வியாழன், 11 மே, 2017

BBC : நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ! அவரது கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு விதித்துள்ள ஆறு மாத கால சிறை தண்டனையை எதிர்த்து அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தில் மக்கள் கருப்பு கொடி ஏற்றியுள்ளனர்.
தன் மீது உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத சிறை தண்டனை உத்தரவை திரும்பப் பெற கோரிஉச்சநீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை நீதிபதி கர்ணனின் வழக்கறிஞர் நெடும்பரா, இம்மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை தாக்கல் செய்த கர்ணனின் வழக்கறிஞரிடம் கர்ணன் தற்போது எங்குள்ளார் என்று தலைமை நீதிபதி வினவினார்.
இதற்கு பதிலளித்த கர்ணனின் வழக்கறிஞர், நீதிபதி கர்ணன் எங்கும் தப்பி ஓடவில்லை என்றும் அவர் சென்னையில்தான் உள்ளார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள சிறை தண்டனை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தன் மனுவில் அவர் கோரியுள்ளார். உச்ச நீதிமன்றம் முன்னதாக, உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பிற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனைக் கைதுசெய்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த காவலர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


செவ்வாய்க்கிழமையன்று சென்னை வந்த கர்ணன், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டி அளித்தார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக, அவர் கொடுத்த பேட்டிகள், அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், புதன்கிழமையன்று காலை கர்ணனைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்காக கொல்கத்தாவைச் சேர்ந்த டிஜிபி சுரஜித் கர் புர்கயஸ்தா தலைமையில் காவல் துறையினர் சென்னைக்கு வந்தனர். பிறகு மாநகரக் காவல்துறை ஆணையரைச் சந்தித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் மாநில அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த கர்ணன், காலையில் புறப்பட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள காளகஸ்தி கோயிலுக்கு சென்றதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து, பிற்பகலில் கொல்கத்தாவைச் சேர்ந்த காவல்துறையினர், தமிழக காவல்துறையினர் சாலை மூலமாக காளகஸ்திக்குப் புறப்பட்டனர். ஆந்திர மாநில எல்லையில் ஆந்திர காவல்துறையினரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இருந்தபோதும் கர்ணன் இருக்கும் இடம் தெரியாததால், கொல்கத்தா காவல்துறையினர் சென்னை திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: