சனி, 24 ஜூலை, 2010

இலங்கை எம்.பி. க்களிடம் எகிறிய முதல்வர்,இந்த நாடு ஒரு தலைவரை

எனக்கு உணர்ச்சி இல்லையா?
இலங்கை எம்.பி. க்களிடம் எகிறிய முதல்வர்!

இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!''

எதற்காக வருகிறார்கள்... என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்... ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்... பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்?
டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, 'இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்' என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள், கடந்த 20-ம் தேதி சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். ஒரு மாதத்துக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது.
முதல்வர் கொடுத்த தேநீர் இதமாக இருந்தாலும், இந்த சந்திப்பு சற்று சூடாகவே இருந்தது. ஈழத்தில் அரசியல் போராட்டம் முடிந்து ஆயுதப் போராட்டம் உச்சத்துக்குப் போய் மீண்டும் பூஜ்ஜியத்துக்கு வந்துள்ள நிலையில்... செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்து சங்கதிகளை நினைவுகூர்ந்து வழக்கமாகச் சொல்லும் கருணாநிதி, இந்த சந்திப்பில் கறார் குரலை எழுப்ப... கூட்டமைப்பினர் அதை எதிர்பார்க்கவில்லை!
'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. நான் இந்தியா வின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ... அதைத்தான் செய்ய முடியும். இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!'' என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த் தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள்.
''இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பார்த்தசாரதி நடுநிலையுள்ள பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப் பட்டார். அதைப்போன்ற பிரதிநிதியாக ஒருவரை நான் அனுப்பிவைக்க பிரதமரைக் கேட்டுள்ளேன். அது நிச்சயம் நடக்கும். நீங்கள் சாணக்கியத்துடன், சாதுர்யத்துடன் அரசியல் பண்ணுங்கள்!'' என்றும் கூட்டமைப்பினரிடம் முதல்வர் கூறியிருக்கிறார்.
''புலிகள் இல்லை, போர் இல்லை. வேரோடு வீழ்ந்துகிடக்கும் வாழ்க்கையை மீட்க உலக சக்திகள் யாரோடும் உறவாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. இந்தியா எம்மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்!'' என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ''அந்த நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்!'' என்றாராம் முதல்வர்.
(விகடன்)

கருத்துகள் இல்லை: