சசிகலாவைப் பற்றி எண்ணற்ற தகவல்கள் வெவ்வேறு ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் உடல்நிலை குறித்து அவரது உறவினர்களின் கவலை குறித்து மின்னம்பலத்தில் வெளியிட்ட செய்தியை, அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கவனத்துக்கு பலரும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மின்னம்பலத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
“என் கட்சிக்காரரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து மென்மேலும் குழப்பமான சூழல் தொடர்ந்து ஏற்பட்டு வந்ததால், மேற்படி தங்களது 25.9-2020 தேதியிட்ட செய்தியை பதிவிறக்கம் செய்து அதன் நகலினை என்னுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதத்துடன் இணைத்து எனது கட்சிக்காரருக்கு அனுப்பினேன்.
மேற்படி எனது கடிதத்துக்கு சிறைத் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக எனது கட்சிக்காரர் ஒரு பதில் கடிதத்தை பதிவுத் தபால் மூலம் எனக்கு அனுப்பியுள்ளார். எனது கட்சிக்கார் வி.கே. சசிகலா அவர்களால் எனக்கு அனுப்பப்பட்ட பதில் கடிதம் பின் வருமாறு...” என்று குறிப்பிட்டு சசிகலா எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.
அந்தக் கடிதத்தில்...
தங்களுடைய 6-10-2020 தேதியிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றேன். விவரங்களை அறிந்துகொண்டேன். நாங்கள் நலமாக இருக்கிறோம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கோவிட் காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது. கோவிட் நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும் பிற மாநில மக்களும் கோவிட் நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு, சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.
கோவிட் காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து , ‘நேர் காணல்’களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர்காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ள சசிகலா... தனது விடுதலை பற்றியும் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபடி சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி ஃபைன் தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும்.
கர்நாடக நீதிமன்றத்தில் ஃபைன் கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் 14-2-2017 தேதிய தீர்ப்பு வழக்கு விஷயத்தில், சட்டப்படியாக குயூரிட்டி மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அதுபற்றி திரு. டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்” என்று கூறியுள்ளார் சசிகலா. இதன் மூலம் தனக்கும் தினகரனுக்கும் இடையே இடைவெளி ஏதும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில் சசிகலா, ” தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணைய தள செய்தியைப் படித்துப் பார்த்தேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்னம்பலம் இணைய தள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது.
உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய்ச் செய்தியை உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். நான் வணங்கும் இறைவன் ஆசியோடும்.என் உடன் பிறவா அக்காவின் ஆசியோடும் அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ள சசிகலா அதிமுக தொண்டர்களின் வாழ்த்து தனக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
”மின்னம்பலம் இணையதள செய்திப் பொறுப்பாளருக்கு என்னுடைய இந்த கடித விவரத்தைக் குறிப்பிட்டு, 25-9-20 தேதியிட்ட செய்தி தவறான செய்தி என்று வெளியிட சட்டப்படியான நடவடிக்கையை தாங்கள் எடுக்கவும்” என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் சசிகலா.
தனக்கு சசிகலா எழுதிய மேற்கண்ட கடிதத்தைக் குறிப்பிட்டு நமக்கு சட்ட ரீதியான கடிதம் அனுப்பியுள்ளார் அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன்,
சசிகலாவின் உடல்நிலை பற்றி மின்னம்பலத்தில் வெளியான செய்தியில் எந்த உள் நோக்கமும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சசிகலா எவ்வித உடல்நல கோளாறும் இன்றி ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மின்னம்பலத்துக்கு சசிகலா அனுப்பிய இந்தக் கடிதம் மூலம் அவரது உடல்நிலை, விடுதலை பற்றிய அவரது நம்பிக்கை, அதன் பிறகான அவரது சட்ட நடவடிக்கைகள் பற்றிய விவரங்களைத் தெளிவாக்கியிருக்கிறார் சசிகலா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக