புதன், 21 ஜூலை, 2010

தொழில் மயமாவதில் தமிழகம் முதலிடம்: ஸ்டாலின்

தொழில் மயமாவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக தற்போது திகழ்கிறது என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னைக்கு அருகில் உள்ள நேமத்தில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த லோட்டி இந்திய கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையினை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அந்த விழாவில் பேசிய ஸ்டாலின்,
கொரிய நாட்டைச் சேர்ந்த பிரபல நிறுவனங்கள் வரிசையில் லோட்டே நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்குவதை வரவேற்கிறேன். லோட்டே நிறுவனம் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்து வளர்ந்து வரும் நிறுவனமாக திகழ்கிறது.

கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. அந்த நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய், சாம்சங், லோட்டே, இல்ஜின், குவாசின், போஸ்ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கி உள்ளன. சென்னையில் மட்டும் 160 கொரிய கம்பெனிகள் உள்ளன. இந்தியாவில் 8400 கொரிய பிரஜைகள் வசிக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 3000 பேர் வாழ்கின்றனர். 

பாரம்பரிய கொரிய உணவு வகையை பரிமாறும் உணவு நிறுவனங்கள் சென்னையில் ஏராளமாக உள்ளன. கொரியா டவுன் என்ற பெயரில் இந்த உணவு நிறுவனங்கள் சென்னையில் இயங்கி வரு கின்றன.  சென்னைக்கு அருகே தென்கொரியாவின் சிறு, குறு நிறுவனங்களின்  தொழில் முனையம் ஒன்றை தமிழக அரசு கொரியாவின் முக்கியத்துவத்தை கருதி அமைக்க உள்ளது.

தகவல் தொடர்பு, வாகன உற்பத்தி, ஜவுளி, மின்னணு, தோல்பொருட்கள் உற்பத்தியில் சென்னை ஏற்கனவே முன்னிலையில் உள்ளது. தற்போது  உணவு பதப்படுத்தும் தொழிலிலும் தமிழகம் முக்கிய மையமாக திகழ்கிறது.  தொழில் துறையில் தமிழகம் புகழ் மிக்க கடந்த காலத்தையும், எழுச்சி மிகு நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் கொண்டுள்ளது. தொழில் மயமாவதில் தமிழகம் முன்னணி மாநிலமாக தற்போது திகழ்கிறது. 

இந்தியாவிலேயே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாக திகழ்கிறது என்று தொழில் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு அசோசேம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான வால்ஸ்ட்ரீட் ஜேர்னல், சென்னை புதிய டெட்ராய்ட்ஆக உருவெடுத்து வருகிறது என்று புகழ்ந்துரைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் கருணாநிதி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி காண வேண்டும் என கருதி சிறப்பு சலுகைகள் போன்றவற்றை வழங்கி தொழில் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை காரணமாக அண்மைக் காலத்தில் அப்பகுதியில்  குறிப்பிடத்தக்க அளவுக்கு கணிசமான முதலீடு வளர்ந்துள்ளது. கடந்த வாரம் கூட தூத்துக்குடியில் ரூ.2500 கோடியில் கூட்டு முயற்சியிலான  உணவு பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் எனது முன்னிலையில் கையெழுத்தானது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது.

10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இந்த தொழிலில் முதலீடு செய்ய கொரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் முன்வர வேண்டும்.  தரத்துக்கு உதாரணமாக திகழும் கொரிய நிறுவனங்களின் வளர்ச்சியில் லோட்டே நிறுவனமும் மென்மேலும் வளர்ந்து வெற்றி பெற  வாழ்த்துகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை: