ஏற்கனவே கோவை மாவட்டத்திற்கான ஆய்வுக் கூட்டத்தை தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு நேரடியாக சென்று நடத்தினார். இதேபோல திருப்பூர் மாவட்ட திமுக ஆய்வு கூட்டத்தையும் நேரு நடத்தினார். அவர் நடத்திய ஆய்வின் அடிப்படையில் கோவை மாவட்ட திமுக , இரு சட்டமன்ற தொகுதிகள் ஒரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதேபோல கொங்கு பகுதியில் மற்ற மாவட்டங்களும் பிரிக்கப்படுமென திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அதற்குப் பிறகு ஆய்வுக் கூட்டங்களோ, நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படாத நிலையில்... 21ஆம் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகளை ஆலோசனைக்கு அழைத்தார் ஸ்டாலின். இவர்களில் குறிப்பாக திருப்பூர் திமுகவினர், "நேருவே நேரா வந்து ஆய்வு நடத்தியும் எல்லாக் குறைகளையும் அவர்கிட்ட வெளிப்படையாகச் சொன்ன பிறகும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதுக்குள்ள தலைமைக்கு கூப்பிட்டு அப்படியென்ன ஆய்வு பண்ணப் போறாங்க", என்ற கேள்விக் குறியுடன் தான் வந்தனர்.
கொங்கு பகுதியில் திமுகவின் வாக்குவங்கி 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்திருப்பதாக அண்மையில் பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் திமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.இதனை மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டோம்.
கொங்கு பகுதி , சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பது வழக்கம் என்ற நிலையில்... இம்முறை கொங்கு பகுதியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதால் அவரே முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருப்பதால், கொங்கு அமைச்சர்களின் செல்வச் செல்வாக்கு அதிக அளவு இருப்பதால் அதிமுகவுக்கு ஆதரவு தளம் இன்னும் உறுதி அடைகிறது என்பதே கொங்குப் பகுதியின் தற்போதைய நிலவரம்.
இதனை திமுக எதிர்கொள்ளப் போவது எப்படி என்பதுதான் திமுக தலைமையில் ஆலோசிக்கப்பட்ட முக்கியமான விஷயம். கொங்கு பகுதியில் கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயமும் அருந்ததியர் சமுதாயமும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் கொங்கு வேளாளர் சமுதாயத்தினர் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என்ற காரணத்தால் அதிமுகவோடு மேலும் ஒன்றுபடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட நிலையில்... திமுக கூட்டணியில் இருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உடனடியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த வாழ்த்து முழுக்க முழுக்க கொங்கு பகுதிக்குள் சமுதாய ரீதியாகவே பார்க்கப்படுகிறது. கொமதேகவின் பல நிர்வாகிகளை இப்போதே அதிமுகவினர் சரி கட்ட தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் முக்கியமான வியூகம் வெளிப்பட்டிருக்கிறது. அதாவது, ’கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க பகுதி அதிமுகவிடம் உறுதியாக இருக்கிறது. அதைக் குறிவைத்து மெனக்கெடுவது ஒருபக்கம் இருந்தாலும், கொங்கு பகுதியில் அரசியல் பிரநிதித்துவம் அளிக்கப்படாத மற்ற சமுதாயத்தினரை அரவணைப்பது ’என்பதுதான் திமுகவின் தற்போதைய வியூகம்.
அதன்படியே பல நிர்வாகிகளிடமும் உங்கள் பகுதியில் அருந்ததியர் சமுதாய வாக்கு எவ்வளவு உள்ளது என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி பிரச்சனைகளை பார்த்துக்கொள்ளலாம். அதே நேரம் அருந்ததியர் சமுதாயத்தோடு நல்லுறவை பேணுங்கள். அவர்களின் நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்றிடுங்கள். பல நிர்வாகிகளுக்கு உங்கள் பகுதியில் உள்ள அருந்ததியர் சமுதாய வாக்குகளின் எண்ணிக்கையே சரியாக தெரியவில்லை. அருந்ததியர் மக்களை திமுகவின் பின்னால் திரட்டுங்கள் என்பதே நேற்று நிர்வாகிகளுக்கு கூறப்பட்ட செய்தி.
அதுமட்டுமல்ல...ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, சேலம் மாவட்டத்தின் சில பகுதிகளில் வன்னியர்கள், உடையார்கள் அடர்த்தியாக இருக்கிறார்கள். ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் முதலியார்கள் எண்ணிக்கை குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இருக்கிறது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் நாட்டுக் கவுண்டர்கள், வேட்டுவ கவுண்டர்கள் இருக்கிறார்கள்.
இந்த விகிதாச்சார அடிப்படையில் கொங்கு பகுதியை அணுகலாம் என்று ஆயத்தமாகிறது திமுக. அண்மையில் ஈரோடு மாவட்டம் குறிஞ்சி என்.சிவகுமார் மாநில விவசாய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல திருச்செங்கோடு முன்னாள் எம்பி கந்தசாமி உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இவர் வேட்டுவ கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். அண்மையில் நாமக்கல் மாசெவாக நியமிக்கப்பட்ட ராஜேஸ்குமார் நாட்டு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவ்வாறு கொங்கு பகுதியில் கொங்கு வேளாளர் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளது திமுக. திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அந்தியூர் செல்வராஜ் அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில்தான் கொங்கு பகுதியில் பெரும் ஓட்டு வங்கியான அருந்ததியர் இன மக்களிடம் நேரடியாக களமிறங்குமாறு நேற்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது திமுக தலைமை. கொங்கு மண்டலத்தில் அரசியல் பிரநிதித்துவம் கொடுக்கப்படாத சமூகங்களுக்கு உரிய பிரநிதித்துவத்தை கொடுப்போம் என்பதுதான் திமுகவின் நேற்றைய கூட்டத்தில் இழையோடிய வியூகம். இது வேட்பாளர் தேர்விலும் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக