வெள்ளி, 12 மே, 2017

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது... 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள். மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.புதுச்சேரியில் 143 பள்ளிகளில் 33 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் வெளியிடப்படுகிறது. அந்த முடிவை அனைவரும் www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் பார்க்கலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.அதேபோல், பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில், எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த எண்களுக்கு தேர்வு முடிவும், அவர்களின் மதிப்பெண் பட்டியலும் அனுப்பப்பட்டுவிடும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
>தேர்வு முடிவில் புதிய முறை</ பிளஸ்–2 தேர்வு முடிவுகளை வெளியிடும் முறையில் இந்த ஆண்டு முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது, இதுவரை மாணவர்களின் ‘‘ரேங்க்’’ பட்டியல் வெளியிடப்பட்டு வந்தது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், மாநில அளவில் முதல் இடம் பெற்றவர்கள், இரண்டாம் இடம் பெற்றவர்கள், மூன்றாம் இடம் பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும் பாட வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்றவர்களின் பெயர் விவரங்களும் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது.(சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதே முறை தான் பின்பற்றப்படுகிறது.  தினத்தந்தி

கருத்துகள் இல்லை: