திங்கள், 19 ஜூலை, 2010

பகிடிவதைகளால் பல மரணங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்திருப்பதாக

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடைசெய்வதற்கு உயர்கல்வியமைச்சு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெறுவதை உடனடியாக உயர்கல்வியமைச்சு தடைசெய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கௌரவக் குறைவான விதத்தில் பகிடிவதை இடம்பெறுவதால் இலங்கை பல்கலைக்கழகங்கள் தொடர்பாக நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். பல்கலைக்கழகப் பகிடிவதை தொடர்பாக 1998 இல் 20 ஆம் இலக்கச் சட்டத்தை தாமதமின்றி உடனடியாக அமுல்படுத்தப்போவதாகஅமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பகிடிவதைச் சட்டத்தின் பிரகாரம் குற்றமிழைத்தோருக்கு 0608 வருடகால சிறைத்தண்டனை வழங்க முடியுமென அமைச்சர் கூறியுள்ளார். இந்தச் சட்டங்களை உறுதியான முறையில் அமுல்படுத்தப்படாவிடில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தைப் பேணுவது கஷ்டமான காரியமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் எதிர்ப்புகளை வெளிப்படுத்த மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் யாராவது விரிவுரைகளைப் பகிஷ்கரித்தால் அவர்கள் சமூகமளிக்கவில்லையென்றே கருதப்படும். வருட முடிவில் 80 சதவீதம் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்காதவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளால் பல மரணங்கள் இடம்பெறுவதற்கு வழிவகுத்திருப்பதாக சிவில் சமூகத்திடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மாணவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை: