செவ்வாய், 20 அக்டோபர், 2020

30 லட்சத்தை இழந்தேன்: ஆன்லைன் சூதாட்டத்தால் தீக்குளித்து இறந்த இளைஞர்!

  minnambalam: பலரைப் போலவே இவரும் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே மாறிய அவர், தன்னுடைய சேமிப்பு பணத்தை கட்டி அதனை இழந்ததோடு மட்டுமல்லாமல், கடன் வாங்கியும் விளையாடி இருக்கிறார். இந்த வகையில் சுமார் 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி இழந்திருக்கிறார். கடன் தொகை அதிகமானதால் மனமுடைந்த விஜயகுமார், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு முன்பாக தனது மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதில், “என்னை மன்னிச்சிடு மதி. என்னால ஒன்னும் பண்ண முடியல மதி. தூங்காம கண்ணெல்லாம் மங்கலா தெரியுது. உடம்பெல்லாம் போயி வீக் ஆயிடுச்சி மதி. நான் ஒரு ரூபா ரெண்டு ரூபா விடல மதி. கணக்குப் பாத்தா 30 லட்ச ரூபாய்க்கு மேல விட்ருக்கேன். தப்புதான். போதைமாதிரி விளையாடிட்டே இருந்துட்டேன். ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது.

அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி. தெரிஞ்சும் விளையாடினேன். இப்போக்கூட எனக்கு விளையாடனும்னு தோனுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியல.

நான் உன்னை அந்த அளவுக்கு லவ் பண்ணேன் மதி. பசங்கள பாத்துக்கோ. ரெண்டு அக்கவுண்ட்லயும் கொஞ்சம் கொஞ்சம் காசு இருக்கும். இப்போக்கூட அந்த ஆன்லைன் ரம்மி மேல் ஆப்ல இருந்து 17,000 ரூபாய் உன் அக்கவுண்டுக்குத்தான் ரீடம் பண்ணிருக்கேன். அது திங்கக்கிழமை உனக்கு கிரெடிட் ஆயிடும். இடத்தை வித்துடு. நகையெல்லாம் வித்துட்டு மதுரையில உங்க அம்மா வீட்டுக்குப் போயி செட்டில் ஆயிடு. ஏன்னா எங்க வீட்டுலல்லாம் யாரும் உன்னை அந்தளவுக்கு பாத்துக்க மாட்டாங்க. என்னை மட்டும் மறந்துடாத மதி (உடைந்து அழுகிறார்). ஒன்றரை வருஷத்துல வாழ்க்கை இப்படி மாறிடுச்சி. எப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேன் தெரியுமா ? டிஸ்ட்ரிபியூஷன்ல அப்படி இருந்தேன் நான்.

மூளையே வேலை செய்யல..அடிக்ட் ஆகிட்டேன்

இன்னைக்கு அந்த நெட்வொர்க்ல கேவலமா இருக்கேன். என்னால வேலையே செய்ய முடியல. லட்சக் கணக்குல சம்பாரிச்சேன். ஆனால் இன்னைக்கு என் மூளை வேலை செய்யல. எல்லாமே மங்கிப் போயிடுச்சி. ஒரு காலத்துல இந்தியன் மொபைல் டிஸ்டிரிபியூஷன் பேரு தமிழ்நாட்டுக்கே தெரியும். அந்தளவுக்கு என் பேரை ஃபேமஸ் பண்ணி வெச்சிருந்தேன். ஆனால் இந்த ரம்மில நான் அடிக்ட் ஆனதால என்னால பிசினஸ் பண்ணவே முடியல. பசங்கள ஒழுங்கா பாத்துக்க முடியல. உன்னை என்னால பாத்துக்க முடியல. என்னைவிட்டு எல்லாமே போயிடுச்சி. என்னால என்னை மாத்திக்க முடியல. எனக்கு இதவிட்டா வேற வழியே தெரியல மதி. அந்த ஐடியாவுல (சிம்கார்டு நிறுவனம்) ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல இருக்கு. அக்கவுண்ட்ல கொஞ்சம் கேஷ் இருக்கு. அது இல்லாம வீட்ல அந்த மஞ்சப் பையில கொஞ்சம் கேஷ் இருக்கு. பசங்கள பாத்துக்க மதி. இன்சூரன்ஸ், பாரதியார் பேங்கெல்லாம் க்ளோஸ் பண்ணிடு. ஒரு ரூபா, ரெண்டு ரூபாயா இருந்தாலும் எல்லாத்தையும் சுருட்டி ஒரே அமௌண்டா ஆக்கி எடுத்துட்டு உங்க ஊருக்குப் போயி. 5 லட்ச ரூபாய் இருந்தாலும் அத பேங்க்ல போட்டு அதுல வர்ற வட்டியை வாங்கி பசங்கள பாத்துக்க.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்

பசங்கள என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்த எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதுலயாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போச்சி, எம்புருஷன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும். இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி.

எனக்கு தெய்வம் நீ. என் தெய்வத்தை விட்டு நான் போறேன். பாப்பாவை பாத்துக்க மதி. பாப்பாவை கூட கூட்டிக்கிட்டு போயிலாம்னுதான் பாத்தேன். அந்த காரியத்தை பண்ண தைரியம் இல்ல எனக்கு. அப்பா இல்லாம எம்பொண்ணு எப்படி வாழுவான்னு தெரியல. இந்த ஆவியெல்லாம் உண்மையா இருந்தா உங்க கூடவேதான் இருப்பேன். உங்கள பாத்துக்கிட்டேதான் இருப்பேன். நான் எங்க செத்துக் கெடக்கறேனோ அங்கதான் என் வண்டியும், சின்ன போன், பெரிய போன் ரெண்டுமே என் வண்டிலதான் இருக்கு. சின்ன போனை பிரபு சாருகிட்டக் குடு. அவர் ஈ.சி பண்ணி அதை அமௌண்டா ஆக்கிடுவாரு. என்னை விட்ருங்க சந்தோஷம். எல்லாரும் என்னை முட்டாள், பைத்தியக்காரன்னு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மதி. ஆனால் என்னால முடியல.

என் மைண்ட் என்ன விட்டுப் போயிடுச்சி. எனக்காக ஒரே விஷயம் பண்ணு. இந்த ஆன்லைன் கேம் எல்லாத்தையும் தடுக்கற மாதிரி முடிஞ்ச அளவுக்கு எல்லா குருப்லயும் ஷேர் பண்ணி விடு. என்னாலயாவது அது நின்னதா இருக்கட்டுமே. நானே கடைசியா இருக்கட்டும். எனக்கு அதாவது சந்தோஷமா இருக்கும். நான் எவ்ளோ அமௌண்ட் விட்டேன்னு நீ தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா என் ஆந்திரா பேங்க் அக்கவுண்டையும், உன் இந்தியன் பேங்க் அக்கவுண்டையும் எடுத்து நீ செக் பண்ணா உனக்குப் புரியும். வெளிய சொல்ல முடியாத அளவுக்கு அமௌண்ட் அது. அதையெல்லாம் என்னால சம்பாரிக்கவே முடியாது. ஆனால் சம்பாரிச்சி விட்டுட்டேன். பச்சையப்பன்கிட்ட பத்திரம் மாட்டிக்கிட்டு இருக்கு. அத மூட்டு வித்து கடனை அடைச்சிடு. நீ உன் அம்மாகூட பேச ஆரம்பிச்சிட்டா மாறிடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ வாழு. பசங்கள பாத்துக்க. ஐ லவ் யூ மதி. நன்றி” என்று முடித்திருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எப்போது முடிவு வரும் என்று பல தரப்பினரும் காத்திருக்கிறார்கள்.

எழில்

கருத்துகள் இல்லை: