வெள்ளி, 23 அக்டோபர், 2020

தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் தாக்கு.. அணி மாற தயாராகிவிட்டார்?

 

dhinakaran :சென்னை: இங்குள்ள ஆட்சியாளர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என தமிழக அரசு மீது பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்பு அதிமுக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து வந்தார். அதிமுக அரசு மக்கள் நலத்திட்டங்களை சரிவர செய்வதில்லை என்றும், ஊழல் அரசாகவே இந்த அரசு செயல்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுக்களை வைத்து வந்தார். இந்தநிலையில், 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாமக திடீரென கூட்டணி அமைத்தது. அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் தொடுத்து வந்த நிலையில் திடீரென கூட்டணி வைத்தது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.



இதையடுத்து, கூட்டணியில் இருந்ததால் அதிமுக அரசை விமர்சிப்பதை நிறுத்தினார். இதேபோல், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக-பாமக கூட்டணி தொடருமா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், ஆந்திரத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி சொன்னதை செய்கிறார். ஆனால், இங்குள்ளவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை என கடுமையாக சாடியுள்ளார்.

ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசை திடீரென்று விமர்சனம் செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து வெளியேறி, கடந்த சட்டப்பேரவை தேர்தலைப்போல தனித்து போட்டியிடப் போகிறாரா? அல்லது அதிமுக கூட்டணியில் அதிக சீட்டுக்காக இந்த மிரட்டலில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது மாற்றுக் கூட்டணியில் சேர திட்டமிட்டுள்ளாரா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

* புத்தாண்டில் போராட்டம்
பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது பாமகவின் 40 ஆண்டு கால கோரிக்கை. இதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கொரோனா பாதிப்புகள் ஓரளவு குறைந்த பின்னர் புத்தாண்டில் வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இடஒதுக்கீட்டு போராட்டம் தொடங்கப்படும். நமது உரிமைகளுக்காக நாம் போராட வேண்டிய காலம் வந்து விட்டது. ‘போராட்டத்தை கைவிட்டு வாருங்கள். வன்னியர்கள் தனி இடஒதுக்கீட்டுக்கான உடன்பாட்டில் கையெழுத்திடுங்கள்’ என்று அரசு நமக்கு அழைப்பு விடுக்கும் வகையில் போராட்டம் கடுமையாக அமையும். இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: