வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிகார்: சிறையில் இருந்து லாலு பிரச்சாரம்!

minnampalam : ிகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர், நவம்பரில் இரு கட்டங்களாக நடக்க இருக்கும் நிலையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைமையிலான மகா கத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கு இடையே ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி மத்தியில் பாஜகவோடு கூட்டணி, மாநிலத்தில் தனியாக நின்று என இரட்டை நிலைப்பாட்டோடு தேர்தலை சந்திக்கிறது.கடந்த சில நாட்களாக பிகார் தேர்தல் பரப்புரை கொரோனா ஊரடங்கையெல்லாம் மதிக்காமல் பரபரப்பாக பெருங்கூட்டத்தோடு நடைபெற்று வருகிறது. இன்று (அக்டோபர் 23) முதல் பிரதமர் மோடி பாஜக சார்பில் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இந்த நிலையில் ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் லாலு பிரசாத் யாதவ் இந்த தேர்தலில் சிறையில் இருந்தே தனது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ்வை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கும் மகா கத்பந்தன் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் பெருங்கடலாகத் திரளுகிறது. 15 வருடங்களாக இருக்கும் நித்திஷ்குமாரின் ஆட்சிக்கு எதிரான கருத்துருவாக்கத்தை லாலுவின் மகன் தேஜஸ்வி பெரிய அளவில் செய்து வருகிறார். அவர் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில், கிரிக்கெட் மைதானங்களில் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை அட்டைகளில் எழுதிக் காட்டுவது போல் மக்கள், ‘மிஸ் யு லாலு’ என்று எழுதி அதை தேஜஸ்வியிடம் காட்டுகிறார்கள்.

இப்படி மாநிலமெங்கும் மகா கத்பந்தனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்ற தகவல்களுக்கு இடையேதான், இதை மாற்றும் அளவுக்கு கொரோனாவுக்கு தடுப்பூசி இலவசம் என்ற, ‘இலவச வாக்குறுதியை’ தனது தேர்தல் அறிக்கையில் பாஜக முன் வைத்திருப்பதாக பிகார் அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மூலம் பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் லாலு பிரசாத் யாதவ்.

2017 ஆம் ஆண்டு முதல் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ், “அன்பிற்குரிய நண்பர்களே! சிறையில் இருக்கும்போது, எனது ட்விட்டர் கணக்கு எனது அலுவலகத்தால் குடும்பத்துடன் கலந்தாலோசித்து இயக்கப்படும். சிறையில் என்னை சந்திக்கும் பார்வையாளர்கள் மூலம் என் கருத்தை நான் வெளிப்படுத்துவேன். அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எனது போராட்டம் தொடரும்”என்று குறிப்பிட்டிருந்தார் லல்லு.

அதன்படியே இந்த தேர்தலிலும் தனது ட்விட்டர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கிறார் லாலு, “மக்கள் பிகாரை ஆள உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு தந்த போதும் நீங்கள் (நித்திஷ்) அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டீர்கள்”என்று குறிப்பிட்டுள்ளார் லாலு. மேலும் பிகாரின் இப்போதைய ஆட்சியை இரட்டை இன்ஜின் கொண்ட ரயில் என்றும் லாலு விமர்சித்து வருகிறார். இதையே தேஜஸ்வியும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகிறார்.

தேஜஸ்வி யாதவ்வின் பிரச்சாரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை லாலுவின் ஒரு வரி ட்விட்டர் பதிவுகளுக்கும் பிகார் ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் கொடுக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆன பின்னும் பிகார் அரசியலில் லாலுவுக்கு உரிய முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. ‘சமோசாவுக்குள் ஆலு இருக்கும் வரை அரசியலில் லாலு இருப்பான்’ என்று அவர் தன்னைப் பற்றி சொன்னதை இன்றைய பிகார் தேர்தல் மெய்ப்பித்து வருகிறது.

ஆரா

கருத்துகள் இல்லை: