aramonline.in : ஒரு பக்கம் பட்டினி வறுமை குறித்த நெஞ்சை கனக்க வைக்கும் செய்திகள், மறுபக்கம் தஞ்சை தரணியில் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நனைந்து வீணான செய்திகள்…என இரு வேறு இந்தியாவை பார்க்கிறோம்! ஒரு வாரத்திற்கு முன்பு மதுரை மாவட்ட திறந்த வெளி குடோனில்9,492 மெட்ரிக் டன் நெல்மூட்டைகள் நனைந்து வீணான செய்தி,அதைத் தொடர்ந்து,கடலூர்,திருநெல்வேலி…என ஒவ்வொரு இடத்திலும் பாழாகும் நெல்மணிகள் குறித்த செய்திகள்…என வந்து கொண்டே இருந்தன!
இந்த ஆண்டு என்றில்லை, ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு சில லட்சம் நெல்மூட்டைகள் வீணாகும் செய்திகள் வந்து கொண்டே தான் இருக்கிறது..?
ஏன் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மறுக்கிறார்கள்?
ஏன் இருக்கும் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள் தரும் நெல்மணிகளையோ, நெல் மூட்டைகளையோ பாதுகாப்பாக வைக்க அறைகள் கட்டப்படுவதில்லை? இத்தனை வருடங்களில் வீணான நெல் மூட்டைகளின் மதிப்பை கணக்கிட்டால் தமிழகத்தில் சுமார் ஆயிரம் இடங்களில் அரண்மனைகளையே கட்டியிருக்கலாம்!
அக்கறையற்ற ஆட்சியாளர்கள், திறமையற்ற நிர்வாகம், ஊழல் மிகுந்த பணியாளர்கள்…இதில் மாற்றமே நிகழாதா..? முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினையை எழுதி,எழுதி ஆட்சியாஅளர்கள் கவனத்திற்கு என் போன்றோர் கொண்டு சென்றும் எந்தப் பெரிய மாற்றங்களுமின்றி அவை தொடர்வது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது!
இந்தியா உலக நாடுகளில் 93 நாடுகளுக்கும் கீழ் நிலையில் மோசமான வறுமையாளர்களைக் கொண்ட நாடாகத் திகழ்கிறது. சுமார் 20 கோடி மக்கள் தினம் இரு வேளை உணவை உட்கொள்ள வழியின்றி ஒரு வேளை மட்டுமே உண்டு பட்டினி கிடக்கிறார்கள். பசியின் காரணமாக ஊட்டசத்து பற்றாகுறையால் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் மரணமடைகிறார்கள்…!
ஆனால், உலகிலேயே அதிகமாக உணவுப் பொருள்களை வீணடிக்கும் நாடாகவும் இந்தியா தான் இருக்கிறது. குறிப்பாக எந்தெந்த வழிகளில் உணவுப் பொருள்கள் விரயமாகின்றன என நாம் தெரிய வரும் போது வறுமை என்பது நமது அலட்சியத்தால்,பொறுப்பின்மையால் தான் உண்டானதேயன்றி, வேறு வகையில் அல்ல என தெரிய வரும்!
பசுமைபுரட்சி காலகட்டத்தில் உருவானவையே இந்த மையப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான சேமிப்புக் கிடங்குகள்…
# தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்வது…,
# அவற்றை போதுமான பாதுக்காப்பின்றி வைப்பது…
என்பது நவீன வேளாண்மை போக்குகளின் நாசகார விளைவுகளில் ஒன்றாகும்.
ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் {F A O } வெளியிட்ட தகவலின் படி
இந்தியாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான
உணவுப்பொரு??கள் அறுவடைக்கு முன்னும், பின்னும் வீணாகின்றன உண்மையில் இந்த
மதிப்பு பல லட்சம் கோடியாக இருக்க வாய்ப்புள்ளது!
இந்தியாவில் வீணாகும் கோதுமையின் அளவு ஆஸ்திரேலியாவின் ஓராண்டு கோதுமை உற்பத்திக்கு ஈடானது என்று சொல்லப்படுகிறது. அரிசியின் அளவோ மற்றுமொரு இந்திய மக்கள் தொகைக்கு சோறுபோடக் கூடியது…!
இப்படி லட்சக்கணக்கான டன் அரிசி மற்றும் கோதுமை சேமிப்பு கிடங்குகளில் வீணாவதைக்கண்டு உச்சநீதிமன்றமே இரு முறை இந்திய அரசை கடுமையாக எச்சரித்தது.
2001ஆம் ஆண்டு தான் முதன்முதலாக இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தன் கவலையையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியது. ஆனால் அரசின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாததை தொடர்ந்து 2010ல் பி.யூ.சி.எல் அமைப்பு தொடர்ந்த பொதுநல வழக்கில் மீணடும் உச்சநீதிமன்றம் கண்டனத்தோடு, ஏழைகளுக்காவது வநியோகிக்கும் படி கட்டளையிட்டது. ஆயினும் பலனில்லை!
காரணம் என்னவென்றால், அரசாங்கத்திற்கு உணவு தானியங்களை பாதுகாக்கவும், முறைப்படி விநியோகிக்கவுமான வல்லமை உண்மையிலேயே இல்லை என்பது தான்! ஆயினும் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அளவில் உற்பத்தியான உணவு தானியங்களை பாதுகாக்க பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்குகிறது.
அத்துடன் அதன் திறமையற்ற நிர்வாகம், அக்கரையின்மை, அலட்சியம் காரணமாக பெருமளவு தானியங்கள் வீணாகின்றன. இந்திய உணவு சேமிப்பு கிடங்குகளின் அவலமான பாராமரிப்பு குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது பத்திரிக்கைகளில் வெளியாகி பலரையும் பதைபதைக்க வைத்தாலும், ‘இதில் செய்வதற்கு என்ன இருக்கிறது..?’ என்ற தடுமாற்றமே தொடர்கிறது.
ஆனால், இதற்கு நமது பழந்தமிழர் கடைபிடித்த உணவுதானிய பாதுகாப்பு மற்றும் சேமிப்பு முறைகளிலிருந்து தான் தெளிவான விடை கிடைக்கிறது.
இதன்மூலம் மையப்படுத்தப்பட்ட பிரம்மாண்டமான சேமிப்பு கிடங்குகளை அமைப்பது தான் முதல் தவறு என நமக்குப் புரிய வருகிறது.உணவு தானியப்பாதுகாப்பு என்பதை அந்தந்த கிராமம் அல்லது ஊரைச் சேர்ந்த விவசாயிகளிடமே அரசு விட்டுவிடவேண்டும். இதன்படி பஞ்சாயத்திற்கோ அல்லது சில கிராமங்களை உள்ளடக்கிய ஒன்றியத்திற்கோ தான் உணவுதானியங்களை பாதுகாக்கவும், விநியோகிக்கவுமான கடமையும், அதிகாரமும் தரப்படவேண்டும். இந்நிலையில் தாங்களே உறபத்தி செய்த ஒன்றை அவர்கள் ஒரு போதும் அழியவிடமாட்டார்கள். கண்ணுங்கருத்துமாக பாதுகாப்பார்கள். இது தான் இயல்பானதாகவும் இருக்கும். நடைமுறை சிக்கல்களை பெருமளவு தவிர்க்கும். அந்த காலத்தில் இப்படித்தான் இருந்தது.
ஆனால் தற்போது என்ன நடக்கிறது?
தமிழகத்தில் சுமார் 1500 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் சரியான நேரத்திற்கு நெல்கொள்முதல் பண்ணாதது அல்லது அறுவடையான நெ??லை வாங்க மறுப்பது முதல் கட்ட பிரச்சினை என்றால், நெல்கொள்முதலின் போது எடையில் தொடங்கி ஈரப்பதம் வரையிலும் எல்லாவற்றிலும் தகிடுதத்தம் அரங்கேறி வருகிறது. ஈரப்பத நெல்லை முறையாக காயவைப்பதில் அக்கரையின்மை, தூற்றுவதில் அலட்சியம். அதன்பிறகு நெல்லை ஊறவைக்கும் போது ஒவ்வொரு முறையும் தண்ணீர் மாற்றாததால் அதன் நிறமும், தரமும் மோசமாவது, அத்துடன் ரைஸ்மில்லில் நடக்கும் தவறுகள், சேமிப்பு கிடங்கின் நிர்வாகத்திறமையின்மை, ரேஷன் கடை செல்வது வரை ஒவ்வொரு டிரான்ஸ்போர்ட்டிலும் ஏற்றி இறக்கும் போதும், கொக்கிபோட்டு தூக்கும்போதும் ஏற்படும் தானிய விரயம்…. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்தால் கொள்முதல் செய்யப்படும் தானியங்களில் சுமார் 40% வீணாகிவிடுகிறது.
நமது அரசு இரண்டுவிதமான வழிமுறைகளில் உணவு தானியங்களை பாதுகாக்கிறது.
ஒன்று திறந்தவெளி சேமிப்பு கிடங்கு. இதில் பெரிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான அரிசி அல்லது கோதுமை மூட்டைகளை ஒன்றின்மேல் ஒன்றாக பல வரிசைகளில் அடுக்கி வைக்கின்றனர். இதை பிரம்மாண்டமான தார்பாய் கொண்டு மூடி வைக்கிறார்கள். பெருமழை, வெள்ளத்தின் போது இதன் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
மற்றொன்று மிகப்பெரிய கட்டிடங்களில் உள்ள பிரம்மாண்ட அறையில் வரிசையாக அடுக்கி வைக்கிறார்கள் வருடக்கணக்கில் இவை வைக்கப்படுகின்றன. அ??வப்போது பூச்சி மருந்துகளை ஸ்பிரே செய்துவிட்டு கதவை மூடிவிடுகிறார்கள். ஆனால இந்த பூச்சி மருந்துகள் ஒரளவுக்கே தாக்கு பிடிக்கின்றன. தானியங்கள் எடுக்கப்படாமல் நீண்டநாட்கள் தொடர்கையில் இந்த கிடங்குகளில் பெரும் பூச்சி பட்டாளமே உருவாகிவிடுகிறது. இவை இந்த கிடங்கை சுற்றி ஐந்தாறு கி.மீட்டர் வரையிலும் உள்ள குடியிருப்புவாசிகளை நடமாடவே முடியாமல் படாய்படுத்துமளவுக்கு பெருகி துன்புறுத்தும் சம்பங்களும் அடிக்கடி நடக்கின்றன.
ஒரு கிலோ நெல் உற்பத்திக்கு மட்டுமே சுமார் 1500 லிட்டர் தணணீர் செலவாகிறது எனும் போது நாம் பலலட்சம் அரிசியை மட்டுமா வீணடிக்கிறோம்? உற்பத்திக்கு மூலாதாரமான பல டி.எம்.சி தண்ணீர், மண்வளம், உரம், உழைப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஒரு சேர அழிக்கிறோம்!
நம் தமிழர் மரபில் எந்த மன்னராட்சி காலத்திலும் இது போன்ற மடமை அரங்கேறியதில்லை. பொதுவாக நெல்லை மிஷினில் கொடுத்து அரிசி ஆக்காமல் அப்படியே வைத்தால் அது நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்கும். அரிசியை பாதுகாக்க அந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி இதுவே சிறந்த வழி முறையாகும். தேவைப்படும் போது அதை அரிசி ஆக்கி கொள்வதன் மூலம் பெரும் விரயத்தை தடுக்கலாம். மன்னராட்சி காலங்களில் நெல்மணிகளை பாதுகாக்க கோட்டை கொத்தளங்களில மிகப்பெரிய அறைகளை கட்டி சிறப்பாக பாதுகாத்தார்கள்.
இதைப் போலவே அன்றைய விவசாயிகளும், நமது முன்னோர்களும் நெல்மணிகளை தங்கள் கண்மணிகளாய் காப்பதற்கு கடைபிடித்த மரபுசார் அறிவு நம்மை மலைக்க வைக்கிறது!
பொதுவாக நமது விவசாயிகள் தங்கள் வீட்டிலேயோ அல்லது வீட்டிற்கருகிலோ தானியக்குழிகளை அமைத்துக் கொள்வார்கள். இந்தக் குழிகளின் சுற்றுச்சுவரில் சுண்ணாம்பு, மணல், முட்டை ஆகியவை கொண்ட கலவையால் பூசுவார்கள். இதில் வைக்கும் தானியங்களோடு சற்றே சாம்பலையும் சேர்த்தே வைப்பார்கள். குழியின் மேற்பலகையை கருங்காலி, தேக்கு அல்லது தனக்க மரப்பலகையால் மூடிவிடுவார்கள். இந்த தானியங்கள் தலைமுறைகளைத் தாண்டியும் கெடாமல் இருந்துள்ளன என்பது தான் ஆச்சரியப்படத்தக்க அம்சமாகும். இதைத்தவிர செம்மண், மணல், சாணம் ஆகியவற்றின் துணையோடு வைக்கோலும் மூங்கிலும் கொண்டு உருவாக்கப்படும் குதிர்கள் மிகவும் பிரபலமானவை. இப்பவும் இந்த பாரம்பரிய பாதுகாப்புமுறைகளை சில கிராமங்களில் பார்க்கலாம். மேலும் நாணல் புற்குதிர்களை இன்றளவும் சில விவசாயிகள் வைத்துள்ளனர்.
ஒவ்வொரு கோயில் கோபுர கலசங்களிலும் விதைநெல்லை பாதுகாப்பாக வைக்கும் மரபின் தொடர்ச்சி இன்று ஒரு சடங்காக மாறி உள்ளது. ஆனால் அக்காலத்திலோ மழை வெள்ளத்தால் அனைத்து விதை நெல்மணிகளையும் இழக்க நேர்ந்தால் ஆலயகோபுரக்கலச நெல்மணிகள் ஆபத்துக்கு உதவும் என்ற எண்ணத்தை உள்ளடக்கியே வைக்கப்பட்டது.
இவ்வாறாக மரபுசார் அறிவாலும், மதிக்கத்தக்க ஆன்மீக வழிமுறைகளாலும் அன்றைய தினம் தானியங்கள், விதைநெல் ஆகியவை பாதுகாக்கப்பட்டன.
மகாத்மா காந்தி வலியுறுத்திய தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறிய உள்ளாட்சி அமைப்புகள் வலுவுடன் கட்டமைக்கப்படுவதன் மூலம் மட்டுமே உணவு சேமிப்பு, உணவுபாதுகாப்பு, உணவுவிநியோகம் ஆகியவை சிற்ப்பாக நடந்தேறும்.
உள்ளாட்சி அமைப்புகள் நெற்கிடங்கை தாங்களாகவே அமைத்தும் கொண்டு தேவைப்படும் போது மட்டும் அதை அரிசியாக மாற்றிககொள்வதின் மூலம் அரிசி புழுத்துப்போகவோ, மக்கவோ, ஒரு போதும் வாய்ப்பில்லாத நிலை ஏற்படும்.
மையப்படுத்தப்பட்ட ஒரு அதிகார அமைப்பு என்பது அலட்சியம், அக்கரையின்மை, பற்பல இடங்களுக்கு பயணப்படும் போது ஏற்படும் இழப்புகள், ஊழல், ஊதாரித்தனம், பெரும் பணம்விரயம் போன்றவற்றுக்கே வழிவகுத்து விட்டது என்பது தான் நிகழ்காலம் நமக்கு கற்பிக்கும் பாடமாகும்.
விவசாயிகளை உற்பத்தி செய்து தந்துவிட்டு வெறுமனே வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாகவும், அதிகாரமற்றவர்களாகவும் ஆக்கிவிட்ட நிகழ்கால அதிகார கட்டமைப்பை அடியோடு மாற்றினால் தான் உணவு தானிய விரயத்திற்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும்.
கூட்டுறவு அமைப்புகளை புதுப்பித்து அந்த அமைப்புகளிடமும் உணவு பாதுகாப்பை தரலாம். மத்திய அரசு ராணுவம் போன்ற அத்தியாவசிய தேவைக்கு வேண்டுமானானல் தானியங்களை வாங்கி சேமித்து வைத்து கொள்ளலாம்.
மையப்படுத்தப்பட்ட நிர்வாக அணுகுமுறையை தவிர்ப்போம். மரபுசார் அறிவை மீட்டெடுப்போம். பாடுப்பட்டு உழைத்ததன் மூலமாக பூமித்தாய் கொடையாக கிடைத்த விவசாய உணவுப்பொருட்களை வீணடிக்காமல் பாதுகாப்போம். பழாகும் நெல் மணிகளை காப்பாற்ற முடிந்தாலே பட்டினியில்லா இந்தியா சாத்தியமாகிவிடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக