hindutamil.in - ரெ.ஜாய்சன் : தூத்துக்குடி: குளத்தூர் அருகே வேடநத்தம் காட்டுப் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறுத்துள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, நேற்று இரவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதற்கு, ‘குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து விசாரணை நடக்கிறது. மாணவியின் சகோதரி படித்துக் கொண்டிருக்கிறார். அவர் படிப்பை நிறைவு செய்யட்டும். அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இரவு 10.30 மணியளவில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் வேடநத்தம் மற்றும் குளத்தூர் ஆகிய இடங்களில் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று அதிகாலை 6 மணியளவில் ‘குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்’ என போலீஸார் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், குற்றவாளிகளை கைது செய்ய பின்னரே மாணவியின் உடலை பெற்றுக் கொள்வோம் என உறுதியாக தெரிவித்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி இன்று காலை வேடநத்தம் வந்து, கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். அவரிடம் உறவினர்கள் நடந்தவற்றை கூறினர். ‘மாணவியின் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மாணவியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட பின்னரே மாணவியின் உடலை பெறுவோம் என்றும் தெரிவித்தனர்.
“இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது தொடர்பாக போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள். மாணவியின் சகோதரி படித்து முடிக்கட்டும்” என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறுகையில், 'இளம் மாணவிக்கு மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. ஏடிஎஸ்பி தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 குழுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டுள்ளனர். முதல்வர் கண்காணித்து வருகிறார். விரைவில் மாணவி இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்” என்றார்.
முற்றுகையிட்ட கிராம மக்கள்:
பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு கனிமொழி எம்.பி. வெளியே வந்தபோது, கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, 3 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என குற்றம்சாட்டினர். அவர்களிடம் கனிமொழி எம்.பி. விளக்கமளித்தார். அப்போது பெண்கள் “நேற்று முழுவதும் ரோட்டில் உட்கார்ந்திருந்தோம். யாரும் வந்தும் என்னவென்று கேட்கவில்லை. இரவு முழுவதும் போராட்டம் நடத்தினோம். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது” என்றனர்.
அவர்களிடம் பேசிவிட்டு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் புறப்பட்டபோது, சிலர் அவர்களை மீண்டும் மறித்தனர். போலீஸார் அவர்களை விலக்கிவிட்டு, எம்.பி., அமைச்சரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்தது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்தார். வேடநத்தம் கிராமத்தில் பல வீடுகளில் கழிப்பிடம் இல்லாத நிலையில், இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த 10-ம் தேதி இரவு அந்த மாணவி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் உடனடியாக 10-ம் தேதி இரவு குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். போலீஸார் அவர்களை, விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
11-ம் தேதி காலை விளாத்தி குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கும் புகாரை பெறாமல் பலமணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால், மாணவியின் தந்தை மீண்டும்குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், 11-ம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகத்தில் காயங்களுடன் அந்த மாணவி இறந்து கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோரும், பொதுமக்களும் குறுக்குச்சாலை - ராமேசுவரம் சாலையில் வேடநத்தம் அருகே இரவு மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் உறுதிமொழியை ஏற்று நேற்று அதிகாலை 1 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.
ஆனால், நேற்று காலையாரும் கைது செய்யப்படாததால், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை விலக்கில் காலை 9 மணி முதல் மீண்டும் மறியல் தொடங்கியது. நெல்லை சரக டிஐஜி சரவணன், சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கள், எஸ்.பி. மதன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டத்துக்கு அதிமுக, நாம் தமிழர், தவெக, பாஜக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
மாலை 5 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. இதேவேளையில், மாணவியின் உறவினர்களில் மற்றொரு தரப்பினர், மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து தூத்துக்குடி விவிடி சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் கடும் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் இச்சம்பவத்தில் புகாரை வாங்க போலீஸார் மறுத்ததாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நெல்லை சரக டிஐஜியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில், விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக