புதன், 21 ஜூலை, 2010

சிறுவன் சூட்கேஸுக்குள் பிணமாக, பழிக்கு பழி வாங்கிய காதலி்

சிறுவன் ஆதித்யா கொடூர கொலை:   பூவரசியின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

சென்னை விருகம்பாக்கத்தைச்சேர்ந்த சிறுவன் ஆதித்யா நாகப்பட்டினத்தில் சூட்கேஸுக்குள் பிணமாக கிடந்தது தமிழகமெங்கும்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலன் ஏமாற்றியதால் அவனின் மகனை பழிக்கு பழி வாங்கிய காதலியின் செயல்தான் சிறுவன் ஆதித்யா கொலைக்கு
காரணம் என்று தெரியவந்திருப்பதால் மக்களை அதிர்ச்சியடைச் செய்திருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஒரு சூட்கேஸ் கிடந்தது.

வெகு நேரத்திற்கு பிறகு சூட்கேஸை சுற்றி  ஈ மொய்க்க ஆரம்பித்ததும் அங்கிருந்த கடைக்காரர்கள் நாகப்பட்டிணம்
வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சூட்கேஸ் ஜிப்பை திறக்காமல், பிளேடால் சூட்கேஸை கிழித்து, முழுவதும் விரித்து பார்க்கையில், 4 வயது மதிக்க தக்க சிறுவன்
ஒருவன் கொல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுவன் கழுத்து நெறித்து கொல்லப்பட்டு, முகம் பாலீத்தின் பைகளால் இருக்கக் கட்டி மூடப்பட்டிருந்தது. 
இதையடுத்து போலீசார் நேற்று இது தொடர்பாக  அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தனர்.

இந்த விளம்பரத்தைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயக்குமார் மனைவி ஆனந்தி
நாகப்பட்டினம் விரைந்தார்.

 சிறுவனின் சடலத்தைப் பார்த்து அதிச்சி அடைந்த அவர் அந்த சடலம் தனது மகன் ஆதித்யாதான் என்பதை உறுதி செய்தார்.  இன்று நாகப்பட்டினம் நகராட்சி முன்னிலையில் ஆதித்யாவின் உடல் புதைக்கப்பட்டது.  தாயார் ஆனந்தி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.   தந்தை ஜெயக்குமார் மட்டும் அப்போது இல்லை.

இதற்கிடையே சென்னையில் சிறுவன் ஆதித்யா காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார்
செய்யப்பட்டிருந்ததால்  போலீசார் ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் விசாரித்து வந்தனர்.   விசாரணையில் ஆதித்யா கொலையில் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரிடம் நடத்திய விசாரணையில் பூவரசி என்பவர் கைது செய்யப்பட்டார்.    போலீசாரின் விசாரணையில் சிறுவன்
ஆதித்யாவை கொன்றது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து பூவரசி அளித்த பரபரப்பு வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய வைத்தது. 

பூவரசி அளித்த அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்:

’’என் பெயர் பூவரசி;  நான்  எம்.எஸ்.சி. படித்துள்ளேன்.   வேலூர் மாவட்டம் ஆரணிதான் என் சொந்த ஊராகும்.  படிப்பை
முடித்த பிறகு வேலை தேடி சென்னை வந்தேன். டாடா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. கடன் கேட்டு வருபவர்களை விசாரித்து, கடன் வழங்கும் பணியை நான் செய்து வந்தேன்.

அந்த நிறுவனத்தில் எனக்கும் உயர் அதிகாரியாக ஜெயக்குமார் இருந்தார். கேரளாவை சேர்ந்த ஜெயக்குமாரும்  அப்போதுதான் படித்து முடித்ததும், அந்த வேலைக்கு வந்திருந்தார்.   அங்கே எனக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது.

அவர் என்னையே திருமணம் செய்து கொள்வததாக கூறினார். இதை நம்பி என்னையே அவரிடம் கொடுத்தேன். பல ஊர்களுக்கு
சென்று நாங்கள் ஒன்றாக தங்கியுள்ளோம்.

இதனால்  நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர்
எப்படியோ என்னை ஏமாற்றி என் கர்ப்பத்தை கலைக்க வைத்து விட்டார்.

சில வருடங்கள் கழித்து ஆனந்தி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார்.   இது எனக்கு முதல் அதிர்ச்சியை கொடுத்தது.   அடுத்து அவர் அந்த டாடா நிறுவனத்தில் இருந்து நின்றுவிட்டார்.  இது எனக்கு இரண்டாவது அதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் எங்களுக்கு இடைவெளி விழுந்துவிட்டது.

 இந்த நிலையில் எனக்கும் டாடா நிறுவனத்தில் இருந்த வேலை போய்விட்டது.   வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் நான் ஆரணிக்கு சென்றுவிட்டேன்.

 சில மாதங்களுக்கு முன்பு எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அடிக்கடி செல்போனில்
பேசிக்கொள்வோம்.  அப்போது  அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருப்பது தெரியவந்தது.

அவர் வேலை பார்க்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வேலை வாங்கி
தருவதாக கூறினார். அதனால் அவரை நம்பி நான் சென்னை வந்தேன். மீண்டும் அவர் என்னுடன் நெருங்கிப் பழகினார்.என்னை அவர்  இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். அதை நான் முழுமையாக நம்பினேன்.

சமீபத்தில் ஒரு நாள் சீக்கிரம் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர், எனக்கு குழந்தைகள்
இருக்கிறார்களே உன்னை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி திருமணத்திற்கு மறுத்தார்.


இரண்டாவது முறையும் என்னை ஏமாற்றியதால் எனக்கு அந்த ஏமாற்றம் வெறியாக மாறியது. பல தடவை கெஞ்சிக்கேட்டும் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்தார். இது எனக்கு வெறி அதிகரித்தது.

ஜெயக்குமார் தன் மகன் ஆதித்யா மீது அதிக பாசம் வைத்திருந்தார். அவனுக்காக அவர் எதுவும் செய்வார் என்று எனக்குத்
தெரியும். ஆதித்யா உயிருடன் இருக்கும் வரை அவர் நம்மை திரும்பிப் பார்க்கமாட்டார் என்று நினைத்தேன்.

அதனால் ஆதித்யாவை கொலை செய்து விட முடிவு செய்தேன். ஆதித்யா இறந்துவிட்டால் நம்மை திருமணம் செய்வார் என்று
நினைத்தேன். இதனால் ஆதித்யாவை பார்க்கும்போதெல்லாம் என் மனதுக்குள் கொலைவெறி ஏற்பட்டது.
 
இதனால் ஆதித்யாவை கொன்றுவிட திட்டமிட்டேன்.  இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அன்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால்  ஜெயக்குமாருடன் ஆதித்யா தி.நகரில் உள்ள அலுவலகத்துக்கு வந்திருந்தான். இது பற்றி அறிந்ததும் நான் தி.நகர் சென்றேன்.

ஜெயக்குமாரிடம், நான் தங்கியுள்ள விடுதியில் ஆண்டு விழா நடக்கிறது. சிறுவர்களுக்கு நிறைய பொம்மைகள் கொடுப்பார்கள்
எல்லாரும் தங்கள் உறவினர் குழந்தைகளை அழைத்து வந்துள்ளனர். நான் ஆதித்யாவை அழைத்து செல்கிறேன். சாயங்காலம் கொண்டு வந்துவிட்டு விடுகிறேன் என்றேன்.

ஜெயக்குமாரும் என்னை நம்பி ஆதித்யாவை என்னுடன் அனுப்பி வைத்தார். நான் தங்கி இருந்த விடுதிக்கு அவனை அழைத்து
வந்தேன். கயிற்றால் அவன் கழுத்தை இறுக்கி கொன்றேன். சுவரில் அவன் தலையை மோதினேன். பிறகு அவன் முகத்தை பாலிதீன் வைத்து இறுக்க கட்டினேன்.

முன்பு திட்டமிருந்தபடி ஆதித்யா பிணத்தை சூட்கேசுக்குள் திணித்து அடைத்தேன்.

 பாரிமுனை சென்று தெருவில் மயங்கி விழுந்து விட்டதாவும், ஆதித்யாவை காணவில்லை என்றும் நாடகம் ஆடினேன்.
ஜெயக்குமார் வந்ததும் நானும் அவரும் எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தோம். 17-ம் தேதி இரவு
11.30 மணி வரை போலீசார் என்னை விசாரித்தனர். மறுநாள் காலை வரும்படி என்னை அனுப்பி விட்டனர்.

விடுதிக்கு நள்ளிரவு திரும்பிய நான் ஆதித்யா உடல் இருந்த சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வெளியில்
வந்தேன். அங்கிருந்து புதுச்சேரிக்கு பஸ்சில் எடுத்துச் சென்றேன்.

புதுச்சேரி பஸ் நிலையத்தில் நிறைய போலீசார் நின்று இருந்தனர். எனவே பயந்துபோய் புதுச்சேரியில் இருந்து வேறொரு
பஸ்சில் நாகை சென்றேன். 8 மணி நேரமாக பிணத்துடன் பஸ்சில் பயணம் செய்து நாகை சென்றேன்.

அங்கு கழிப்பிடம் அருகில் சூட்கேசை வைத்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன். 17-ந்தேதி நள்ளிரவு புறப்பட்ட நான் 18
-ந்தேதி அதிகாலை நாகையில் ஆதித்யா உடலை வைத்துவிட்டு உடனே அடுத்த பஸ் பிடித்து சென்னை வந்து விட்டேன். அந்த சமயத்தில் என் செல்போனை சுவிட்ஆப் செய்து வைத்திருந்தேன்.

18-ம் தேதி காலை போலீசார் என் செல்போனை தொடர்பு கொண்டார்களாம். என் போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் என்
மீது அவர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது.

தப்பிவிடலாம் என்றே நம்பினேன். 18-ந்தேதி முழுவதும் ஜெயக்குமாருடன் சேர்ந்து நானும் ஆதித்யாவை தேடுவது
போல நடித்தேன்.

ஒரு கட்டத்தில் எனக்கே விரக்தி ஆகிவிட்டது. 19-ந்தேதி காலை மெரீனா கடற்கரைக்கு சென்று அமர்ந்து தன்னந்தனியாக
உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது போலீசார் என்னை போனில் தொடர்பு கொண்டு எங்கு இருக்கிறாய் என்று கேட்டனர்.

கடற்கரையில் இருக்கிறேன் என்று சொன்னதும் என்னை வந்து பிடித்துச் சென்றனர்’’ என்று அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை அமைதியாக அளித்திருக்கிறார்.

பூவரசி நாளை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: