சனி, 13 மே, 2017

அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்...

ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். சமீபத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிடத் தயாராக இருக்கிறோம். அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்’ என்று திரி கொளுத்திப் போட்டார். இதைத் தொடர்ந்து ஜெ. மரண விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி இருக்கிறது. உண்மையில் அப்படி வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கின்றனவா? 

சினிமா உலகிலும் அரசியல் வாழ்விலும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அவற்றில், அதிகம் பேசப்பட்ட படங்கள் ஏராளம். ஆனால், அப்போலோவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாள்களில் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படங்கள் பற்றிய மர்மம்தான் இப்போது வைரல்.
‘புகைப்படங்கள் எடுக்கப்பட்டன’ என்று சசிகலா தரப்பு உறுதியாகத் தெரிவிக்கவும் இல்லை; ‘அப்படி எதுவும் படங்கள் எடுக்கப்படவே இல்லை’ என்று ஓ.பி.எஸ் தரப்பு உறுதியாக மறுக்கவும் இல்லை. அதனால், இந்தக் கேள்விக்குள் அடங்கி இருக்கும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
புகைப்பட மர்மம்!

2016 செப்டம்பர் 21-ம் தேதி ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சியின் புகைப்படம் வெளியானது. அதன்பிறகு 2016 டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா மரணமடைந்து ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தபோது அவருடைய அடுத்த புகைப்படம் வெளியானது. இடைப்பட்ட 75 நாள்களில் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ‘அவர் நலமுடன் இருந்தார்’ என்று அப்போலோ மருத்துவமனை சொன்ன மருத்துவ அறிக்கைகள் மட்டுமே வெளியானது. ஒரு புகைப்படம்கூட வெளியாகவில்லை.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட படத்தை வெளியிட வேண்டும் என்று முதன்முதலில் சர்ச்சையைக் கிளப்பியவர் கருணாநிதி. அப்போது அவருடைய இந்தக் கோரிக்கை, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், அன்று அவர் வைத்த அந்தக் கோரிக்கையைத்தான் இன்று ஒட்டுமொத்த தமிழகமே வைக்கிறது.

கருணாநிதி அந்தக் கோரிக்கையை அன்று எழுப்பியதற்குக் காரணம், 2016 செப்டம்பர் 27-ம் தேதி வெளியான அரசு செய்திக்குறிப்புதான். அந்தச் செய்திக்குறிப்பில், ‘செப்டம்பர் 27 மாலை, 4.30 மணி முதல் 5.30 மணி வரை தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசுவாமி மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி, “ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் என்றால், அது பற்றிய புகைப்படத்தை வெளியிடலாமே” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதற்கு எந்த தரப்பில் இருந்தும் பதில் இல்லை.

அதன்பிறகு அப்போலோ மருத்துவமனையில் இருந்து தொடர்ச்சியாக, ‘முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளார்... உடல்நலம் தேறி வருகிறார்... திட உணவுகளை எடுத்துக்கொள்கிறார்’ என்று அறிக்கைகள் வெளியாகின. ஆனால், ஒரு புகைப்படம்கூட வெளியாகவில்லை. அரசாங்கமும், ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் கூடவே இருந்து கவனித்துக்கொண்ட சசிகலாவும் இந்த விவகாரத்தில் மௌனத்தையே பதிலாகச் சொல்வதால், எதிர்தரப்பு எழுப்பும் சர்ச்சைகளுக்கு அர்த்தம் கூடிக்கொண்டே போனது. ஜெயலலிதாவின் புகைப்படம் தொடர்பான மர்மம் தொடர்வதற்கு இவையெல்லாம் காரணமாக அமைந்தன.
பொங்கி எழுந்த சசிகலா குடும்பம்!

ஒருகட்டத்தில் அ.தி.மு.க-வில் இருந்து தனி அணியாக செயல்பட ஆரம்பித்த ஓ.பி.எஸ் தரப்பு, ஜெயலலிதாவின் இறந்த உடல் போன்ற மாதிரியை வைத்து, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக் கேட்கும் நிலைக்குப் போனார்கள். அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. சசிகலாவின் கணவர் நடராசனோ, “ஜெயலலிதாவை நாங்கள் கொலை செய்துவிட்டோம் என்று எழுதவும் பேசவும் செய்கிறீர்களே... உங்களுக்கு எல்லாம் மனச்சாட்சியே இல்லையா?” என்று பத்திரிகையாளர்களிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதோடு, ‘‘அந்த அம்மா எப்படி வாழ்ந்த நடிகை என்பதும், அரசியலுக்கு வந்தபிறகு  தன் இமேஜுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். அவருடைய மருத்துவமனை புகைப்படங்கள் வெளிவருவதை அவர் விரும்பவில்லை. அந்த ஒரு காரணத்தால்தான் அவருடைய புகைப்படங்களை நாங்கள் வெளியிடாமல் இருக்கிறோம்’’ என்று விளக்கமும் கொடுத்தார்.

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த், ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினார். அதில், ‘‘கொலைப் பழி சுமத்தப்பட்டும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடவில்லை. பச்சை கவுனில் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்ற படங்களை எதிரிகள் பார்க்கக்கூடாது என்பதால்தான் நாங்கள் வெளியிடவில்லை. சிங்கத்தை நாங்கள் சிங்கமாகவே ராஜமரியாதையுடன் அனுப்பிவைத்தோம். ஆனால், ஓ.பி.எஸ் ஜெயலலிதாவைப் பிணப்பெட்டியில் வைத்து ஓட்டுக் கேட்கிறார். உண்மை வலிமையானது. ஒருநாள் ஜெயலலிதா, சசிகலா இருவரும் மருத்துவமனையில் பேசிய வீடியோவை வெளியிட்டால்..? பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன்... இவர்களை என்ன செய்யலாம்” என்று கொதிப்போடு கேட்டு இருந்தார். அவரைத் தொடர்புகொண்டு, ‘‘இப்போது அதை நீங்கள் வெளியிடலாமே?” என்று கேட்டோம். “என்னுடைய அந்தப் பதிவு இன்னும் என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில்தான் இருக்கிறது. நான் எதையும் நீக்கவில்லை. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்போது எந்தக் கருத்தைக் கூறினாலும், அது திட்டமிட்டு வேறு மாதிரியாகப் பரப்பப்படுகிறது. அதனால், புகைப்படங்களும் வீடியோவும் இருக்கின்றனவா, இல்லையா என்று என்னால் எந்தக் கருத்தையும் இப்போது வெளிப்படையாகச் சொல்லமுடியாது. அதே நேரம் நான் பதிவிட்ட கருத்திலும் எந்த மாற்றமும் இல்லை. இப்போது நடக்கும் அரசியல் விவகாரங்களை வேடிக்கை பார்க்கப்போகிறோம். அ.தி.மு.க-வின் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி சொன்ன கருத்து, அவருடைய கருத்து. அதற்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று நிதானமாகப் பதில் அளித்தார்.

ஆனால், ‘படம் இருக்கிறதா... இல்லையா?’ என்பதைச் சொல்ல மறுத்துவிட்டார்.

புகைப்படங்கள் யாரிடம் இருக்கின்றன? 

‘‘ஜெயலலிதாவின் சிகிச்சை விவகாரங்களைக் கவனித்துக்கொண்ட அ.தி.மு.க அம்மா அணியில் இருக்கும் சர்ச்சை நாயகனான அமைச்சர் ஒருவரிடம் ஜெயலலிதாவின் படம் உள்ளது. அதுபோல ஜெயலலிதாவின் மருத்துவக் கோப்புகளுடன் இணைக்கப்பட்டு சில புகைப்படங்கள் உள்ளன. அதோடு, ‘அந்த நேரத்தில் அரசுத்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த நான்கு அதிகாரிகளிடம் ஜெயலலிதாவின் புகைப்படம் உள்ளது’’ என்று சசிகலா தரப்பில் சிலர் சொல்கிறார்கள். ‘‘ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஷீலாபிரியா, வெங்கடரமணன் ஆகியோர்தான் அந்த அதிகாரிகள்’’ என்கின்றனர்.

‘‘ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திடீரென ஒருநாள், இந்த நான்கு அதிகாரிகளையும் உள்ளே அழைத்துள்ளார். ஷீலாபிரியா தவிர மற்ற மூன்று அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்களிடம் பேசிய ஜெயலலிதா, ‘வேர் இஸ் ஷீலாபிரியா’ என்று கேட்டுள்ளார். அவர் கேட்டபோதே ஷீலாபிரியாவும் உள்ளே சென்றுவிட்டார். அன்று அவர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்த ஜெயலலிதாவோடு அவர்கள் நான்கு பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆனால், தற்போது அவர்களும் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று தெரியவில்லை’’ என்கிறார்கள் அவர்கள்.

இந்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, ‘‘ஜெயலலிதாவின் புகைப்படங்கள் தகுந்த நேரத்தில் வெளியிடப்படும்’’ என்று சொன்ன புகழேந்தியிடம் பேசினோம். அவர், “அம்மா கடந்த ஒன்றரை வருடங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டுத்தான் இருந்தார். அவருடைய உடல் கூன் போட்டு வளைந்துவிட்டது. ஒரு அப்பாயின்மென்ட் முடித்துவிட்டு, அடுத்த நபரைப் பார்ப்பதற்கு இடையில் அவர் சோர்ந்து உட்கார்ந்துவிடுவார். அந்த சோர்வு நீங்கியதும்தான் அடுத்தவரைப் பார்ப்பார். அதோடு அவரால் சரியாக நடக்க முடியவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளைப் பிடித்துக் கொண்டுதான் நடந்தார். இந்த நிலையில் இருந்த அவர் மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அப்போது அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல்கள் எல்லாம் பன்னீருக்கும், அவருடன் இருப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். தன் இறுதி நாட்களில் சின்னம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அம்மா, ‘தன் புகைப்படம் இந்தக் கோலத்தில் எதிலும் வெளிவந்துவிடக்கூடாது’ என்று தெரிவித்தார். அந்த ஒரு காரணத்துக்காகத்தான் பொதுவெளியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை. நீதிமன்றத்திலும், அரசு மட்டத்திலும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதை சென்னை உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. அதையெல்லாம் மறைத்து  ஓ.பி.எஸ் அணியினர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். அதனால், தகுந்த நேரத்தில் அந்தப் படத்தை சின்னம்மாவிடம் கலந்தாலோசித்து நாங்கள் வெளியிடுவோம்” என்றார்.

வீடியோ இருக்கிறதா?

‘‘வீடியோவும் இருக்கிறது. ஜெயலலிதா சிகிச்சையில் முன்னேற்றம் கண்ட நேரத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், நர்ஸ் ஒருவரிடம் சசிகலாவை அழைக்கும்படி ஜெயலலிதா சொல்கிறார். அதையடுத்து ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்கின்றனர். அந்த வீடியோ, இளவரசியின் மகன் விவேக் கையில் இருக்கிறது’’ என்றும் சொல்கிறார்கள்.

இதை மறுக்கும் ஓ.பி.எஸ் அணியினர், “ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எந்தப் படமும் எடுக்கப்படவில்லை. படம் எடுத்தாக வரும் செய்திகளில் உண்மையில்லை. ஒருவேளை சசிகலா தரப்பு ஜெயலலிதாவைப் படம் எடுத்திருந்தால் அதுவே மிகப் பெரிய கிரிமினல் குற்றம். தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே அவர்கள் படம் எடுத்ததாகத்தான் கருதமுடியும். மருத்துவமனையில் நோயாளிகளின் அனுமதி இல்லாமல் படம் எடுக்கக் கூடாது. அம்மாவை இவர்கள் படம் எடுத்திருந்தால், சசிகலா குடும்பம்தான் முதல் குற்றவாளியாகச் சிக்குவார்கள்” என்கிறார் ஓ.பி.எஸ் அணியில் உள்ளவரும்,  வழக்கறிஞருமான மனோஜ் பாண்டியன்.



- ஜோ.ஸ்டாலின், அ.சையது அபுதாஹிர் விகடன்

கருத்துகள் இல்லை: