வெள்ளி, 23 ஜூலை, 2010

இலங்கை மீனவர்கள , தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீச்சு

ராமேஸ்வரம் : இலங்கை மீனவர்களால், வெடி குண்டு வீசி மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசியதில், மேலும் ஒரு படகு கடலில் மூழ்கியது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூன் 18 ல் மீன்பிடிக்க சென்ற செல்லத்துரை என்பவரின் படகு இலங்கை யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கியது. இலங்கை வலைபோட் மீனவர்கள் படகின் மீது வெடி குண்டு வீசியதால், படகு கடலில் மூழ்கியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படகை மீட்க நேற்று முன்தினம் மீன்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், ராமேஸ்வரத்திலிருந்து நான்கு படகில் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர். யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் வெடிகுண்டுகளை வீசினர். இதில் மீனவர் பால்துரை படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் வேறு படகில் ஏறி , மற்ற படகுகளுடன் நேற்று இரவு ஏழு மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

கடலில் மூழ்கிய படகு டிரைவர் சுப்ரமணி கூறியதாவது: நடுக்கடலில் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை வலைபோட் மீனவர்கள், படகின் மீது வெடிகுண்டுகளை வீசினர். எங்களது படகு கடலில் மூழ்க துவங்கியதும், நாங்கள் கடலில் குதித்து வேறு படகில் ஏறினோம். மற்ற படகுகளின் மீதும் வெடிகுண்டுகளை வீசியதால் அங்கிருந்து திரும்பினோம். வரும் வழியில் இலங்கை கடற்படையினர் எங்களை மறித்து விசாரித்தனர். நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறியதை தொடர்ந்து, படகு மூழ்கிய கடல் பகுதிக்கு அழைத்து சென்று பார்வையிட்டனர். இருட்ட துவங்கியதால் மூன்று படகுகளுடன் எங்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று இரவில் தங்க வைத்தனர். இன்று (நேற்று)காலை மூன்று கடற்படை கப்பலுடன் வந்து, மூழ்கிய படகை மீட்க உதவிசெய்தனர். படகை மீட்க முடியாததால் திரும்பி செல்லுமாறு கூறினர். இதை தொடர்ந்து ராமேஸ்வரம் திரும்பினோம், என்றனர். கரை திரும்பிய மீனவர்களை மீன்துறை மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரித்தனர்.

கருத்துகள் இல்லை: