வெள்ளி, 12 மே, 2017

திருமாவளவன் : உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்கிறதா?

சுப்ரீம் கோர்ட்டு சட்டப்படி நடக்கிறதா? : திருமாவளவன் கேள்வி!நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இன்று மே 12ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வில் ரேங்க் பட்டியல் முறை அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இதனால், மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களில் கடந்த 3 ஆண்டுகளாகத் துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இந்தப் பதவிகளை நிரப்புவதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது? கடந்த சிலநாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த நீட் தேர்வில் மாணவ-மாணவிகளிடம் மனித உரிமைகளை மீறும் வகையில் நடந்த பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. தேசிய அளவில் தேர்வு நடக்கும்போது ஒரே மாதிரியான கேள்விகள்தான் இடம்பெற வேண்டும். குஜராத்தில் எளிமையாகவும், மேற்கு வங்காளம், கேரளாவில் கடினமாகவும் கேள்விகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
நீதிபதி கர்ணன் வி‌வகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு, அரசியல் அமைப்பு சட்டத்தின்படிதான் நடந்து கொள்கிறதா? நீதிபதி கர்ணனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டு மறு பரீசிலனை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: