சனி, 24 அக்டோபர், 2020

மாணவர்களின் கல்விக்கு ஆளுநர் தடையாக நிற்கிறார்! அதை திசை திருப்புகிறதா திருமாவின் மனுவுக்கு எதிரான போராட்டம் ?

Prabhu Rajadurai: · உடல் முழுவதும் கொழுப்பும், மனதில் வெறுப்பும் சுமந்து

கொண்டு ஒரு தனி நபர் ‘கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனுக்காக’ இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக நின்று கொண்டிருக்கிறார்; தமிழகத்தின் பொது விவாதம் மனு ஸ்மிருதியை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறிய இரு நாட்களில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கிறது. அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று பல அரசியல் சட்ட நிபுணர்களால் கருதப்பட்டாலும், அதை நீதிமன்றம் சொன்ன பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நடைமுறைக்கு வந்து, பல நூறு கல்லூரி இடங்களும் வேலை வாய்ப்புகளும் தினந்தோறும் உருவாக்கித் தரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
-oOo-
மனு ஸ்மிருதியை தடை செய்ய வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகளின் கோரிக்கை வேடிக்கையாக இருக்கிறது. இந்து திருமண சட்டமும், வாரிசுரிமை சட்டமும் 1955-56ல் இயற்றப்பட்ட பிறகு மனுநீதிக்கு நமது நீதிமன்றங்களில் வேலையே இல்லாது போயிற்று.   
மனு நீதிக்கு தடை என்றால் 1956க்கு முன்பு வந்த நீதிமன்ற தீர்ப்புகளையும் தடை செய்தால், எனது அலுவலகத்தில் ஒரு முழு அலமாரி காலியாகி விடும்.
ஒன்றிரண்டு பிராமண உபாசகர்கள்தாம், இன்னமும் மனு ஸ்மிருதியை பிடித்துக் கொண்டு மற்ற பார்ப்பனர்களை சங்கடப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் சொல்கிறாரே என்று நான் கூட நேற்றுப் படித்தேன். பெண்களைப் பாதுகாப்பதில் மனுவிற்கு இருந்த பதட்டம், இனத்தூய்மையை பேணுவதான நாஜித்தனம்.
இரண்டுமே இன்று தோற்றுப் போன நிலையில் ஒரு ‘சமுகவியல்’ ஆய்வு நோக்கில் யார் வேண்டுமானாலும் மனுவைப் படிக்கலாம். தவறில்லை.
பெண்களை மற்றவர்களின் கண்களிலிருந்து முக்கியமாக பிற இனத்தவர்களிடமிருந்து பொத்திப் பாதுகாக்க வேண்டிய பதட்டத்தில் வெளிப்படும் கருத்துகளாகத்தான், ‘பெண்கள் காமத்தில் பலகீனமானவர்கள், மற்றவர்களை மயக்கி விடுவார்கள்’ என்ற ரீதியில் கூறப்படுவதை எல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. மற்றபடி விபசாரிகளாகப் பிறக்கிறார்கள் என்ற திருமாவளவனின் கூற்றை முழுக்கத் தேடியும் கிடைக்கவில்லை.
‘பத்திரமா பாத்துக்கணும் நீ இவள’ என்று மாரி செல்வராஜின் ஜோ மறுகி உருகுவதில் கூட மனுவின் எச்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருப்பதை சொன்னால் சிலருக்கு கோபம் வரலாம்.
-oOo-
‘ரத்தம் எல்லாம் கொதிக்காது’ என்ற நம்பிக்கையிலிருப்பவர்கள் முழுவதும் வாசித்தால், சில சுவராசியங்கள் அகப்படலாம்.
பெண்களின் பெயர்கள் எளிதில் உச்சரிக்கக் கூடியதாகவும், கேட்பதற்கு பயங்கரமாக இல்லாமல் இனிமையானதாகவும், எளிய அர்த்தமுடனும் முக்கியமாக இறுதியில் நீண்ட உயிரெழுத்துடன் முடிய வேண்டுமாம். அதாவது கவிதா, இலக்கியா என்று.
பெண் வழக்குரைஞர்கள் அகராதி, ஆம் அகராதிதான், நிலவுமொழி என்று பெயர் வைத்து மனுவுக்கு எதிராக புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
குஷ்பு நிலைதான் பரிதாபம். தமிழக இளம் பெண்களில் பலர் திருமணத்துக்கு முன்பே உறவு கொண்டு விடுகிறார்கள் என்று கூறியதை இங்கு பிரச்னையாக்கி ஒருவழியாக அதிலிருந்து மீண்டவர், இப்போது அவரது முன்னாள் எதிரிகளின் ஆயுதத்தை திருமாவளவனுக்கு எதிராக கையில் எடுத்திருக்கிறார். நடிகைகளில் தனது அறிவாற்றலால் நம்மை வியக்க வைத்தவர். பாவம்.
‘I grant that the ordinary practice is for Hindus of the higher castes to marry virgins’ 1940ம் வருடம் நமது உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கருத்தினை இன்று எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? அப்ப சூத்திரன் பெண்டாட்டி எல்லாம் டேஷா? என்றுதானே.
இதை வேறு வகையில் பார்த்தால் விதவை மறுமணம் என்பது மனு தயவில் மற்ற மூன்று வகுப்பினருக்கு மறுக்கப்பட்ட உரிமை.
ஏற்கனவே மணம் முடித்த பெண் மறுமணம் செய்வது என்பது நாலாவது வருணத்திற்கு மறுக்கப்பட்டதல்ல என்ற அர்த்தத்தில் திருமணப் பெண் ஏற்கனவே உடலுறவுக்குட்பட்டவள் என்பதால் அந்த திருமணம் செல்லாது என்று கணவன் கோர முடியாது என்று தீர்ப்பு கூறப்பட்டது.
எண்பது வருடங்களுக்கு முன்பு கூறப்பட்ட தீர்ப்புகளைப் படித்தால், மற்றவர்கள் மனு நீதியில் மனிதர்களாகக் கூட கருதப்படாத காரணத்தால், நாலாவது வருண பெண்களுக்கு மேல் வகுப்பு பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் சிலவற்றை வழங்க நீதிபதிகள் தைரியம் கொண்டதை உணரலாம்.
மாணிக்கம் எதிர் பூங்காவனமம்மாள் (1934) என்ற வழக்கில் நாயுடு வகுப்பை சேர்ந்த நபர் ஆதி திராவிட பெண்ணை மணந்து வாழ்ந்த பின்னர் அந்தம்மா ஐந்தாவது வருணம், நான் சூத்திரன் கொஞ்சம் அந்தஸ்து ஜாஸ்தி என்று வாதாடிப் பார்த்தார். நீதிமன்றம் மனு நீதி அதிகாரம் பத்து வசனம் 4லில் ஐந்தாவது வருணம் என்று ஒன்று கிடையாது என்று கூறப்பட்டுள்ளதை வைத்து இரண்டு பேரும் சூத்திரர்தான். உங்களுக்குள் மேல் கீழ் எல்லாம் கிடையாது’ என்று அந்த வாதத்தை நிராகரித்திருக்கிறது.
மைனர் சவுந்திரராஜன் (1915) என்ற வழக்கில் நாட்டுக்கோட்டை செட்டியார் வகுப்பை சேர்ந்தவர் நாங்கள் எடுபுடி வேலை எல்லாம் செய்வதில்லை, லேவாதேவி, வியாபாரம் என்று சிறப்பாக இருக்கிறோம், எனவே நாங்கள் வைசியர்கள் என்று கூறிப்பார்த்தார். அதற்கு நீதிமன்றம் கூறிய பதில், ‘In fact, it sounds very grotesque now-a-days in the ears of many cultured Hindus to call that community Sudras and not Vaisyas’
மனுநீதியும் சரி இத்தகைய தீர்ப்புகளும் சரி வரலாற்றை திரும்பிப் பார்க்கவும், தற்போது நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை தீர்ப்பதற்கும் பயன்படலாம். தடை என்பது எல்லாம் வெற்றுக் கோஷங்கள்.
-oOo-
அது மனு நீதியோ அல்லது கந்தர் சஷ்டி கவசமோ, புண்பட வேண்டிய பாரதீய் ஜனதா மிக்க குஷியாகி விடுகிறார்கள். எனக்கென்ன என்று போக வேண்டிய திமுக கவலை கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
ஆளுநரின் அகங்கார செயலின்மையை எதிர்த்து திமுக போராட்டம் அறிவிக்கிறது. நீட் பிரச்னையில் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதை மறக்கடித்து திருமாவை ஏன் கண்டிக்காமலிருக்கிறார் என்று அந்தப் பக்கமும், கலைஞர் இருந்திருந்தால் இப்படி சும்மாயிருந்திருப்பாரா என்று இந்தப் பக்கமும் சமூக ஊடகங்களில் ஸ்டாலினை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எடப்பாடின்னு ஒருத்தர் அங்கே தனியாக, ஸ்மைல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.   

கருத்துகள் இல்லை: