம் செய்து கொள்ளலாம். அப்படி நடந்துள்ளது.
ஜனாதிபதி சிரிசேன அவர்கள் கூட 2015 தேர்தலுக்கு பின்னர் உயர் நீதிபதியின் முன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை. அவர் நீதிபதியாக இருந்த பவான் அவர்கள் முன்னிலையில்தான் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதன் பின்னரே அவர் உச்ச நீதிபதியாக வந்தார்.
- அஜீவன்

கருத்துகள் இல்லை: