சனி, 24 ஜூலை, 2010

இளையராஜா,படத்துல பாட்டுக்கு இடமில்லேன்று சொல்றியா...?'

இளையராஜா ஒரு படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொள்வதே பெரிய விஷயமாகிவிட்ட இன்றைய சூழலில், அவர் அனுபவித்துப் பாடிக் கொடுத்த 3 பாடல்களை படத்தில் பயன்படுத்தாமல் விட்டிருக்கிறார் ஒரு இயக்குநர். அவர் மிஷ்கின்.

தனது நந்தலாலா படத்துக்கு ராஜா போட்டுக்கொடுத்த 5 அற்புதமான பாடல்களில் இரண்டை மட்டுமே பயன்படுத்த முடிந்ததாம்.

நந்தலாலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அதற்கான காரணத்தைச் சொன்னார் மிஷ்கின்.

பொங்கல் திருநாளன்று சென்னை போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:

சித்திரம் பேசுதடி படத்திற்கு பிறகு அடுத்த படமாக நந்தலாலாவைத்தான் எடுக்க வேண்டும் என்று திரைக்கதை எழுதி தயாராக வைத்திருந்தேன். ஆனால் கடைசியில் டீக்கு கூட காசில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். அந்த வேகத்தில் எழுதிய திரைக்கதைதான் அஞ்சாதே.

அதுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கதையை எடுக்க முயன்றேன். ஆனால் கதையை கேட்டபிறகு ஒரு ஹீரோவும் நடிக்க முன்வரல. அப்புறம்தான் நானே நடிக்க முடிவு செய்தேன். இந்தக் கதையை எடுத்துக் கொண்டு ஐங்கரன் ஆபிசுக்கு போனேன். 'கேட்டு பார்க்கலாம்... ஒத்துக்கிட்டா பண்ணலாம்'னுதான் போனேன்.

நான் கதை சொல்ல முன்வந்த போதும், வேணாம்... உங்க மேல் நம்பிக்கை இருக்கு என்று சொல்லி இந்த படத்தை எடுக்க முன்வந்தாங்க கருணாமூர்த்தியும், அருண்பாண்டியனும்! இந்த ரெண்டு பேரையும் என்னுடைய தாயாக நினைக்கிறேன்.

நந்தலாலாவைத் தாங்கியிருப்பவர் இசைஞானி இளையராஜா. அவர் போட்டுக் கொடுத்த 5 பாடல்களில் இரண்டை மட்டும்தான் படத்தில் என்னால் வைக்க முடிஞ்சது. இதை எப்படி அந்த மனிதரிடம் சொல்வது என தயங்கினேன்.

வேறு வழியின்றி சொன்னபோது, அவர் என்னைப் பார்த்து, 'படத்துல பாட்டுக்கு இடமில்லேன்று சொல்றியா...?' என்றார்.

எனக்கு செருப்பால் அடித்தது போலிருந்தது. மிகுந்த குற்ற உணர்ச்சியுடன், 'இல்ல சார், ரெண்டு பாட்டுக்கு மேல வைக்கிறது இந்தக் கதையில தர்மமா படல...' என்றேன். இசைஞானியிடம் மன்னிப்பும் கேட்டேன்.

ஆனா அதுக்கப்புறம், இந்தப் படத்து க்ளைமாக்ஸூக்கு அவர் போட்டிருக்கிற இசை, இன்னொரு அதிசயம். ராஜா சாருடன் பணியாற்றியதில் என் திரை வாழ்க்கையே நிறைவு பெற்றது போன்ற ஒரு உணர்வு, என்றார் மிஷ்கின்.

கருத்துகள் இல்லை: