திங்கள், 8 மே, 2017

12 அமைச்சர்களை காட்டி கொடுத்த சேகர் ரெட்டி.. பன்னீர்செல்வத்தின் கூட்டாளி!

சென்னை: போயஸுக்கு நெருக்கமான மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் கூட்டாளிகளாக செயல்பட்டதால் 12 அமைச்சர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பிளஸ் அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பியிருக்கிறது வருமான வரித்துறை. இதன்பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கார்டன் கஜானாவை கைப்பிடிக்குள் வைத்திருந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் பணம் பெற்ற வகையில் 12 அமைச்சர்கள் சிக்குகின்றனர் என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கார்டனுக்கு நெருக்கமானவர்களைக் கண்டறிந்து, ரெய்டு நடவடிக்கையில் இறங்கியது வருமான வரித்துறை. மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு டெல்லி உத்தரவுகளைப் பிறப்பித்தது.
சேகர் ரெட்டி வளைக்கப்பட்டதும், எடப்பாடி பழனிசாமி உள்பட சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டனர். "சேகர் ரெட்டியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் ராமமோகன ராவ். அதன்பிறகு, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள் அனைத்தும் ரெட்டிக்கே வந்து சேர்ந்தது. 500 கோடி ரூபாய்க்கு மேல் எந்த ஒப்பந்தம் வந்தாலும் ரெட்டிதான் தலையிடுவார்.
 'பணத்தை எந்தெந்த வகைகளில் முதலீடு செய்வது?' என்பதைப் பற்றி சசிகலாவுக்கு ஆலோசனை கூறுவதும் ரெட்டிதான். தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், எதிராளிக்கு என்ன வேண்டுமோ அதைத் துல்லியமாக செய்து கொடுத்துவிடுவார் ரெட்டி. அதில் 'சகல' விஷயங்களும் அடங்கும். பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு அடுத்தபடியாக ரெட்டியுடன் அதிக நெருக்கத்தில் இருந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அவருடைய நண்பர் பிரேம்குமாரும் ரெட்டியோடு சேர்ந்து கைது செய்யப்பட்டார். பணத்தை தங்கமாக மாற்றும் வித்தை தெரிந்தவர் பிரேம்குமார்.
இவர்களது கூட்டணியில் 12 அமைச்சர்கள் நிலங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள். வேறு சிலர் எஸ்டேட்டுகளை வாங்கிக் குவித்தார்கள். பொதுப்பணித்துறை ஒப்பந்தம் நடக்கும் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் என அனைவருக்கும் கமிஷன் தொகைகளைக் கொடுத்து வந்தார் ரெட்டி. அதை வரவு-செலவு பட்டியலில் குறித்து வைத்திருந்தார். அதை வைத்துத்தான் 300 கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். சேகர் ரெட்டி-ஆர்.கே.நகர் பண விநியோகம் ஆகிய இரண்டும் எடப்பாடி அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.  tamiloneindia

கருத்துகள் இல்லை: