திங்கள், 8 மே, 2017

கஸ்தூரி ராஜா: சூப்பர் ஸ்டார் படமும் 3 நாள்தான். பாகுபலி கூடப் 10 நாள் தான். அதனால் புதிய படங்களுக்கு அரங்குகள் கிடைக்கிறது!

முற்றிலும் புதுமுகங்களால் உருவாகியுள்ள திரைப்படம் 'துணிகரம்'. இயக்குநர் பாலசுதன் இயக்கித் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை டினோ. ஷான் கோகுல் மற்றும் தனுஜ் மேனன் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். படத்தொகுப்பு பிரகாஷ், ஒளிப்பதிவு மெய் எனப் புதுமுகங்களால் உருவாக்கப்பட்ட இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.எளிய முறையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, பேரரசு, ஆர்.கே.வித்யாதரன், நடிகர்கள் போஸ் வெங்கட் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இயக்குநர் பேரரசு பேசும் போது ‘வருடக் கணக்கில் உதவி இயக்குநராக இருந்து ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நல்ல விதமாகப் பயன்படுத்த வேண்டும். நல்ல கதையைத் தேர்வு செய்து அதைத் தயாரிப்பாளரை வாழ வைக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சிலர் சொதப்பலாக படம் எடுத்து அந்தத் தயாரிப்பாளரை அடுத்த படம் தயாரிக்க முடியாமல் செய்வதுடன் அந்த இயக்குநரின் வாழ்க்கையும் அத்துடன் காலியாகிவிடுகிறது.

‘துணிகரம் பட இயக்குநர் பார்ப்பதற்குக் கட்டுமஸ்தாக இருந்தாலும் மற்றொரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்திருகிறார். நல்லதொரு திரில்லர் படமாக இது இருக்கும். மேலும் ‘துருவங்கள் 16, மாநகரம்’ திரைப்படங்கள் போல் ‘துணிகரமும்’ அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்றார்.
இவ்விழாவில் கஸ்தூரிராஜா பேசியதாவது, ''துணிகரம்’ என்ற தலைப்பு வைத்ததிலேயே படக் குழுவினரின் துணிச்சல் தெரிகிறது. இந்தச் சினிமாவிற்கு வந்ததில் இருந்து இரண்டுமுறை நான் கோமாளியாகக் கண்ணுக்குத் தெரிந்துள்ளேன். இப்போதும் அப்படித்தான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.
முதல் தடவையா என்னோட முதல் படத்தை இயக்கத் தயாரிப்பாளர் தேடி அலைந்த போது, இரண்டாவது முறை ‘துள்ளுவதோ இளமை’ படத்தை இயக்கியபோது. அப்போது தனுஷுக்கு நாயகன் லுக் இல்லை. அதனால் படம் எடுக்கப் பணம் கொடுத்த பைனான்சியர், ‘அப்பனும் மகனும் கேமராவை வச்சு விளையாடிட்டு இருக்காங்க’ன்னு விமர்சனம் செய்தார். இப்படிப் பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்துத்தான் இங்கே வந்துள்ளோம். எனக்கு ராஜ்கிரண் என்ற ஒரு கடவுள் கிடைத்தார். அதனால்தான் இந்த உயரத்துக்கு வர முடிந்தது.

இன்றைக்குக் கொஞ்சம் திரைப்படம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒரு இசை வெளியீட்டு விழாவுக்கு விநியோகஸ்தர் வருவதே ஆரோக்கியமான விஷயம் தான். சின்னப் படம் வந்தாலும் மூன்று நாள் தான். சூப்பர் ஸ்டார் படமும் மூன்று நாள் தான். இன்றைக்கு உலகம் முழுக்கப் பேசப்படுகிற பாகுபலி கூடப் பத்து நாட்கள் தான். அதனால் தற்போதைக்கு நிறையப் படங்கள் வெளிவருகிற சூழல் உள்ளது" என்று பேசினார் கஸ்தூரிராஜா.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: