வியாழன், 22 ஜூலை, 2010

இராணுவத்தினரிடம் 12 ஆயிரம்(புலிகள்) பேர் சரணடைந்தனர்

புனர்வாழ்வு முகாம்களிலுள்ள 7980 பேரும் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளனர் அமைச்சர் டியூ குணசேகர கூறுகிறார்
புனர்வாழ்வு முகாமில் தற்போது சுமார் 7980 பேர் உள்ளதாகவும் அவர்கள் யாவரும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்ததுடன், இவர்களில் 364 பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், விடுதலைப்புலிகளுடன் எந்த வகையில் தொடர்புபட்டிருந்தனர் என்ற ரீதியில் அவர்களை தரம்பிரித்து வைத்திருக்கும் அதேநேரம், எவரும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வைக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலை மறுசீரமைப்புத் தொடர்பில் பொரளையிலுள்ள புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

இராணுவத்தினரிடம் 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர்.இவர்களில் 2 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதில் 3038 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.பெண்களில் 600 பேருக்கு தொழிற்பயிற்சி அளித்து ஆடை உற்பத்தி நிறுவனங்களில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் சரணடைந்த 364 பேர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

இவர்களுக்கு தேவையான பாட போதனைகளை ஆசிரியர் மூலம் வழங்கி வருகின்றோம். இப் பரீட்சையின் பின்னர் பெற்றோரிடம் கையளிக்கவுள்ளோம்.தற்போது 7980 பேரே புனர்வாழ்வு முகாமில் உள்ளனர்.சரணடைந்தவர்களில் 1300 பேர் கடும் யுத்தப்பயிற்சி பெற்றவர்களும் அடங்குகின்றனர்.இவர்கள் விடுதலைப்புலிகளுடன் எந்தளவு தொடர்புகளை வைத்திருந்ததை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.5 வயது முதல் 25 வயது வரை இவர்களுடன் இருந்த சிலரும் உள்ளனர்.

நாம் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மற்றும் வவுனியா பகுதிகளில் நடத்திய நடமாடும் சேவையில் பங்குபற்றியவர்கள் பெண்களாவர்.தமது உறவினர்கள் குறித்து பேசினர்.புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர்.அவர்களை பெற்றோர் சென்று பார்ப்பதற்கு பஸ்சேவையும் இடம்பெறுகின்றது.

தமது பிள்ளைகளை புலிகள் தமது அமைப்பில் வலுக்கட்டாயமாக இணைப்பதனை தடுப்பதற்கு சிறு வயதில் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.இதனால் 22 வயதில் பிள்ளையுடன் கணவனை இழந்த, காணாமல் போன பெண்களும் உள்ளனர்.இதனால் சமூகத்துக்கு பாரிய பிரச்சினை ஏற்படுத்தும் என்ற நிலையில் யுத்தத்தால் சொத்துக்களை, உறவுகளை இழந்தவர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.நாட்டை ஐக்கியப்படுத்த வேண்டுமாயின் மக்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.

அந்த வகையில் நாம் மேற்கொண்ட நடமாடும் சேவையில் ஒவ்வொருவருக்கும் நேரம் ஒதுக்கி நான் உட்பட அதிகாரிகள் பேசி அவர்களின் பிரச்சினை குறித்து கேட்டறிந்தோம்.

கருத்துகள் இல்லை: