வியாழன், 11 டிசம்பர், 2025

பாடகி சின்மயி - டாக்டர் பால் அடித்த கூத்து . முழுநேர சங்கிகள் Chinmayi with Dr. Pal

Sivabalan Elangovan  :  டாக்டர் பால் - இவர் மீது எனக்கு தொடக்கத்தில் இருந்தேன் நம்பிக்கை இருந்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிசேரியன்  தொடர்பாக அறிவியலுக்கு புறம்பாக ஏதோ பேசியதை கேட்டேன். ஒரு சோறு பதமென கடந்துவிட்டேன். 
சமூக வலைதளங்களின் கவனஈர்ப்புக்காக எவ்வளவோ போலி அறிவியல் தகவல்கள் வருகிறதல்லவா? அதில் இவரும் ஒருவர் என கடந்து விட்டேன். 
மருத்துவராக இருப்பதனாலேயே போலி தகவல்கள் சொல்ல மாட்டார்கள் என நம்ப முடியாதல்லவா?
ஆனால் சின்மயி அவர்களுடைய நேர்காணல் ஓன்றில் இருவரும் திட்டமிட்டு ஒரு தகவலை எப்படி Misleading செய்கிறார்கள் என பார்த்த போது அதை expose செய்ய வேண்டும் என நினைத்தேன். நேரமின்மையால் அதையும் கடந்து விட்டேன்.
ஆனால் இப்போது  சமூக வலைதளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இவர் expose ஆகும் சமயத்தில் இதையும் சொல்லிவிடலாம் என நினைக்கிறேன்.
இந்த நேர்காணலில் இவர் சொல்கிறார், 
தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமாம். 
அதுவும் இங்கிருக்கும் அரசியல்வாதிகளிடம் இதை இவர் கூறிய போது அவர்கள் இதை சாதனையாக நினைத்து கூறுகிறார்கள் என சொல்லிவிட்டு ஏளனமாக சிரிக்கிறார். 

மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்ற தமிழ்நாட்டின் திட்டம் எத்தனை மதிப்பு வாய்ந்தது என அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கும் இவருக்கு எப்படி தெரியும்?

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி வந்த பிறகு அதனால் எத்தனாயிரம் எளிய மக்கள் பயன் பெறுகிறார்கள் என இவருக்கு தெரியுமா?
ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை புற நோயாளிகள் வருகிறார்கள் என பார்த்திருக்கிறாரா? 
அதே போல சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூர், தருமபுரி போன்ற மாவட்டங்களில் எல்லாம் இந்த அரசு மருதுவக்கல்லூரிகளின் காரணமாக அங்கிருக்கும் மக்களின் மருத்துவ வசதிகள் மேம்பட்டிருப்பதை இவர் அறிவாரா?

“தமிழ் நாட்டில் மருத்துவர்கள் நோயாளிகள் விகிதம் அதிகரித்திருக்கிறது அதை குறைக்க வேண்டும்” என்கிறார். Public Health இன் அடிப்படை தெரிந்தவர்கள் நிச்சயம் இப்படி கூற மாட்டார்கள். 
உலக சுகாதார நிறுவனம் இந்த விகிதத்தை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல்களை கூறுகிறது இவர் குறைக்க வேண்டும் என்று என்கிறார். 
ஏன் குறைக்க வேண்டுமாம்? ஏனென்றால் மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையாம். வேலைவாய்ப்பு இல்லையென்றால் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமா அல்லது மருத்துவர்களை குறைக்க வேண்டுமா?
சரி மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. அவர்களுக்கான தேவையுமா இல்லை? 
மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தமாக மருத்துவ கல்லூரிகளை குறைப்பதுதான் தீர்வா?
இல்லை. 

நியாயமாக மருத்துவத்துறையில் பல விஷயங்கள் சீர் செய்ய வேண்டும். 
உதாரணமாக கடந்த பத்தாண்டுகளில் மருத்துவத்துறையில் நடந்த சில முக்கியமான மாற்றங்களை பார்ப்போம்.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் திறப்பது தொடர்பாக சில கடுமையான விதிமுறைகளை கொண்டிருந்ததால் இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்பட்டது 
தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது . கடந்த பத்து வருடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு விட்டன. 
வருடக்கணக்காக செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்னமும் 100-150 MBBS இடங்கள் தான் இருக்கின்றன, ஆனால் தொடங்கிய சில வருடங்களில் 250 MBBS இடங்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி கிடைத்து விடுகின்றன.

ஒரு பேராசிரியருக்கு இரண்டு முதுநிலை மாணவர்கள் மட்டுமே சேர முடியும் என்று இருந்த விதியை மாற்றி ஒரு பேராசிரியர் இருந்தால் ஐந்து மாணவர்கள் வரை அனுமதிக்கலாம் என்ற தேசிய மருத்துவ ஆணையம்  கொண்டு வந்த திருத்தத்தால் மருத்துவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைய தொடங்கியது.
மருத்துவர்களுக்கான நிரந்த பணியை உருவாக்காமல் “District Residency Program” என்ற திட்டத்தை கொண்டு வந்து முதுநிலை மருத்துவ மாணவர்களை மாவட்ட மருத்துவமனைகளில் கட்டாயமாக பணியமர்த்தி அவர்களை கொண்டு அந்த மருத்துவமனையை நடத்தி கொள்ளும் புதிய கொள்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் செயல்படுத்தியது.

மருத்துவர்களுக்கான  நிரந்தர வேலைவாய்ப்பை ஒழிக்கும் நோக்கில் National Health Mission வழியாக மருத்துவர்களை குறைந்த ஊதியத்தில் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கும் நடைமுறைகளை கொண்டு வந்தது. 
குறைந்த ஊதியம், Unregulated Working Hours, Working Hierarchy, பொது சுகாதாரத்தில் கார்ப்பரேட் தலையிடுவதை அனுமதிக்கும் Public Private Partnership, சிறு நகரங்களில் கூட பெருகி வரும் கார்ப்பரேட் மருத்துவமனைகள் அதனால் பாதிக்கப்படும் சிறு மருத்துவமனைகள் என மருத்துவத்துறையில் சீர்திருத்த ஏராளமான மாற்றங்கள் இருக்கின்றன. பொது மருத்துவத்துறையின் சரிவு மருத்துவர்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது. 

இதை பற்றியெல்லாம் எந்த அறிவும் இல்லாமல் 
பொத்தாம் பொதுவாக மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தான் மருத்துவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அடித்துவிடுவதன் நோக்கமென்ன? அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டு மருத்துவத்துறையை ஏளனமாக சொல்வதற்கான காரணம் என்ன? 
பெருகி வரும் தனியார் மருத்துவல்லூரிகளை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சொல்வதை உள் நோக்கம் இல்லை என எடுத்துக்கொள்ள முடியாது.

அதுமட்டுமல்ல எளிய மக்களின் வாழ்வாதாரம் சற்று மேம்படும்போது அவர்களின் உணவு பழக்கமும் மாறுகிறது. அப்படி அவர்கள் சாப்பிடும்போது அவர்களுக்கு குற்றவுணர்வை தூண்டும் வகையில் தினமும் ஏதாவது புதுக்கதைகளை சொல்லி பயமுறுத்துவது எல்லாம் மேட்டிமைத்தனமே. 
ஏதோ வயிற்றில் நீச்சல் குளம் கட்டி நல்ல பேக்டீரியாக்களை வளர்க்க வேண்டும் என்ற அளவுக்கு இவர் ஜல்லியடிப்பது எல்லாம் மிகைப்படுத்தலே.
அதுவும் ஸ்ட்ரெஸ், டோப்பமின், நல்ல பாக்டீரியா என மூன்றும் கலந்து சமீபத்தில் இவர் விட கதையெல்லாம் அறிவீனத்தின் உச்சம். அதை பொய் என்று தெரிந்தும் இவர் சொல்லியிருந்தால் அது ஏமாற்று. உண்மையிலேயே அவர் நம்பி சொல்லியிருந்தால் இவரின் மருத்துவ அறிவு பரிதாபம்.
அதுவும் ஒரு வீடியோவில் நாம் பயன்படுத்தும் தாவர எண்ணைகளை விட நெய் நல்லது என இவர் சொல்லியிருந்ததை பார்த்தேன்.
முடியல…!
இனியாவது மக்கள் இவரை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை: