வெள்ளி, 23 ஜூலை, 2010

மன்னார தாக்குதலுக்கு இலக்கானவர் சமாதான அமைப்பின் தலைவர் எனும் போர்வையில்

தலைமன்னார் வீதியில் இரண்டாம் கட்டைப் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் இனந்தெரியாதோரினால் நேற்று மாலை தாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் ‐ தலைமன்னார் வீதியில் மன்னார் பொது சேமக்காலையை அண்மித்த பகுதியில் இடம்பெறும் பெந்தகோஸ்தே சபையின் ஆலயம் ஒன்றின் நிர்மாண வேலைகளைப் பார்வையிட்டுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த நபர் தாக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
தாக்குதலுக்கு இலக்கானவர் மேற்படி சபையினைச்சேர்ந்த பி.ஏ அந்தோனி மார்க் எனவும்;, மன்னார் கச்சேரியில் காணி அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்றதாக சொல்லப்படும் தினத்தன்று இரவு 8.30 மணியளவில் குறித்த நபர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிரில் வந்த வெள்ளை வான் இரண்டு பேரை இவர் அருகில் இறக்கிவிட்டுச் சென்றதாகவும், வானில் வந்தவர்கள், இவருடன் பேச வேண்டும் என வீதியோரத்தில் உள்ள பற்றைக்குள்  அழைத்துச் சென்று தாக்கியதாகவும், அப்போது வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பஸ் வண்டிகள் இவரது சத்தத்தைக் கேட்டு குவிந்ததாகவும், அதனையடுத்து, அவரைத் தாக்கியவர்கள் தப்பியோடிவிட்டதாகவும் மன்னாரிலுள்ள  செய்தியாளர் ஒருவர் இணையத்தளம் ஒன்றிற்கு தெரிவித்திருக்கின்றார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முறைப்பாடு செய்த பின் ஏறத்தாழ இரவு 10.16 மணியளவில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பபடுகின்றது.
தாக்குதலுக்கு இலக்கானவர் மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் எனும் போர்வையில் பல்வேறு அரசவிரோத செயற்பாடுகளில் நீண்ட காலங்கலாக ஈடுபட்டு வருகின்ற ஒருவர் எனவும் அரசாங்கத்திற்கு எதிரான கண்டன ஊர்வலங்கள், பேரணிகள், கூட்டங்களை ஒழுங்கு படுத்தி நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  
தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படும் மன்னார் பொது சேமக்காலையை அன்மித்தப்பகுதியில் இராணுவத்தினர் 24 மணிநேர கடமையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் தாக்குதல் நடாத்தியிருப்பதாக முறைப்பாடு பதியப்பட்டிருக்கின்றமையானது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இவ்வாரிருக்க மேற்படி பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத நிலையிலும், மன்னார் நகரிலிருந்து உள்ளுர் பேருந்து சேவைகள் இரவு 7.30 மணியுடன் நிறுத்தப்படும் நிலையிலும் குறித்த நபர் தாக்கப்பட்டபோது வீதியால் சென்ற பொதுமக்களும் பேருந்தும் அவ்விடத்தில் குவிந்ததாக அரசவிரோத போக்குடைய மன்னாரில் இருக்கும் செய்தியாளர் ஒருவர் வதந்திகளை பரப்பிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான பி.ஏ அந்தோனி மார்க் ஒருசில ஊடகத்துறையினருடன் இணைந்து நடந்து முடிந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் காலப்பகுதிகளில் அரசாங்கத்திற்கும் அரசசார்புடைய கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரங்கள் மற்றும் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டு வந்தவர் எனவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரச்சாரங்கள் ஒன்றுகூடல்கள், ஊர்வலங்கள் என்பவற்றை   அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றின் ஒத்துழைப்புடன் கடந்தகாலங்களில் நடாத்தியவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: