புதன், 21 அக்டோபர், 2020

பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தமிழ்நாடு கொடி

Raj Dev : · பெரியாரிய உணர்வாளர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கிற தமிழ்நாடு கொடி விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வெள்ளை நிறப்பின்னணியில் சிவப்பு வண்ணத்தில் தமிழ்நாடு வரைபடம் தான் கொடி. பெரியார் என்று சொல்லி விட்டு கருப்பு இல்லாமல் எப்படி? 

திராவிடம் என்ற பெயர் எங்கே? என்றெல்லாம் குறைபடுகிறார்கள். சிதறிய சிறுக் குழுக்களாக இருந்த பல அமைப்புகள் ஒன்று கூடி ஒரு குடை அமைப்பின் கீழ் ஒருங்கிணைந்து இருப்பதே முக்கிய மாற்றம் என்பதை உணர வேண்டும். இந்த ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்தியிருப்பது ஏதும் அகவய விருப்பு என்று கூட சொல்ல முடியாது; சாதிய/மதவாத சக்திகள் ஏற்படுத்திய புறநிலை நெருக்கடி எனபது முக்கியமானது. எனவே இப்படி ஒரு ஒருங்கிணைவின் தேவை ஒரு அவசியத்தின் பால் எழுந்தது என்பதை முதலில் உணர வேண்டும்.       இந்த கூட்டமைப்பில் இணைந்திருக்கும் கட்சிகளுக்கு தனித்தனிக் கொள்கைகள் உண்டு. மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம் போன்றவற்றை அவை தனித்தனியே வலியுறுத்துபவை. தமிழ்நாட்டில் இருப்பதால் தந்தை பெரியார் பெயரை கூட்டமைப்புக்கு வைத்திருப்பது முக்கிய அம்சம். 

அதில் திராவிடப் பெயர் இல்லை என்ற குறை கூறலுக்கு என்ன செய்வது? அண்ணல் அம்பேத்கர் பெயரும் கூட தான் இல்லை. கூட்டமைப்பின் அரசியல் திராவிடத்துக்கு, அம்பேத்கரியத்துக்கு நட்பாக இருக்கிறதா? எதிராக இருக்கிறதா? என்பதல்லவா முக்கியம்.

கொடியில் கருப்பு இல்லையே என்ற வாதத்துக்கு வருவோம். இந்த கேள்வியை எழுப்புபவர்கள் ஏன் நீலம் இல்லை என்று கேட்கவில்லை? வேறொரு தரப்பு அதையும் கேட்கும் தானே. இப்படி வளர்த்து சென்றால் இந்த பிரச்சினைக்கு தீர்வு என்பதில்லை. விவாதித்து, விவாதித்து இறுதியில் நிரந்தர ஒத்திப் போடலுக்கு தான் வழிவகுக்கும். கூட்டமைப்பில் மூன்று முக்கிய பெரியார் அமைப்புகள் இருக்கின்றன. தி.க., தி.வி.க மற்றும் பெரியார் தி.க. ஆகியவை. இந்த கொடியை அக்கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களே ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை?
அழகியல் உணர்வு குன்றி இருக்கிறதா? அது பேசி மேம்படுத்த கூடிய ஒன்று தானே. கூட்டமைப்பில் உள்ள த.ஓ.வி.இ பொழிலன் இந்த கொடி இப்போதைக்கானது; வேறு கொடி கிடைக்கப் பெற்றால் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார். எனக்கு அவரது அரசியல் கருத்துக்கள் மீது ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் தியாகத்துக்கு அஞ்சாத ஒரு தோழர் என்பது தெரியும்.
கொடிப் பிரச்சினை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு வெறும் சாக்கு தான். அவர்கள் இந்த கூட்டமைப்பின் தேவையை தேர்தல் ஆதாயக்கண் கொண்டு மட்டும் பார்த்து பயனில்லை என்று நினைக்கிறார்கள். அடுத்த தேர்தலில் திமுக வெற்றி பெற இந்த கூட்டமைப்பின் நடவடிக்கைகள் உதவுமா என்று கேட்கிறார்கள். இந்த கேள்வி இந்த நபர்களின் அரசியல் ஓட்டாண்டித்தனத்துடன் தொடர்புடையது.
இந்துத்துவ மற்றும் பார்ப்பன எதிர்ப்பில் நீண்ட கால திட்டமும் வேண்டும்; குறுகிய கால திட்டமும் வேண்டும். தேர்தல் வெற்றி என்பது நீண்ட கால தேவையோடு தொடர்புடையதல்ல. அப்படி சொல்வதாலேயே தேர்தல் வெற்றியின் முக்கியத்துவத்தை குறைத்து பேசுவதாகாது. அது அவசியம் தான். அதே நேரம் அது மட்டும் போதுமா என்றால் இல்லை என்பது தான் பதில். ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மறைந்த ராமகோபாலன் படத்தை திறந்து வைத்துள்ளார். இது போன்ற கொள்கை மீறல்கள் ஆங்காங்கே நடப்பது பற்றிய செய்திகள் வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருக்கும் துரைமுருகன் கூட நம்பிக்கையானவர் இல்லை. இவை எதை காட்டுகிறது? பாஜக அதன் திட்டங்களை நிறைவேற்ற இங்கு வெற்றி பெற தான் வேண்டும் என்றில்லை. ஜெயிக்கும் எந்த கட்சியையும் தனக்கு பயன்படுத்த அது திட்டமிடும். எள் என்றால் எண்ணெயாக அதிமுக போய் நிற்கிறது. திமுக அப்படி இராது என்பது தான் நமது நம்பிக்கை.
தேர்தல் அரசியலுக்கு வெளியே செயல்படக்கூடிய கட்சிகளும் நமது மண்ணை பண்படுத்த வேண்டும் என்ற புரிதல் முக்கியமானது. ஒன்றை (தேர்தல் அரசியல் கட்சி) மற்றொன்றுக்கு (தேர்தலை புறக்கணிக்கும் கட்சி) எதிராக நிறுத்தும் யுத்தியை கைவிட்டு ஒன்றின் குறையை மற்றொன்று இட்டு நிரப்பும் சாத்தியங்கள் பற்றிய பார்வை மிக வேண்டும். பாஜக வெற்றி கூறும் செய்தி அது தான். ஆர்.எஸ்.எஸின் பின் ஆதரவு தான் பாஜகவை இவ்வளவு சமூக பலத்துடன் தூக்கி நிறுத்தக் காரணமாக இருக்கிறது. ஒரு தேர்தலில் பாஜக தோற்றால் அடுத்தத் தேர்தலில் முன்பை விட பலம் பெற்று ஜெயிக்கக் காரணம் தேர்தலில் ஈடுபாடு காட்டாத எண்ணற்ற ஆதரவு அமைப்புகளின் செயல்பாடுகள் தான் காரணம்.
பாஜக பேச தயங்குவதை ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி பேசும். இப்போது பாஜகவும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பித்து விட்டது. முருகனை இழிவுபடுத்தி விட்டார்களா? ஆண்டாளை தவறாக பேசி விட்டார்களா? திமுகவின் நிலைப்பாடு என்ன என்று கேட்டால் தயக்கமான பதில் தான் கிடைக்கிறது. திமுக தீர்மானகரமாக அதன் கொள்கைகளைப் பேச தேர்தல் அரசியலில் நாட்டமில்லாத அமைப்புகளின் செல்வாக்கு சமூகத்தில் வலுப்பெற வேண்டும்.
எனவே ஒரு புதிய அணுகுமுறைக்கு நாம் பழகுதல் வேண்டும். டெம்பரரி புரொஃபைல் பிக்சரில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு எங்கே கருப்பு என்று கேட்கும் சில பிழைப்புவாத நபர்களின் குறுக்கீடு ஆபாசமானது. உடனே அதற்கு வால் பிடிக்கும் வகையில் தங்கள் கருத்துக்களை வளைக்கும் முற்போக்கு தோழர்களின் தடுமாற்றம் முகநூல் ஆல்கரிதத்தின் அபத்த பாதிப்பு.

கருத்துகள் இல்லை: