திங்கள், 19 அக்டோபர், 2020

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? சென்னையில் முகாமிடும் பிகே திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்? சென்னையில் முகாமிடும் பிகே

 திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட்?   சென்னையில் முகாமிடும் பிகே

 minnambalam : திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரசாந்த் கிஷோர் , கடந்த வெள்ளியன்று சென்னை வந்திருக்கிறார். இங்கே சில நாட்கள் தங்க திட்டமிட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.      பிகேவின் இந்த சென்னை பயணத்தின் போது வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் என ஸ்டாலினோடு ஆலோசனை செய்து ஒரு முடிவெடுத்துவிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளுக்கு ஏற்றவாறு சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று திமுக கூட்டணியில் பேசப்பட்டிருந்தது. அதாவது ஒரு எம்பி தொகுதியில் போட்டியிட்டார்கள் என்றால் அந்தக் கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்று ஒரு வரையறை செய்து வைத்திருந்தது திமுக. அந்த வகையில் இரு தொகுதிகள் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், ஒன்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 27 இடங்கள் என்று ஒரு கணக்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் எல்லா கூட்டணிக் கட்சிகளையும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதை வைத்து அளவிடாமல், அவரவரின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்கலாம் என்ற ஒரு கருத்தும் திமுக தலைமையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

ஐபேக் நிறுவனம் கடந்த சில மாதங்களில் தமிழகம் முழுதும் மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தனித்தனியான செல்வாக்கு, வாக்கு வங்கி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஆற்றல் ஆகிய அம்சங்களைப் பற்றியும் அலசி தரவுகளை சேகரித்திருக்கிறது. இதன் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம், அவர்களது செல்வாக்கு பெற்ற தொகுதிகள் போன்றவை கணக்கிடப்பட்டுள்ளன.

இந்த பின்னணியில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களின் அடிப்படையில் தற்போது போட்டியிடும் இடங்களை முடிவு செய்யாமல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் இடங்களை முடிவு செய்யலாம் என்ற புள்ளிக்கு நகர்ந்திருக்கிறார்கள்.

இந்த வகையில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு திமுக தலைமையில் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் ஒரு தகவலை அனுப்பியிருக்கிறார்கள்.

அதாவது, வட மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் பரவலாக செல்வாக்கோடு உள்ளது. வரும் தேர்தலில் சிறுத்தைகளுக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் ஒதுக்கப்படும். ஆனால் இதில் ஒரு நிபந்தனை இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய இரு இடங்களில் ஒன்றில் உதயசூரியனிலும், இன்னொன்றில் தனி சின்னத்திலும் (பானை) நின்றீர்களே...அதுபோல சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்படும் பட்சத்தில் 5 தொகுதிகளில் உதயசூரியனிலும், மீதி 5 தொகுதிகளில் தனி சின்னத்திலும் நிற்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது திமுக தரப்பு. இதுகுறித்து கட்சியினருடன் விவாதித்தபிறகே முடிவெடுக்க முடியும் என்று சிறுத்தைகள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்

பிரசாந்த் கிஷோர் சென்னையில் இருக்கும் போதே கூட்டணிக் கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை இறுதிசெய்துவிடவேண்டும் என்று தீவிரமாக இருப்பதாகத் தகவல்.

-இந்திரன்

கருத்துகள் இல்லை: