நியூ ஸிலாந்தில் அண்மையில் நடந்த தேர்தலில் இலங்கை மானிப்பாய் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர் வனுஷா சீதாஞ்சலி வால்டர் ராஜநாயகம் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார் .. நியூ ஸிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் வனுஷா ராஜநாயகத்திற்கு வாழ்த்துக்கள் Vanushi Sitanjali Walters Rajanayagam from Manipay jaffna .Srilanka .. New Zealand's Labour Party
BBC :நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது .நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைப்பார் என்று கருதப்படுகிறது.இன்று (சனிக்கிழமை) நடந்த வாக்கெடுப்பில் 27 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள எதிர்க்கட்சியான மைய - வலதுசாரி கொள்கை கொண்ட தேசிய கட்சி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த செப்டம்பர் நடந்திருக்க வேண்டிய இந்த பொதுத்தேர்தல் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
உள்ளூர் நேரப்படி, இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு ஏழு மணியளவில் முடிவுற்ற நிலையில், உடனடியாக வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
எனினும், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி அக்டோபர் 3ஆம் தேதி முதல் வாக்களித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தலுடன் இருவேறு பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகளிலும் வாக்களிக்குமாறு அந்த நாட்டின் வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.
வரலாற்று சிறப்புமிக்க வெற்றி
2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 48.9 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து நாட்டின் தேர்தல் ஆணையம், இதுவரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சி 49% வாக்குகளையும், தேசிய கட்சி 27% வாக்குகளையும், ஏசிடி மற்றும் பசுமைக் கட்சிகள் ஆகியவை தலா 8% வாக்குகளையும் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.<>வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி குறித்து மக்களிடையே உரையாற்றிய ஜெசிந்தா, "நியூசிலாந்து மக்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிலாளர் கட்சிக்கு தங்களது மிகப்பெரிய ஆதரவை அளித்துள்ளனர். வாக்குகளை அடிப்படையாக கொண்டு அல்லாமல், அனைத்து நியூசிலாந்து மக்களுக்குமான ஆட்சியை எங்களது கட்சி வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்" என்று அவர் கூறினார்.
ஜெசிந்தாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள தேசிய கட்சித் தலைவர் ஜூடித் காலின்ஸ், தனது கட்சி "வலுவான எதிர்க்கட்சியாக" இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலை மனதில் கொண்டு பேசிய அவர், "கண் சிமிட்டும் நேரத்தில் மூன்றாண்டுகள் கடந்துவிடும். நாங்கள் திரும்பி வருவோம்" என்று மேலும் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க தேவையான 64 இடங்களை ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1996இல் கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவம் (எம்.எம்.பி) என அழைக்கப்படும் புதிய வாக்களிப்பு முறை நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அங்கு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவுக்கு முன்னதாக, இதுபோன்றதொரு வெற்றியை இந்த முறை ஜெசிந்தா தலைமையில் தொழிலாளர் கட்சி பெறுமா என்று வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்து இருந்தனர்.
முந்தைய கட்சித் தலைவர்கள் பெரும்பான்மையைப் பெற முயற்சி செய்தாலும் அவர்களால் இயலவில்லை என்று ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெனிபர் கர்டின் கூறுகிறார்.
பருவநிலைக்கு தகுந்தவாறு கொள்கைகளை வகுத்தல், பள்ளிகளுக்கான நிதியுதவியை அதிகரித்தல், செல்வந்தர்களுக்கான வருமான வரியை அதிகரித்தல் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை இந்த தேர்தலுக்காக ஜெசிந்தா முன்வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியான தேசிய கட்சி, நாட்டின் உள்கட்டமைப்பில் முதலீட்டை அதிகரிப்பது, கடனை அடைப்பது மற்றும் தற்காலிகமாக வரிகளை குறைப்பதாக உறுதியளித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக