வியாழன், 22 அக்டோபர், 2020

பீகார் நிதிஷ் குமாருக்கு பின்னடைவு .. சட்டசபைத் தேர்தல் கருத்துக் கணிப்பு டைம்ஸ் நவ் - சி வோட்டர்

Vishnupriya R- tamil.oneindia.com : டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தல் தொடர்பாக டைம்ஸ் நவ் - சி வோட்டர் எடுத்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல்வர் நிதீஷ் குமார் யாத அரசின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர். பீகாரில் 3 கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ம் தேதியும், 2வது கட்டத் தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், 3வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும் நடைபெறவுள்ளன. நவம்பர் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இன்று டைம்ஸ் நவ் டிவியும்- சிவோட்டர்ஸும் இணைந்து எடுத்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. முதலில் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்ற முடிவு வெளியிடப்பட்டது. அதில் நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் முதல்வராக சரியாக இல்லை என்று 41.22 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். 29.2 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்று கூறியுள்ளனர். மிகவும் திருப்தி என்று சொன்னோர் எண்ணிக்கை 28.77 சதவீதமாகும்.  
சரி முதல்வராக அவர் எப்படி இருக்கிறார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதிலும் அவர் மீது திருப்தி இல்லை என்றுதான் பலரும் சொல்லியுள்ளனர். அதாவது 40.42 சதவீதம் பேர் அவர் மீது திருப்தியே இல்லை என்று கூறியுள்ளனர். ஓரளவு திருப்தி என்று 31.54 சதவீதம் பேரும், மிகவும் திருப்தி என்று 27.43 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் சிறந்த முதல்வராக அறியப்படும் நிதீஷ் குமார் தலைமையிலான அரசுக்கு இப்படி ஒரு கெட்ட பெயர் கிடைத்திருப்பது தேர்தல் சமயத்தில் எந்த அளவுக்கு அவரது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.<

கருத்துகள் இல்லை: