
கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மேக்ரன் பெறுகிறார்.
தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மேக்ரன், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு, முடிவுகள் வெளிவரத் துவங்கிய நிலையில்,மேக்ரனின் ஆதரவாளர்கள், வெற்றியைக் கொண்டாட, மத்திய பாரிஸ் நகரில் கூடியுள்ளனர்.
வெற்றி உறுதியானதும், தனது எதிர் வேட்பாளர் லெ பென்னைத் தொடர்பு கொண்டு மரியாதை நிமித்தமாக மேக்ரன் பேசியதாக அவரது பிரசார குழுவினர் தெரிவித்தனர்.
தேர்தல் முடிவு குறித்து பேசிய லெ பென், தனக்கு வாக்களித்த 11 மில்லியன் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த முடிவுகள், தேசப்பற்றாளர்களுக்கும், உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாகவும், புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மேக்ரனின் வெற்றி, ஃபிரான்ஸ் மக்கள் ஒருமைப்பாட்டை விரும்புவதை வெளிப்படுத்துவதாக தற்போதைய அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் தெரிவித்தார்.
இம்மானுவல் மேக்ரனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உள்பட பல்வேறு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
மேக்ரன் யார்?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஃபிரான்ஸ் மக்களுக்கு, இவர் யார் என்றே தெரியாத நிலையில், மேக்ரனின் வெற்றி பிரமிக்கத்தக்கது என்று பாரிஸில் உள்ள பிபிசி செய்தியாளர் ஹக் ஸ்கோஃபீல்டு கூறுகிரார்.
தாராளமய கொள்கை கொண்ட, மத்தியவாத மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவான, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவானவர் மேக்ரன். இவரது எதிர் வேட்பாளர் லெ பென், ஐரோப்பிய ஒன்ரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிபர் ஃபிரான்சிஸ் ஒல்லாந்தின் அமைச்சரவையிலிருந்து வெளியேறிய மேக்ரன், இடதுசாரி மற்றும் வலதுசாரி அமைப்புக்களுக்கு மாறாக, இடைப்பட்ட நிலைப்பாட்டைக் கொண்ட ஓர் இயக்கத்தைத் துவக்கினார்.
முக்கிய சவால்?
இவரது இயக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களே இல்லை.
அதே நேரத்தில், அதிபர் தேர்தலை அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் ஜூன் 11 முதல் 18 வரை நடைபெற உள்ளன.
என் மார்சே என்ற அவரது இயக்கம், அரசியல் கட்சியாக தேர்தலில் போட்டியிடும் என்றாலும், முழுமையான ஆட்சிக்கு கூட்டணி ஆட்சியை அவர் ஏற்படுத்தியாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக