சனி, 17 நவம்பர், 2018

மின்காந்த அலகு வருகிறது! .. கிலோ கல்லை நிறுத்துத் தரும் கல்லுக்கு ஓய்வு - மாறுகிறது எடை அளவை

BBC : மேற்பரப்பில் காணப்படும் தூய்மைக்கேடுகளால் நாம் எடை போட
வைத்திருக்கும் கிலோ மாதிரிகளின் துல்லியமான எடை அளவு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. ஒரு கிலோ அரிசி கேட்டால் கடைக்காரர் எடைக் கல்லால் அதை நிறுத்துத் தருவார். அந்த ஒரு கிலோ எடைக் கல் எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்று நிறுத்து அளவிடுவது யார் தெரியுமா? அதை செய்வதற்கு உள்ளூரில் அதிகாரிகள் இருக்கிறார்கள்தான். ஆனால், உலக அளவில் ஒரு கிலோ எடை என்பது எவ்வளவு என்பதை வரையறை செய்வதற்காக பயன்படுத்திவந்த ஒரு மூல எடைக் கல்லுக்கு ஓய்வு தர இருக்கிறார்கள்.
2019 முதல் அந்த மூல எடைக் கல்லை மாற்றி, நவீன கருவி மூலம் உலக அளவில் எடையை வரையறை செய்ய உள்ளார்கள்.

இந்த மாற்றங்கள் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், மிகவும் துல்லியமான எடை அளவுகள் தேவைப்படும் தொழிற்துறைகள் மற்றும் அறிவியல் துறைகளில் நடைமுறை தேவைகளுக்கு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிலோ என்பது சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் 7 அடிப்படை அலகுகளில் ஒன்று.
கிலோ, ஆம்பியர் (மின்சாரம்), கெல்வின் (வெப்பம்), மோல் (துகள்கள் எண்கள்) ஆகிய நான்கும் பாரிஸின் மேற்கில் வெர்செயில்ஸில் நடைபெறும் பொது மாநாட்டின்போது மேம்படுத்தப்படவுள்ளன.

அசல் கிலோகிராம்

ஒரு பொருளை வைத்துதான் இன்னும் சர்வதேச எடை அலகுகள் அமைப்பின் கடைசி தொகுதியான கிலோகிராம் வரையறுக்கப்படுகிறது. உலகிலுள்ள "கிலோ" எடைகள் எல்லாம் பிரான்சில் நடைபெற்ற அசல் எடை மாதிரிகளின் அடிப்படையை கொண்டவை. >அந்த மூல எடைக்கல்லான "கிராண்ட் கே" என்பது 90 சதவீத பிளாட்டினமும், 10 சதவீத இரிடியமும் கலந்து லண்டனில் செய்யப்பட்ட 4 சென்டிமீட்டர் உருளை. பாரிஸின் மேற்கே புறநகர்ப் பகுதியில் உள்ள செவெரஸில் கூடிய எடைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச துறையால் 1889 ஆம் ஆண்டு இது அடிப்படை அளவையாக உறுதி செய்யப்பட்டது.
பொருட்கள் காற்றினால் அணுக்களை இழக்கலாம் அல்லது காற்றிலுள்ள மூலக்கூறுகளை ஈர்த்துக்கொள்ளலாம் என்பதால், அதன் எடை அளவு கடந்த நூற்றாண்டில் பத்து மைக்ரோ கிராம்கள் குறைந்துள்ளன.
அப்படியானால், உலக அளவில் ஒரு கிலோவை அளவிட பயன்படுத்தப்படும் எடை மாதிரிகள் மற்றும் அளவிடும் கருவியின் அளவுகள் துல்லியமற்றவை என பொருள்படுகிறது. < கிலோவில் ஏற்படும் மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு தெரியாது. ஆனால், மிகவும் துல்லியமான அறிவியல் கணக்கீடுகளில் தெரியவரும். இத்தகைய சிறிய வேறுபாடுகள் அன்றாட வாழ்க்கையில் பெரிதாக தெரிய வராது. ஆனால், மிகவும் துல்லியமான அறிவியல் கணக்கீடுகளுக்கு இது பற்றிய பிரச்சனை உள்ளது.

புதிய கிலோ

இயந்திர மற்றும் மின்காந்த ஆற்றலை பயன்படுத்தி கிப்பிள் அல்லது வாட் சமநிலையை பயன்படுத்தி எதிர்காலத்தில் கிலோகிராம் அளவிடப்படும்.
பொருளை கொண்டு எடையை வரையறுக்காமல், மாறிலிகள் கொண்டு எடை அளவிடப்படும். இந்த வரையறையை மாற்ற முடியாது. சேதமடையாது. சாதாரண பொருட்களுக்கு ஏற்படும் அழிவுகள் இதில் ஏற்பட வாய்ப்பில்லை.

கருத்துகள் இல்லை: