புதன், 21 ஜூலை, 2010

பாரதிராஜா ‘பதினாறு வயதினிலே’ எனக்கு அட்வான்ஸ் அம்பது ரூபாய்

‘‘16 வயதினிலே’ என்னோட பர்ஸ்ட் ஸ்கிரிப்ட். முதல்ல ‘மயில்’ன்னு தலைப்பு வச்சு அத  ஒன்றரை லட்சம் ரூபாய்ல பிளாக் - ஒயிட்ல பண்ணலாம்னு பாம்பேயில் உள்ள  நேஷனல் பிலிம் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு அனுப்பி வச்சேன்.அப்போ அந்தக் கதைக்கு ரோஜாரமணிதான் ஹீரோயின். நாகேஷ்தான் சப்பாணி. அங்க அந்தக்  கதையைத் திருப்பி அனுப்பிச்சிட்டாங்க. மனசு வேதனையாயிடுச்சு.
இதே கதையை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்கிட்ட சொன்னேன்.அவர் நல்லா வளர்ந்துட்டு இருந்த நேரம். எனக்கு தோழர். என்னை அவர்தான் தயாரிப்பாளர்  எஸ்.ஏ.ராஜ்கண்ணுகிட்ட அறிமுகப்படுத்தினார். அவர்கிட்ட நான் முதல்ல சொன்னது ‘சிகப்பு ரோஜா’க்கள் கதையை. அது அவருக்குப் பிடிக்கல. அப்புறம் தயங்கி, ‘ஒரு  ஆர்ட் ஃபிலிம் மாதிரி ஒரு கதை இருக்கு’னு சொல்லி ‘பதினாறு வயதினிலே’ கதையைச் சொன்னேன். அப்படியே ஷாக் ஆகிட்டாரு. ‘பிரமாதம். இதைப் படமெடு ப்போம்’னு சொன்னார். யாரை நடிக்க வைக்கலாம்னு பேசினபோது, அப்போ வித்தியாசமா படம் பண்ணிக்கிட்டிருந்த கமல் ஞாபகத்துக்கு வந்தார். நான் அஸிஸ்டெண்டா  இருந்தப்ப அவரோடு நல்ல பழக்கம். கமலுக்காக கதை கேட்டது அவங்க அண்ணன் சாருஹாசன். ஹீரோயினா ஸ்ரீதேவி. அப்ப நிறைய மலையாளப் படம் பண்ணிக்கிட்டு  இருந்தாங்க.
பரட்டைக்கு நிறைய தேடினோம்.அப்பதான் ‘அபூர்வராகங்கள்’ல வந்து ‘மூன்று முடிச்சு’ல மேக்கப் போட்டு உட்கார்ந்திருந்த ரஜினியைப் பார்த்தேன்.இந்த ஆளு துறுதுறுன்னு வித்தியாசமா இருப்பார்னு போய், ‘இது ஒரு ஆர்ட் ஃபிலிம், நீங்க நடிக்கிறீங்களா?’ன்னு கேட்டேன். உடனே ரஜினி ‘என்ன சம்பளம்?’னார் ‘இது லோ பட்ஜெட்  படம்’னு சொன்னேன்.
ரஜினி கேட்ட சம்பளம் ஐயாயிரம்.நான் மூவாயிரம் தர்றேன்னு பேசி முடித்தேன்.ஸ்ரீதேவிக்கு ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளம். கமலஹாசனுக்கு மட்டும் 27 ஆயிரம்.கமலுக்குதான் கூடுதல் சம்பளம்.
எனக்கு டைரக்ட் பண்றதுக்கு தயக்கம்.நான் மாட்டேன்னுதான் சொன்னேன்.ஆனா ராஜ்கண்ணு சார் என்னை டைரக்டர் ஆக்கிட்டார். கலைமணி வசனம் எழுதினார்.
மைசூர்க்கு பஸ்ல போய் லொகேஷன் பார்த்துட்டு வந்தேன்.
அப்ப நிவாஸ் என் நண்பர்.பாலுமகேந்திராவைப் போடலாம்னு சொன்னார். நானே சின்ன பையன்.அவரு பெரிய டெக்னீசியன்.அவரோட சேர்ந்து பண்றதுக்கு எனக்கு மெச்சூரிட்டி கெடையாது.அதனால நிவாஸ் இருக்கட்டும்னு முடிவாகிடுச்சு.எனக்கு அட்வான்ஸ் அம்பது ரூபாய் தந்தாங்க.
வீட்டுச் செலவுக்கு வேற பணவசதி கிடையாது.குடும்பத்த வேற ஓட்டணும். அப்பதான் மனோஜ் பிறந்திருந்தான். படம் பண்ணுனாத்தான் அடுத்து பணம். ஷூட்டிங்  போனோம்.
மைசூர்ல, சிவசமுத்திரம், வெலக்காடு, கொளக்காடு, கொல்லேகால்தான் எந்த நவீனமும் எட்டிப் பார்க்காத அக்மார்க் வில்லேஜ். கரண்ட் கம்பி, ரோடு என இல்லாமல் இ ருந்த கிராமம்தான் படத்தோட லொகேஷன்.
ஷூட்டிங்ல ஒரிஜினல் துணிதான்.காஸ்ட்டியூம் எல்லாம் கெடையாது. எல்லாருக்கும் சீட்டி துணிதான். அதையும் பிளீச் பண்ணி பழைய துணி ஆக்கினேன். கமலுக்கு  ரெண்டே செட் காக்கி பேண்ட், சட்டைதான் படம் முழுசுக்கும். அவரே டிரெஸ வாங்கி கால்ல போட்டு மிதிச்சு பழச்சாக்கி போட்டுக்கிட்டார்.
ரஜினிக்கு தமிழை கத்துக்கொடுத்ததே கலைமணிதான்.மரத்தடியில உட்கார்ந்து ‘இதெப்படி இருக்கு’ன்னு வசனத்த சொல்லிக் கொடுத்தார். அப்ப ரஜினிக்கு தமிழ் சரியா  வராது. ஆனா, துறுதுறுன்னு சுறுசுறுன்னு இருந்தார்.
அதிகமான மேக்கப் போடக்கூடாதுன்னு சொல்லிட்டேன்.எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க. ஆனா ஸ்ரீதேவி மட்டும் ஃபீல் பண்ணுனாங்க.
டோட்டல் பிக்சரே 5 இலட்சம்தான். ஒரு நாளைக்கு 400 அடி, 300 அடி ஃபிலிம் வரும். படத்தோட மொத்த ஃபிலிம் 28,000 அடிதான்.
படம் முடிஞ்சவுடனே கமல், ‘‘இந்த படம் ஓடுமா? ஓடாதான்னு சொல்லத் தெரியல. ஆனா மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. குட் பிலிம்னு சொன்னார்.  ‘முதல்  மரியாதை’ படம் முடிச்சவுடனே சிவாஜி இப்படித்தான் சொன்னாரு.
இந்தப் படம் வெளிவந்து தமிழ்ப் பத்திரிகைகள் பாராட்டு கிடைச்சாக்கூட போதும். அப்படியே ஊர் திரும்பிடலாம்னுதான் நான் நெனச்சேன்.
தியேட்டர்ல முதல் நாள் ரிசல்ட் கேட்டு  பயமா போச்சு. ஒண்ணுமே புரியலன்னு ஒரே விசில் கூச்சல். அப்புறம் மெல்ல மெல்ல... வித் இன் வீக்குல தியேட்டர்ல கூட்டம்  அதிகமாயிடுச்சு. கிராமங்களில் இருந்து வண்டி கட்டிட்டு கூட்டம் கூட்டமா தியேட்டர் வர்றாங்கன்னு கேள்விப்பட்டு பெருமையா இருந்துச்சு.
இந்தப் படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. அவ்வளவு பிரமாதமா இளையராஜா மியூசிக் பண்ணிருப்பான். முதன் முதலா சோளம் வெதக்கையிலேன்னு டைட்டில் ஸாங் தானே எழுதி பாடினான்.
கவிஞர் கண்ணதாசன், கங்கை அமரன், சோமு பாட்டு எழுதினாங்க. கங்கை அமரனோட ‘செந்தூரப் பூவே' பாட்டை பாடின ஜானகிக்கு நேஷனல் அவார்டு கெடைச்சது.
பாக்யராஜ் சாதாரணமா டீ வாங்கிக் குடுத்துட்டு எடுபுடி வேலை பார்த்தான். ஆனா, திறமையானவன். நல்ல விதை எங்கு விழுந்தாலும் முளைக்கும். வெதச்சவன் தூங்குவான். ஆனா, விதை தூங்காது. அந்த விதை என் பாக்யராஜ்.
இன்றும் என் முதல் படமான ‘16 வயதினிலே'யை நினைக்கும் போது பிரமிப்பா இருக்கு’’ என்று மனம் முழுக்க மகிழ்ச்சியோடு தன் முதல் முயற்சியைச் சொல்கிறார்  பாரதிராஜா.
நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் பிரமிப்பாய்தான் இருக்கிறது.
 வை.கதிரவன்

கருத்துகள் இல்லை: