தினமலர் : புதுடில்லி : ஆசிட் வீச்சில் ஈடுபடுபவர்கள் மீது, சாதாரண பிரிவுகளின் கீழ் அல்லாமல், இனி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது குறித்து ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த, சாகின் மாலிக் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு :
ஒருவர் மீது ஆசிட் வீசுவது மற்றும் ஆசிட்டை குடிக்க வைப்பது அவரது உயிருக்கே தீங்கு விளைவிக்கும் செயல். இதனை போலீசார் சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கூடாது.
கொலை முயற்சி வழக்காகவே பதிவு செய்யப்பட வேண்டும். சாதாரண பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தால், அது வழக்கின் தீவிரத்தை குறைப்பதாக இருக்கும்.
ஆசிட் வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போலீசார் மற்றும் கீழ் கோர்ட்டுகள் இத்தகைய குற்றங்களை மிகக் கடுமையாக கருதி, சட்டப்படி தக்க பிரிவுகளை சேர்க்க வேண்டும். ஆசிட் வீச்சு என்பது ஒருவரின் வாழ்க்கையையே அழிக்கும் குற்றம். எனவே குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடி, அவர்கள் மீது கடுமையான சட்டம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
இதுவரை ஆசிட் வீசுபவர்கள் மீது 'சாதாரண காயம் விளைவித்தல்' பிரிவின் கீழ் வழக்கு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முக்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் வழங்கி உள்ளது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக