திங்கள், 19 ஜூலை, 2010

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 3 ஆண்டு சிறை

ராயக்கோட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை அளித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்பளித்தது.ராயக்கோட்டை நெருப்புக்கோட்டை நெல்லூரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி எல்லப்பா (27). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாஞ்சாலை (19) என்பவருக்கும் கடந்த 2006ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் மனைவியுடன் எல்லப்பா திருப்பூரில் வசித்து வந்தார்.பாஞ்சாலை ஏழு மாத கர்பிணியானதை தொடர்ந்து பிரசவத்துக்கு நெல்லூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துள்ளார். பாஞ்சாலைக்கு கெலமங்கலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
தமிழக அரசு வழங்கும் மகப்பேறு உதவித்தொகையாக பாஞ்சாலைக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த எல்லப்பா, "6,000 ரூபாயை தன்னிடம் கொடுக்கும்படி' பாஞ்சாலையை வற்புறுத்தியுள்ளார்.பிரசவ செலவுக்கு பயன்படுத்தியதாக பாஞ்சாலை கூறினார். இதனால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த பாஞ்சாலை கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து விசாரித்த டி.எஸ்.பி., சின்னதம்பி எல்லப்பாவை கைது செய்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி பெருமாள், மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த எல்லப்பாவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார்.

கருத்துகள் இல்லை: