வெற்றிவேலின் இடத்தை நிரப்பப் போவது யார் என்பது குறித்த விவாதங்கள் அமமுக தலைமையிலும், அதன் நிர்வாகிகள் இடையிலும் ஆரம்பித்துவிட்டன. அமமுகவின் பொருளாளர், சென்னை மண்டலப் பொறுப்பாளர் , வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் என முப்பெரும் பொறுப்புகளை கட்சியில் வகித்த வெற்றிவேல் தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னையை ஒட்டிய தொகுதிகளின் தேர்தல் செலவுக்காக ஒரு, பெரும் தொகையை வெற்றிவேலிடம் கொடுத்திருக்கிறார் தினகரன். தேர்தல் முடிந்ததும் அதற்கான கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு தினகரனை சந்தித்திருக்கிறார் வெற்றிவேல். ‘சார்...எலக்ஷன் செலவுக் கணக்கெல்லாம் இதுல இருக்கு’ என்று ஒரு ஃபைலை கொடுக்க, ‘அதெல்லாம் இப்ப யாரு உங்ககிட்ட கேட்டா?’என்று அதை வாங்கவே மறுத்துவிட்டார் தினகரன். அந்த அளவுக்கு வெற்றிவேல் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தவர் தினகரன். அதேபோல வெற்றிவேலும் சசிகலா, தினகரனுக்கு பெரிய விசுவாசியாக இருந்தவர். கடைசியாக சில மாதங்களில் தினகரனை வெற்றிவேலால் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் அவரது உத்தரவுக்கிணங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களை சென்னையில் தலைமை அலுவலகத்தில் நடத்தினார் வெற்றிவேல்.
இந்த நிலையில் வெற்றிவேலின் இழப்பு தினகரனுக்கு, சென்னை சுற்று வட்டார அமமுகவுக்கு, ஒட்டுமொத்த அமமுகவுக்கு என்ற மூன்று வகையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிவேலின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், ‘சென்னை மட்டுமில்ல, திருவள்ளூர், காஞ்சிபுரம் சுற்று வட்டாரத்துல எங்கயும் அமமுகவுக்கு சுவர் விளம்பரத்துல எந்த பிரச்சினை வந்தாலும் ஒத்தை போன்ல முடிச்சுடுவார் வெற்றிவேல்’ என்று பேசிக் கொண்டதை ஏற்கனவே மின்னம்பலம் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். பெரிய அளவு கரன்சி விவகாரம் முதல் போஸ்டர், சுவர் விளம்பரம் என்னும் களப் பிரச்சினை வரை அமமுகவுக்கு தூணாக நின்றவர் வெற்றிவேல்.
இப்படிப்பட்ட வெற்றிவேலின் இடத்தில் அடுத்து யார் என்று அமமுக வட்டாரத்திலேயே விசாரித்தோம்.
“வெற்றிவேலோடு இணைந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியவர்களில் மாநில பொறியாளர் அணி செயலாளரும், செங்கல்பட்டு வடக்கு மாசெவுமான கரிகாலன் மற்றும் தேர்தல் பிரிவுச் செயலாளரும் தென் சென்னை தெற்கு மாசெவுமான செந்தமிழன், தலைமை நிலையச் செயலாளர் மனோகரன் ஆகியோர் முக்கியமானவர்கள்.
இவர்களில் கரிகாலன் முன்னாள் தாம்பரம் நகராட்சி சேர்மன். செந்தமிழன் முன்னாள் அமைச்சர். இவ்விருவரில் ஒருவர்தான் வெற்றிவேலின் இடத்துக்கு ப்ரமோட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. செந்தமிழன் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், கரிகாலன் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இருவருமே தினகரனின் குட்புக்கில் இடம் பிடித்தவர்கள். எனவே வெற்றிவேல் மரணத்தால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப இவர்கள் இருவரில் ஒருவருக்கே அதிக வாய்ப்பு” என்கிறார்கள்.
அதேநேரம் வெற்றிவேல் வகித்த வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு தற்போது பெரம்பூர் அமமுக பகுதிச் செயலாளராக இருக்கும் லட்சுமிநாராயணன் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அம்பத்தூர் அமமுகவினர்.
-ஆரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக