முதல் படம் மறைக்கப்பட்ட கொடுமை; தலித் என்பதால் அடித்து விரட்டப்பட்டு நாயகி ஓடிய ஓட்டம்! இயக்குநர் தமிழர் டேனியல் பெயரை மறைக்க நடந்த முயற்சி! கேரளத் திரையுலகம் தொடக்கத்தில் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். மலையாளத் திரையுலகின் முதல் நாயகி பி.கே.ரோசி, ஊராரின் எதிர்ப்புக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். ஏழ்மையான பின்னணி, சமூகப் புறக்கணிப்பு என்று பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்த அந்த முதல் நாயகிக்கு இன்று மரியாதை செய்திருக்கிறது மலையாளத் திரையுலகின் பெண்கள் அமைப்பான 'விமன் இன் சினிமா
J.C.Daniel |
actress rossi |
கலெக்டிவ்'.இதன் சார்பில் கொச்சியில் துவக்கப்பட்ட ஒரு அமைப்பின் பெயர் 'பி.கே.ரோசி பிலிம் சொசைட்டி'
1913-இல் இந்தியாவின் முதல் திரைப்படத்தை தாதா சாகேப் பால்கே உருவாக்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பால்கேவைப் போன்றே, 1920-இல் தமிழின் முதல் ஊமைப்படத்தை இயக்கிய நடராஜ முதலியாரையும், 1931-இல் வெளிவந்த தமிழின் முதல் பேசும்படமான காளிதாசை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டியையும் சினிமாவுலகம் நன்கறியும்.
ஆனால் சமீபத்தில் கேரள திரைப்பட வளர்ச்சிக் கழகம், 1930-இல் வெளிவந்த "விகதகுமாரன்" என்கிற திரைப்படத்தையே மலையாளத்தின் முதல் திரைப்படமாகவும், அதன் இயக்குனரான ஜே.சி.டேனியலை மலையாளத்தின் முதல் இயக்குனராகவும், பி.கே.ரோசி என்பவரை முதல் நாயகியாகவும் மாற்றி அறிவித்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக அத்திரைப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன? என்கிற கேள்விக்கான விடையளிக்கும் விதமாக"செல்லுலாயுடு" என்கிற மலையாளத் திரைப்படம் கமல் இயக்கத்தில் பிரிதிவிராஜ் நடிப்பில் வெளியானது.
மலையாளத்தின் முதல் திரைப்படமான விகதகுமாரனை இயக்கிய ஜே.சி.டேனியலின் வாழ்க்கைதான் இத்திரைப்படத்தின் கதை. மலையாள சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருதை டேனியல் பெயரிலேயே இப்போது வழங்கி வருகிறது கேரளஅரசு.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உள்ளிருந்த அகஸ்தீஸ்வரம் (தற்போது கன்னியாகுமரி மாவட்டம்) என்கிற ஊரில் 1900-இல் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் தமிழர் ஜே.சி.டேனியல்.
சிறுவயதுமுதலே களரி என்கிற தற்காப்புக் கலையில் நன்கு தேர்ச்சிபெற்றவராகத் திகழ்ந்தார். தனது 15 வயதிலேயே களரி குறித்து ஆங்கிலத்திலொரு புத்தகமும் எழுதியிருக்கிறார்.
அவருக்கிருந்த வசதி காரணமாக, சென்னையில் பிரபலமாகிக்கொண்டு இருந்த பேசாத்திரைப்படங்கள் பாக்கிற வாய்ப்புகிடைத்தது. திரைப்படங்களின் மூலம் களரியை உலகளவில் பெரிதாக பேசவைக்க முடியும் என்று எண்ணினார்.
அதனால் திரைப்படங்கள் பார்ப்பதும், அது குறித்த தகவல்கள் சேகரிப்பதுமாக தன் நேரத்தினை செலவழித்தார். அதுவே அவருக்கு சினிமாவின் மீது தீராக்காதல் கொள்ளவைத்தது.
உலக சினிமா உருவாகி 30 ஆண்டு களும், இந்திய சினிமா உருவாகி 15 ஆண்டுகளும் ஆனபின்பும், மலையாளத்தில் திரைப்படமெடுக்கும் முயற்சியேதும் நிகழவில்லையே என்கிற வருத்தமும் அவரது முயற்சிக்கு வித்திட்டது.
1926-இல் நெய்யாற்றங்கரை என்கிற ஊரில், அவருக்கிருந்த பூர்வீக சொத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்றார். சென்னைக்கும் மும்பைக்கும் சென்று, சினிமா தொடர்பான தொழிற்நுட்ப அறிவினை வளர்த்துக்கொண்டார்.
திருவனந்தபுரத்தில் சொத்து விற்ற பணத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி திருவிதாங்கூர் பிக்சர்ஸ் என்கிற திரைப்பட நிறுவனத்தைத் துவங்கினார். அதன்பின்னர் ஒரு கேமராவையும் வாங்கினார். அதனை இயக்க லாலா என்கிற ஆங்கிலேயர் ஒருவரையும் ஒப்பந்தம் செய்தார்.
அடுத்ததாக, தான் இயக்கப்போகும் திரைப்படத்தின் கதையினை முடிவுசெய்யும் பணியில் ஈடுபட்டார். கடவுளர்க் கதைகளையும் புராணக் கதைகளையுமே அப்போது படங்களாக எடுத்துக்கொண்டிருந்தது இந்திய சினிமாவுலகம்.
ஆனால் டேனியலுக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை. களரி குறித்த ஆவணப்படமாக எடுக்கலாம் என்கிற ஆவலும், சார்லின் சாப்ளினின் "தி கிட்" என்கிற திரைப்படத்தைப் பார்த்தபின்னர் மாறிப்போயிற்று.
"தி கிட்" திரைப்படத்தைப் போன்று மக்களைப்பற்றிய சமூக சினிமாவாக எடுக்கவேண்டுமென்பது அவரது நோக்கமாகியது. அதற்காக அவரே "தி லாஸ்ட் சைல்ட்" (விகதகுமாரன்) என்கிற தலைப்பிட்டு ஒரு திரைக்கதை எழுதினார்.
திரைப்படமியக்கும் ஆர்வம் உருவாகிற்று, அதற்குத் தேவையான பணம் ஓரளவிற்கு தயாராகிவிட்டது, திரைக்கதையையும் எழுதி முடித்தாயிற்று.
அடுத்து நடிகர் தேர்வு ஆரம்பமாயிற்று. தொலைந்துபோகும் சிறுவன் கதாபாத்திரத்தில் டேனியலின் மகனையும், சிறுவன் வளர்ந்து பெரியவனாகிய பின்னுள்ள கதாபாத்திரத்தில் டேனியலும் நடப்பதாக முடிவாயிற்று.
ஆனால், திரைப்படத்தில் நாயகியாக யாரை நடிக்கவைப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாயிற்று. முதல் மலையாள திரைப்படத்தில் நடிக்க நாயகி தேவை என்று செய்தித்தாள் பூரா விளம்பரங்கள் கொடுத்தார். ஆனால் யாரும் வரவில்லை.
தொடர்ந்து 6 மாதங்கள் வரை விளம்பரங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார். பெண்கள் திரைப்படத்தில் நடிப்பது மிகப்பெரிய குற்றச்செயல் என்கிற எண்ணம் நிறைந்திருந்த காலகட்டமது என்பதால், நாயகி கிடைப்பதில் சிரமமாகியது.
ஏற்கனவே சில இந்தித் படங்களில் நடித்திருந்த லானா என்கிற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை மும்பையிலிருந்து அழைத்துவந்தார். ஆனால், அப்பெண் தங்குவதற்கு அரண்மனையும், பயணிப்பதற்கு காரும், அதிகளவு ஊதியமாக ரூபாய் பத்தாயிரமும் கேட்டு டேனியலை தொல்லை கொடுத்தார்.
கொடுத்த முன்பணமான ரூபாய் ஐந்தாயிரத்தைக் கூட வாங்காமல் அப்பெண்ணை திரைப்படத்திலிருந்து நீக்கிவிட்டார். மீண்டும் நாயகி தேடும் படலம் தொடங்கிற்று...
1903இல் இன்றைய திருவனந்தபுரத்தில் இருக்கும் பெயடு என்னும் ஊரில் ஒடுக்கப்பட்ட தலித் (புலயர்) குடும்பத்தில் பிறந்தவர் ராஜம்மா. அமத்தரா என்ற ஊரில் மலையடிவாரத்து நெல்வயல்கள் அருகில் குடிசையொன்றினில் பெற்றோருடன் வாழ்ந்துவந்தார்.
மிக மோசமான சாதிக்கொடுமைகளுக்கு இடையில் தான், தங்களது அன்றாட வாழ்க்கையினை நகர்த்திச்செல்ல வேண்டியிருந்தனர் அவ்வூரில் வாழ்ந்த புலயர் மக்கள். உயர்நிலைச் சாதியினர் என தங்களை பிரகடனம் செய்து கொண்ட நிலவுடைமையாளர்கள் அம்மக்களை அடித்துத்துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
நாள்முழுக்க வயல்களில் விவசாய வேலைசெய்தபோதும், ஒருவேளைப் பசிக்கும் உணவுபெறமுடியாத கூலிதான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பசுமை, அவர்கள் விளைவிக்கும் பயிர்களில் மட்டுமே நிறைந்திருந்தது.
கிறித்துவ மிஷனரிகள் ஊருக்குள் வந்தவுடன், கூட்டங்கூட்டமாக புலயர் மக்கள் கிறித்துவ மதத்தைத் தழுவினர். அவர்களில் ராஜம்மா குடும்பமும் ஒன்று. அப்படியாக ராஜம்மா என்கிற பெயர் ரோசம்மாவாகியது.
அவருடைய தந்தை அவ்வூரிலிருக்கும் தேவாலயத்தில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்தார். கிறித்துவ மதத்தில் சேர்ந்தாலும், காலங்காலமாக தங்களது சாதிமக்கள் கைதேந்தவர்களாக இருந்த நடன, நாடகக் கலையினை விடாமல் தொடர்ந்தனர் அம்மக்கள்.
இதில் ரோசம்மா மிகச்சிறந்து விளங்கினார். காக்கரசி நாடக்குழு, ராஜா நாடகக்குழு ஆகிய இரண்டு பிரபலமான நாடகக் குழுக்களும் ரோசம்மா தங்கள் நாடகக்குழுவினில்தான் நடிக்கவேண்டும் என்று போட்டிபோடுமளவிற்கு ரோசம்மா புகழ்பெற்று விளங்கி வந்தார்.
தேவாலய நண்பர்கள் மூலமாக அங்கு பணிபுரியும் ரோசம்மாவின் தந்தை குறித்தும், ரோசம்மாவின் நடிப்புத்திறன் குறித்தும் கேள்விப்பட்டார் நாயகியைத் தேடிக்கொண்டிருந்த டேனியல்.
ஒரு நாள் ரோசம்மாவின் நாடகத்தை நேரில் பார்த்துவிட்டு, ரோசம்மாதான் தன்னுடைய படத்தின் நாயகி என்று முடிவே செய்துவிட்டார் டேனியல்.
ஆதிக்க சாதியினர் என்ன சொல்வார்களோ என்கிற பயத்தில் தயக்கம் காட்டிய அவரது தந்தையை, "இப்பூமி நாயர்களுக்கும் நம்பூதிரிகளுக்கும் மட்டுமானதல்ல. நமக்குமானதுதான்" என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார்.
திரைப்படமென்றால் என்னவென்றுகூட அறிந்திராத மலையாள சினிமாவின் முதல் நாயகி ரோசம்மா, டேனியலின் திரைப்படத்தில் நடிக்க நாளொன்றிற்கு 5 ரூபாய் ஊதியத்துடன் ஒப்பந்தமானார்.
திரைப்படத்திற்காக, ரோசம்மா என்கிற அவரது பெயர் ரோசியாக மாற்றப் பட்டது. ரோசி தினமும் வீட்டிலிருந்தே தனக்கான உணவினை எடுத்துக்கொண்டு, தன் வீட்டிலிருந்து ஸ்டுடியோவிற்கு நடந்தே சென்று நடித்து வந்தார்.
சினிமாவில் நடிப்பது ரோசிக்குப் பெரிய வேலையாகத் தெரியவில்லை. இது வரையிலும் அடிமை வாழ்க்கை வாழ்ந்துவந்த ரோசிக்கு, ஸ்டுடியோவில் இருப்பவர்கள் எல்லோரும் தன்னை நாயகியாகப் பார்ப்பது, மரியாதை கொடுப்பது போன்றவை எல்லாம் எப்போதும் கண்டிராதவையாகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருந்தது.
படத்தின் கதைப்படி, சரோஜினி என்கிற பெயருடைய ஒரு நாயர் பெண்ணாக நடித்தார் ரோசி.
தொடர் படப்பிடிப்பிற்குப்பின்னர், விகதகுமாரன் திரைப்படம் முடிந்தது. ஆனால் திரைப்படத்தை திரையிட பிரத்யேக திரையரங்கங்கள் ஏதும் திருவனந்தபுரத்தில் அப்போது இருந்திருக்கவில்லை.
தமிழ் நாடகங்களை அரங்கேற்றும் "கேபிடல் டென்ட் திரையரங்கத்தை" வாடகைக்கு எடுத்து விகதகுமாரனை திரையிட முடிவெடுத்தார் டேனியல்.
அப்போதைய பிரபல வக்கீல் கோவிந்தம் பிள்ளை முன்னிலையில், 1928 நவம்பர் 7ஆம் தேதி விகதகுமாரன் முதன்முதல் திரையிடப்படுமென்று அறிவிக்கப்பட்டது. தன் இலட்சியக்கனவு நிறைவேறப் போகிற மகிழ்ச்சியில் திளைத்தார் டேனியல்.
திரைப்படத்தைக் காண நாயகி ரோசி தன் குடும்பத்தினருடன் வந்திருந்தார். ஆனால், ஆதிக்க சாதியினர் ரோசியைக் கண்டதும் கடும் கோபம் கொண்டனர்.
தங்களுக்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதினர். தங்களுக்குச் சரிக்குச் சமமாக கீழ்சாதி மக்களும் திரைப்படம் பார்ப்பதா என்று கொதித்து எழுந்தனர். அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு, ரோசியை, அவரது குடும்பத்தினரை திரையரங்குள் அனுமதிக்காமல், ஆதிக்க சாதியினர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
படத்தின் நாயகி திரையரங்கத்தின் வெளியே நின்றிருக்க, விகதகுமாரன் திரைப்படத்தின் முதற்காட்சி உள்ளே துவங்கலானது.
அது பேசா ஊமைப்படமாகையால், திரைக்கு அருகிலே ஒருவர் நின்றுகொண்டு, திரையில் வரும் காட்சிகளை ஒவ்வொன்றாக விவரித்துக்கொண்டே வந்தார்.
படத்தின் நாயகி திரையில் தோன்ற, ரோசியை அனைவரும் அடையாளம் கண்டுகொண்டனர். 'ஒரு புலையப் பெண், திரைப்படத்தில் நடிப்பதே தவறு. அதிலும் நாயர் பெண்ணாக நடித்து, அனைவரையும் அசிங்கப்படுத்தி விட்டாளே' என்று வெறியின் உச்சம் சென்றனர்.திரையினைக் கிழித்தனர், திரையரங்கக் கொட்டகையை வெட்டிச் சாய்த்தனர்.
வெறிகொண்டு துரத்த, கும்பலிடமிருந்து டேனியல் தப்பித்து ஓடினார். தன் சொத்துக்களை விற்று உருவாக்கிய திரைப்படம், துவங்கிய நிலையிலேயே முடிவுற்றதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை டேனியலால்.
விகதகுமாரன் திரைப்படத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க, "திருவிதாங்கூர் பிக்சர்ஸ்" என்கிற பெயரில் வாங்கிய இரண்டரை ஏக்கர் இடத்தினையும் விற்றுவிட்டு, பல்மருத்துவம் படிக்க சென்னைக்குச் சென்றுவிட்டார் டேனியல்.
படிப்பு முடிந்தபின்னர், கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரத்தில் ஒரு பல்மருத்துவராக தன்னுடைய வாழ்க்கையைக் கழித்தார்.
இடையில் டேனியலிடம் மருத்துவம் பார்க்க வந்த நடிகர் பி.யூ.சின்னப்பா, மீண்டும் டேனியலுக்கு சினிமா ஆசையினை விதைக்க, தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் மீண்டுமொருமுறை சென்னைக்குக் கொண்டுசென்று சிலறால் ஏமாற்றப்பட்டு திரும்பினார்.
அவரது கடைசி காலம் முழுக்க, அகஸ்தீஸ்வரத்திலேயே கழிந்தது. மலையாளத்தின் முதல் திரைப்படத்தை எடுத்தவர் என்கிற அங்கீகாரத்தினை வழங்கவோ, வறுமையில்வாடிய அவருக்கு பென்சன் வழங்கவோ கூட மறுத்துவிட்டது அரசு.
இறுதியில் 1975 இல் அகத்தீஸ்வரத்தில் உலகம் அவரை அறிந்துகொள்வதற்கு முன்னரே இறந்துபோனார்.
அவருடைய வாழ்க்கையினை தேடிப் பிடித்து ஆவணமாக வடித்த சினிமா பத்திரிக்கையாளர் செல்லங்காடு கோபாலகிருஷ்ணனின் முயற்சியால், மலையாள சினிமாவின் தந்தையாக பின்னாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டார் டேனியல்.
அப்போதும் ஆதாரமாக பிலிம் சுருள் இல்லை.பிலிம் சுருளை டேனியல் மகன் விளையாட்டாகப் பாழ்படுத்தி இருக்க, கிடைத்தது பிட் நோட்டீஸ் ஒன்று மட்டுமே.
அதைக் கொண்டு முதல் படம் என நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டார் கோபாலகிருஷ்ணன்;காரணம் டேனியல் தமிழராகவும், மிகத் தாழ்த்தப்பட்டவர் ஆகவும் இருந்ததே.
அதை எல்லாம் தவிடு பொடியாக்கி ஆதாரங்களை அள்ளித்தந்து ஒரு வழியாக கேரள முதல் திரைப்படத் தயாரிப்பாளர் டேனியல் என ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டார்...
கலையும் திறமையும், தன்னுடைய சாதியடையாளத்தையும் ஏழ்மையையும் அடிமைத்தனத்தையும் ஒழித்துவிடும் என்கிற கனவில் இருந்த ரோசிக்கு இது மிகப்பெரிய துயர்.
அக்கலவரம் நிகழ்ந்த மூன்றாவது நாளில், ஆதிக்க சாதி வெறிக்கூட்டம், ரோசியின் வீட்டை முற்றுகையிட்டுக் கொளுத்தியது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டிலுள்ளோர் ஓடினார்கள்.
ஊரின் முக்கிய சாலை வரை, கொலைவெறியுடன் சாதிவெறியர்கள் ரோசியை விடாமல் துரத்திக்கொண்டே சென்றனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரி ஒன்றினை கைகாட்டி நிறுத்தி ஏறிக்கொண்டார் ரோசி. லாரி ஓட்டுனர் கேசவபிள்ளை ரோசியை மீட்டபின், இருவரும் நாகர்கோவிலுக்குச் சென்றுவிட்டார்கள்.
அங்கே வடசேரி சந்தைக்கு அருகே ஓட்டுப்புரா என்கிற தெருவில் மீண்டும் ராஜம்மா என்ற பெயருடன் கேசவபிள்ளையின் மனைவியாக தன் வாழ்க்கையைத்தொடர்ந்தார்.
மலையாளத்தின் முதல் நாயகியாகவும் மிகச்சிறந்த நடிகையாகவும் போற்றிப் புகழப்பட்டிருக்கவேண்டிய ரோசி, கவனிப்பாரற்று வாழ்ந்து 1988-இல் மரணித்தார்.
வெற்றி பெற்றவர்களின் வரலாற்றை படிப்பதைத்தானே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்... மலையாள சினிமாவின் முதல் நாயகியின் சினிமா எதிர்காலம், சாதிய ஒடுக்குமுறையால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்கிற வரலாற்றையும் நாம் அழுத்தமாக இன்றைய தலைமுறைக்கு சொல்லித்தருவதன்மூலம், சாதி எத்தனை வன்மம் நிறைந்தது என்பதை வலியுறுத்தமுடியும்!
--------------------------------------------------------------------படங்கள்:1.ரோசி 2.டேனியல் 3.விகதகுமாரன் படத்தில் ஒரு காட்சி 4. முதல் படம் திரையிட்ட இடம் 5. செல்லுலாயிடு படத்தில் ஒரு காட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக