வெள்ளி, 12 மே, 2017

நீதிபதி கர்ணன் மன்னிப்பு கோரிக்கை நிராகரிப்பு! நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்க தயார் என..

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கர்ணன் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கூறியதையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து கொல்கத்தா
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனையை திரும்பப் பெறக்கோரிய மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததால் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் தனது அதிகார எல்லையை மீறி தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தார். அதன் உச்ச கட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன்னை சாதி ரீதியாக அவமதித்துவிட்டனர் என்றும் அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை மீறிவிட்டனர் என்றும் கூறி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கெஹர் உள்பட 7 நீதீபதிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மே 8ஆம் தேதி அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து அவரை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த கர்ணன் மே 9ஆம் தேதி முதல் தலைமறைவானார். நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்த மேற்குவங்க காவல்துறை கர்ணனின் செல்போன் சிக்னலை வைத்து ஆந்திராவின் தடா வரை அவரைத் தேடி சென்றது. இருப்பினும், மேற்கு வங்க போலீஸார் அவரைக் கைது செய்ய முடியாமல் தமிழகம் திரும்பினர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விதித்த 6 மாத சிறை தண்டனை உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி மே 11ஆம் தேதி நீதிபதி கர்ணன் சார்பில் அவருடைய வழக்கறிஞர் மேத்யூ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று மே 12ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜரான நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் மேத்யூ, உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விதித்த 6 மாத சிறை தண்டனை உத்தரவை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இந்த மனுவை உச்ச நீதிமன்றம் பதிவு செய்ய மறுத்துவிட்டது. எந்த நேரமும் நான் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது என்று கூறினார். மேலும், நீதிமன்ற அவமதிப்பு சட்டம் 1971ன் படி தண்டனை வழங்கிய பிறகு நீதிமண்ற அவமதிப்பு செய்தவருக்கு மண்ணிப்பு அளிப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது என்றும் கூறினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர், வழக்கறிஞர் மேத்யூவின் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், இந்த வழக்கில் நீங்கள் காலை, மதியம், மாலை என்று வருகிறீர்கள். இது என்ன நடைமுறை என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்குக்காக 7 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு உள்ளது. நாங்கள் இதைப் பரிசீலித்து முடிவெடுப்போம் என்று கூறினார்  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: