வெள்ளி, 12 மே, 2017

அன்பழகன் கைதும் ஆபாச பத்திரிக்கையாளர்கள் அரசியலும்



2245_112.savukkuonline.com  : ஒரு வாரத்துக்கு முன்பாக, உள்ளாட்சி அலசல் வார இதழ் மற்றும் மக்கள் செய்தி மையத்தின் ஆசிரியர் அன்பழகனை கோவை மாவட்டம் ஆலாந்துரை காவல் நிலையத்தினர் காலை 8.30 மணிக்கு மிகவும் ரகசியமாக கைது செய்து, அவர் வீட்டுக்கு கூட தகவல் சொல்லாமல் காரில் வைத்து கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.    கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பார்த்திபன் என்ற பொறியாளரை 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    காவல் நிலையத்தில் வைக்கப்படாமல் வேறு ஒரு தனி இடத்தில் வைக்கப்பட்டு, இரவு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   சிறையில் அடைக்கப்பட்ட மறுநாள், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொறியாளர் பார்த்திபனை சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

25 ஏப்ரல் 2017 அன்று அன்பழகன், தனது மக்கள் செய்தி மையத்தின் சார்பில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி, அந்தத் துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் மாறுதல்களுக்கு ஒவ்வொரு நிகழ்விலும் எவ்வளவு லஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை பட்டியலிட்டு ஒரு விரிவான புகாரை சிபிஐக்கு அனுப்புகிறார்.   அந்தப் புகாரை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்கிறார்.  அப்படி பதிவு செய்யப்பட்ட மறுநாள் காலை 8.30 மணிக்கு காவல்துறையால் கைது செய்யப்படுகிறார்.
தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில், இருவருக்கிடையில் நடக்கும் சண்டை அல்லது மோதலின் விளைவாக புகார் காவல்துறைக்கு சென்று, அது கொலை மிரட்டல் வழக்காக பதிவு செய்யப்படுவது வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறை.   ஆனால் இது போன்ற புகார்களில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதே கிடையாது.   சமாதானமாக செல்லுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்புவார்கள். ஏனென்றால் காவல்துறையினருக்கு இருக்கும் பணிச்சுமை அப்படி.    உள்ளுர் புகார்களுக்கே அந்த கதிதான்.   அதுவே எதிரி வெளியூரில் இருந்தாரென்றால் தொடவே மாட்டார்கள்.   விரட்டி விடுவார்கள்.  இதுதான் காவல்நிலையங்களில் நிகழும் யதார்த்தம்.
ஆனால் அன்பழகன் கைது விவகாரத்தில் காவல்துறை வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது.   பொறியாளர் பார்த்திபன் அளித்த புகாரை இரவு பத்து மணிக்கு பதிவு செய்த காவல்துறை, இரவு பதினோரு மணிக்கு உள்ளாட்சி அலசல் பத்திரிக்கையை கைப்பற்றுகிறது.   இரவு பதினொரு மணிக்கு நடவடிக்கையை முடித்து அன்று இரவே சென்னைக்கு கிளம்பிய கோவை காவல்துறையினர் காலை 8.30 மணிக்கு, வீட்டை விட்டு வெளியே கடைக்கு வந்திருந்த அன்பழகனை அவசர அவசரமாக கைது செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல், கோவை அழைத்துச் சென்றுள்ளனர்.   இப்படி காவல்துறையினர் சாதாரண ஒரு மிரட்டல் வழக்கில் நடவடிக்கை எடுக்கிறார்கள், அதுவும் வழக்கத்துக்கு முரணாக எடுக்கிறார்கள் என்றால் இதற்கு பலமான பின்னணி இல்லாமல் நடக்காது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆளுமைகளாக இருந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்றவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அவர்களுக்கு, அவர்கள் அமைச்சரவையில் இருந்தவர்கள் மீது கட்டுப்பாடு இருந்தது.    தவறான ஒரு செயலை செய்தால், முதல்வரின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும், பதவியை இழக்க நேரிடும் என்ற சூழல் இருந்தது.  ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தற்போது, ஒவ்வொரு அமைச்சரும் எவ்விதமான கட்டுப்பாடும் இல்லாமல், அவர்கள் வைத்ததே சட்டம் என்று நடந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.    எந்த அமைச்சரும் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதிலை என்ற ஒரு மோசமான நிர்வாகச் சூழல் ஏற்பட்டுள்ளது.
பத்திரிக்கைகளில் வரும் செய்திகளால் அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் பாதிக்கப்படலாம்.  பாதிக்கப்படக் கூடும்.   அப்படி பாதிக்கப்படுகையில் அவர்கள் பாதிக்கப்பட்ட பத்திரிக்கையின் மீது அவதூறு வழக்கு தொடுக்க சட்டத்தில் இடமுள்ளது.   அப்படி அவதூறு வழக்குகளும் பல்வேறு பத்திரிக்கைகள் மீது தொடுக்கப்பட்டுள்ளன.  2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா கூட பத்திரிக்கையாளர்கள் மீது அவதூறு வழக்குகளைத்தான் போட்டார்.    ஆனால், தற்போது முதல் முறையாக, முதல்வரின் அனுமதி இல்லாமலேயே தன்னைப் பற்றி செய்தி எழுதிய பத்திரிக்கையாளர் மீது கொலை மிரட்டல் மற்றும் சாதிப் பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு போடும் வழக்கத்தை புதிதாக தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் எஸ்பி.வேலுமணி.
இந்த முதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தாம்பரம் காவல் நிலையத்தில் இதே போல பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.   அந்த வழக்கில் கடந்த வாரம்  கோவையிலிருந்து நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.   இதனிடையே இதே போல தமிழகம் முழுக்க 15க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.    அத்தனை வழக்குகளிலும் ஒரே புகார்.   “எனக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடு.  இல்லையென்றால் உன்னைப் பற்றி என் பத்திரிக்கையில் அவதூறாக செய்தி வெளியிட்டு உன்னை தொலைத்து விடுவேன்.  உன்னை இல்லாமல் செய்து விடுவேன்.”  இந்த அனைத்து வழக்குகளிலும் புகார்தாரர்கள் அனைவரும் உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊர்களில் பணியாற்றும் ஊழியர்கள்.  அனைவரும் எஸ்பி.வேலுமணியின் துறையின் கீழ் பணியாற்றுபவர்கள்.
ஒரே நேரத்தில் தமிழகம் உள்ளாட்சித் துறையின் ஊழியர்கள் அனைவரையும் பணம் கேட்டு ஒரே ஒரு பத்திரிக்கையாளர் தன்னந்தனியாக மிரட்டி, ஒரே நேரத்தில் கொலை மிரட்டல் விடுத்து, அவர்கள் அத்தனை பேரும் அருகாமையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சென்று புகாரளித்து, நமது அற்புதமான காவல்துறை கருணையோடு அனைத்து புகார்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த வரலாறை எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?  ஆனால் தற்போது இது நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை, தாம்பரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அன்பழகனுக்கு கடந்த செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.    இதையடுத்து வெள்ளியன்று, அன்பழகனை சென்னை புழல் சிறையிலிருந்து கோவை சிறைக்கு மாற்றியது சிறை நிர்வாகம்.   சென்னையில் இருந்தால் அன்பழகனின் குடும்பத்தினர் அவரை சிறையில் சென்று சந்திப்பார்களே … அதையும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இதற்கு இல்லை.   தற்போது வந்த அண்மை செய்தியாக அன்பழகனை காவல்துறை கஸ்டடியில் ஐந்து நாட்கள் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் காவல்துறை மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
ஒரு பத்திரிக்கையார் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.   சாதிப் பெயரை சொல்லி திட்டினார் என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.   இவை அனைத்தும் பொய்யான வழக்குகள் என்பதும் வெளிப்படையாக அனைவருக்குமே தெரிகிறது.    அப்படி இருந்தும் பத்திரிக்கை உலகிலோ பொது வெளியிலோ பெரிய அளவில் எந்த விதமான பெரிய தாக்கமும் இல்லையே என்ற கேள்விகள் எழும்.   இதற்கான பதிலை சற்று விளக்கமாகத்தான் பார்க்க வேண்டும்.
பத்திரிக்கை உலகத்துக்கு வருவதற்கு முன்பாக உங்கள் அனைவரையும் போலத்தான் நானும் பத்திரிக்கை உலகத்தை நினைத்துக் கொண்டிருந்தேன்.   பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்பிக் கொண்டிருந்தேன்.   பத்திரிக்கையாளர்கள் அனைவரும் உத்தமர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
பத்திரிக்கையாளர்களிடம் பழகிய பிறகுதான் அவர்களிடையேயும் பயிர்களும் இருக்கின்றன,  களைகளும் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டேன்.  பத்திரிக்கையாளர்கள் இடையே பழகிப் பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். இவர்கள் அரசியல்வாதிகளை விஞ்சக் கூடிய அளவுக்கு அரசியல் செய்யக் கூடியவர்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒரு அஜென்டா இருக்கிறது.   அந்த அஜென்டாவின் அடிப்படையில்தான் பணியாற்றுவார்கள். எந்தவொரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களைப் போலவே, தங்கள் பணிகளை பாதுகாப்பதற்காக, தங்கள் முதலாளிகளின் கால்களை நக்க துளியும் தயக்கம் காட்ட மாட்டார்கள். முதலாளிகளின் நலன் காக்க மட்டுமல்ல.  அவர்களின் நலன்களை காப்பாற்றுவதற்காக எந்த இழிவையும் செய்ய தயங்க மாட்டார்கள்.  இதில் விதிவிலக்குகள் இருக்கின்றன.   அவர்கள் மிகவும் குறைவு.  அரிது.
தற்போது பத்திரிக்கையாளர் அன்பழகனின் கைதை வரவேற்று கொண்டாடி எக்காளமிட்டுக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர்கள் இருவர்.   ஒருவர் சென்னை யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் சங்கத்தின் நிரந்தர தலைவர் எம்யுஜே மோகன்.  மற்றொருவர் நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷ்.  இவர்களுக்கு கைது செய்யப்பட்ட அன்பழகனின் மீது என்ன கோபம் ?   கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடைபெறவில்லை.   இந்த பத்திரிக்கையாளர் மன்றத்தில் அன்பழகன் நிர்வாகியாக இருக்கிறார்.   தேர்தல் நடத்த விடாமல் அன்பழகன் தடுக்கிறார். அவருக்கு உறுதுணையாக தற்போது பத்திரிக்கையாளர் மன்றத்தில் தற்போது உள்ள நிர்வாகிகள் துணை புரிகின்றனர்.  பத்திரிக்கையாளர் மன்றத்தை கைப்பற்ற அன்பழகன் தடையாக இருக்கிறாரே என்பதே இவர்களது முக்கியமான ஆதங்கம்.
மோகன்
மோகன்
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக தேர்தல் நடத்தாமல் தாமதப்படுத்தியதற்கு தற்போத உள்ள நிர்வாகிகள் ஒரு வகையில் காரணம் என்பதை மறுக்க முடியாது.  ஆனால் ஒரு வழியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தேர்தல் நடத்த தேதிகளெல்லாம் குறிக்கப்பட்ட பிறகு, அந்த தேர்தலுக்கு தடை பெற்றவர்களும் இந்த குழுவினரே.  தேர்தலை நடத்தக் கூடாது என்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபர் செல்வராஜ் தொடர்ந்த வழக்கு காரணமாக, தேர்தல் இந்நாள் வரை நடைபெறவில்லை.
பிரகாஷ்
பிரகாஷ்
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை இவர்கள் இவ்வாறு கைப்பற்றத் துடிப்பதற்கான காரணம் என்ன ?   பத்திரிக்கையாளர்களுக்கு சேவை செய்து, அவர்கள் வாழ்வை முன்னேற்றுவதற்காகவா ? பத்திரிக்கை சுதந்திரத்தை காப்பாற்றுவற்காகவா ?  ஊடகத் துறையை முன்னேற்றி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காகவா ?   நிச்சயமாக இல்லை.   சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் நிர்வாகியாக ஆகி விட்டால், எந்த நேரம் வேண்டுமானாலும், எந்த அமைச்சரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்.    முதல்வரை சந்திக்கலாம்.  பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகி என்ற கோதாவில் எந்த அதிகாரியை வேண்டுமானாலும் மிரட்டலாம்.   இந்த பதவியை வைத்து, தாங்கள் பணியாற்றும் நிர்வாகத்தையே மிரட்டலாம்.  அரசின் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு என்று சிறப்பு கோட்டாவில் வீட்டு மனைகளை பெறலாம்.   அடுக்குமாடி வீடுகளை பெறலாம். இப்படிப்பட்ட சுயநல நோக்கங்களைத் தவிர, இவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது.     பத்திரிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் இவர்கள் தற்போது இருக்கும் அமைப்பிலேயே சேவை செய்ய வேண்டியதுதானே… ? இவர்களை யாராவது     தடுத்தார்களா ?
மற்ற துறைகளில் இருப்பதை விட மிக மிக அதிகமாக பத்திரிக்கையாளர்களுக்கென்று சங்கங்கள் இருக்கின்றன.   வாரத்துக்கு ஒரு சங்கத்தை துவக்குவார்கள். அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை நிர்வாகிகளாக போட்டுக் கொள்வார்கள்.  பத்திரிக்கையாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு என்று பிரகடனப்படுத்திக் கொள்வார்கள்.
அன்பழகனை அவதூறு செய்வதில் முன்னணியில் நிற்பவர்கள் எம்யூஜே மோகன் மற்றும் நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷ்.  கடந்த 8 ஆண்டுகளாகவே சென்னை நகரிலேயே பத்திரிக்கை யாளர்கள் மீது பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.  அந்த தாக்குதல் சம்பவங்களை கண்டித்து சென்னையில் பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.   இது போல நடந்த எந்தவொரு போராட்டத்திலும் மோகனோ, பிரகாஷோ கலந்து கொண்டதில்லை.   ஆனால் இந்த அத்தனை போராட்டங்களிலும் அன்பழகன் உள்ளிட்ட சென்னை பத்திரிக்கையாளர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.   பத்திரிக்கையாளர்களின் உரிமைக்காக நேரம் காலம் பார்க்காமல் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதை நானே நேரில் பார்த்துள்ளேன்.
மெட்றாஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் என்ற ஒரு பத்திரிக்கையாளர் அமைப்பில் மோகன் பல வருடங்களாக நிர்வாகியாக உள்ளார்.   இது வரை, பத்திரிக்கையாளர்களுக்காக வீதிகளில் நடைபெற்ற போராட்டங்களிலோ, ஆணையர் அலுவலகத்தில் நடந்த போராட்டங்களிலோ ஒன்றே ஒன்றில் கூட இவர் கலந்து கொண்டது கிடையாது.    தமிழ் முரசு நாளிதழில் பணியாற்றிக் கொண்டு, கேடி சகோதரர்களுக்கு சாமரம் வீசிக் கொண்டு இருப்பதுதான் இவரது முழு நேரத் தொழில்.
பத்திரிக்கையாளர் அன்பழகன் மீது இவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு அவர் ப்ளாக்மெயில் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்பதே.   இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை யாரும் யார் மீதும் சுமத்த முடியும்.  இதே மோகன், ஒரு தீபாவளியன்று, மைலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் பட்டாசு வாங்கித் தருமாறு நின்றார் என்ற கதை, பத்திரிக்கையாளர்கள் இடையே மிக பிரசித்தம்.   இது போல ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. நக்கீரன் பிரகாஷ் மீதான குற்றச்சாட்டுகளை மட்டுமே பத்து கடடுரைகள் எழுதலாம். எந்தப் பத்திரிக்கையாளர் குறித்தும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எளிதில் சுமத்தி விட முடியும்.
அன்பழகன் தனது பத்திரிகையில் எழுதியதை நியாயப்படுத்த முடியாது.   வரம்பு மீறி பல செய்திகளை எழுதியிருக்கிறார்.  இந்த செய்திகளால் பாதிக்கப்பட்ட அமைச்சர் வேலுமணி நினைத்தால் தமிழகமெங்கும் அன்பழகன் மீது அவதூறு வழக்குகளை தொடுத்திருக்க முடியும். சட்டத்தில் அதற்கு வழிமுறை இருக்கிறது.  ஆனால் கொலை மிரட்டல் விடுத்தார், சாதிப் பெயரைச் சொல்லி மிரட்டினார் என்று தமிழகம் முழுக்க உள்ளாட்சித் துறை ஊழியர்களை வைத்து, வழக்குகளை பதிவு செய்ய வைத்து, அவற்றில் ஒவ்வொரு வழக்கிலும் அவரை கைது செய்வது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் கிடையாதா ?  இது போன்ற நடவடிக்கைகளை அனைத்து பத்திரிக்கையாளர்களும் கண்டிக்க வேண்டுமா வேண்டாமா ?
பொய் செய்திகளை வெளியிட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட வேண்டும் என்றால், நக்கீரனின் ஒவ்வொரு இதழுக்கும் நூறு வழக்குகளை பதிவு செய்ய முடியும்.   ஜெயலலிதாவின் கால் ரேகையை வைத்து பயோ மெட்ரிக் பூட்டு போட்டு, போயஸ் தோட்டத்தில் பாதாள அறையில் பல கோடி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது.   ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் கால்களை வைத்து, அந்த அறை திறக்கப்பட்டது என்று செய்தி வெளியிடுகிறார்கள்.   ஜெயலலிதா நான் மாட்டுக்கறி சாப்பிடும் மாமி என்று கூறியதாக கவர் ஸ்டோரி வெளியிடுகிறார்கள்.    இவையெல்லாம் பொய் செய்திகள் கிடையாதா ?
மாட்டுக்கறி-சாப்பிடும்-மாமி-நான்-2
இந்த அநியாய கைதை கண்டிக்க வேண்டிய பத்திரிக்கையாளர்களில் பெரும்பாலானோர் அவரவருக்கான காரணங்களை வைத்து அமைதியாக இருக்கின்றனர். மோகன் மற்றும் பிரகாஷ், அன்பழகனை கைது செய்த காவல் துறையினருக்கு நன்றி என்று வெளிப்படையாக அறிவிக்கின்றனர்.    அன்பழகன் கைதுக்கு நன்றி தெரிவித்து, தமிழகம் முழுக்க ஒன்றரை லட்சம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக நக்கீரன் பிரகாஷ் பேட்டியளிக்கிறார்.   ஒன்றரை லட்சம் போஸ்டர்களை அச்சிடுவதற்கும், அவற்றை தமிழகம் முழுக்க ஒட்டுவதற்கும் எத்தனை லட்சம் பணம் செலவாகி இருக்கும் ?   இதற்கான தொகையை பிரகாஷோ, மோகனோ கொடுத்திருக்க முடியாது. தாம்பரம் நகராட்சி ஆணையர் மதிவாணனிடம் பிச்சையெடுத்து பெற்ற பணத்திலேயே இதை செய்திருக்கிறார்கள். சக பத்திரிக்கையாளன் கைது செய்யப்பட்டதை கொண்டாடுவதற்காக ஒரு ஊழல் பெருச்சாளியிடம் பிச்சையெடுத்த பணத்தில் போஸ்டர் அடித்து கொண்டாடி, அதை பெருமையோடு பேட்டி கொடுப்பதை விட இழிசெயல் என்ன இருக்க முடியும் ?  இப்படிப்பட்ட இழி செயலையா அன்பழகன் செய்து விட்டார் ?
72815192-3837-4f11-8860-51479b56b9bb
455eecd2-4b8c-4f28-8bb2-3f12eead2323
இப்படிப்பட்டவர்கள்தான், சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தை கைப்பற்றி, பத்திரிக்கையாளர்கள் வாழ்வை மேம்படுத்தப் போகிறோம் என்று முழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஒரு பத்திரிக்கையாளன், அவன் மோசமான பத்திரிக்கையாளனாகவே இருக்கட்டும்.   அவனை ஒரு மிக மிக மோசமான ஊழல் பெருச்சாளியான அமைச்சர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, வழக்கு மேல் வழக்காக போட்டு, மீண்டும் மீண்டும் கைது செய்து கொண்டிருக்கிறான் என்றால், இது அதை கண்டிப்பது சரியான செயலா ?  அல்லது தங்கள் சுயநல பிரச்சினைக்காக அந்த கைதை வரவேற்று போஸ்டர் அடிப்பது சரியான செயலா ? ஒரு பத்திரிக்கையாளனுக்கு எதிராக ஊழல் பெருச்சாளியான ஒரு அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் நாளை எப்படி பத்திரிக்கையாளர்களின் நலனை பேணுவார்கள் ?
அன்பழகனின் கைது நடவடிக்கையை வரவேற்று போஸ்டர் அடிக்க இவர்கள் எஸ்பி.வேலுமணியிடம் பொறுக்கித் தின்றிருக்கிறார்கள் என்று எழும்பும் குற்றச்சாட்டை இவர்கள் எப்படி மறுக்கப் போகிறார்கள் ?
இணையதளங்களும், சமூக ஊடகங்களும் வந்த பின்னால் பத்திரிக்கையாளர்களுக்கு முன்பிருந்த மதிப்பும் மரியாதையும் முன்பு போல் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விட்டார்கள்.  இது போல ஆபாச அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்களே என்றால் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய் விடும். இதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

கருத்துகள் இல்லை: