வியாழன், 11 மே, 2017

தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம்!

சென்னை உட்பட தமிழகத்தில் செயல்பட்டு வரும் நான்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்-28 ஆம் தேதி எம்.சி.ஐ. துணைத் தலைவர் டாக்டர் சி.வி. பிர்மானந்தம் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக் குழுவின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் எம்.சி.ஐ. துணைத் தலைவர் பேசியதாவது: உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் செயல்படும் நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தரமில்லாத ஒரு மருத்துவ கல்லூரிக்கு எப்படி அனுமதி அளிக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு போதுமான நோயாளிகள் இல்லை என்றால் மாணவர்களுக்கு கற்று கொடுக்க முடியாது. மருத்துவக் கல்வி தரங்களில் சமரசத்துக்கு இடமில்லை. எனவே நாடு முழுவதும் பல மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதன்படி, தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சியிலுள்ள சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ஆகிய மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்க தடை விதிக்க அரசுக்கு மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
மருத்துவக் கவுன்சில் நிர்வாகக்குழு நடத்திய ஆய்வில் மேற்கண்ட கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள், போலி ஆவணங்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட வசதிகள் இல்லாதது தெரியவந்துள்ளது. எனவே அக்கல்லூரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த நடவடிக்கையால் நடப்புக் கல்வியாண்டில் தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: