செவ்வாய், 20 அக்டோபர், 2020

ஸ்டாலின் Vs குஷ்பு - உதயநிதி Vs அண்ணாமலை - தேர்தலில் போட்டியிடும் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் Vs  குஷ்பு -  உதயநிதி Vs அண்ணாமலை - புதிய திட்டம்!

minnambalam :மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.  “தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்குக் கட்சிகள் தத்தமது வியூகங்களைக் கூர் தீட்டி வருகின்றன. இந்த வகையில் பாஜக வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியில் போட்டியிடப் போகிறது என்பது தெரியாத நிலையிலும் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை வியூகத்தில் உறுதியாக இருக்கிறது.எல்லா தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக பலமாக இருக்கிறது என்று பாஜகவின் பொதுச்செயலாளர் சிடி ரவி தெரிவித்திருப்பது பாஜக தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா அல்லது அதிமுக கூட்டணியில் அதிக இடங்களுக்கான அழுத்தம் கொடுக்குமா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும் திமுக எதிர்ப்பிலும் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுப்பது என்பதிலும் பாஜகவின் பார்வை தெளிவாக இருக்கிறது. அதன் ஓர் அம்சமாக ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வழக்கை தூசு தட்டத் தொடங்கியுள்ளது.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  ஸ்டாலின் பெற்ற வெற்றி அதிகார துஷ்பிரயோகம் செய்து பெறப்பட்டது என்று கூறி சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். சுமார் ஆறு ஆண்டுகள் நடந்த அந்த வழக்கில் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டாலினுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பு வரும்போது ஸ்டாலின் 2011ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலம் முடிந்து 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனபோதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு மேற்கொண்டு விசாரணைக்கு வராமல் கிடப்பில் உள்ளது. தற்போது இந்த வழக்கை தான் பாஜக மோப்பம் பிடித்துள்ளது. ஏற்கனவே ஆறு ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியாகி அதன் பிறகு மேல்முறையீடு செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வழக்கு தொடுத்த சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர தன்னால் முடிந்த அளவு முயற்சிகள் எடுத்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

திமுக தனது சட்ட லாபியை பயன்படுத்தி இந்த வழக்கை விசாரணைக்கு வராமல் பார்த்துக் கொள்கிறது என ஒரு புகார் சுப்பிரமணியன் சுவாமி வழியாக ஆசிர்வாதம் ஆச்சாரிக்குச் சென்று அவர் மூலமாக அமித் ஷாவைச் சென்றடைந்துள்ளது.

இதையடுத்து அந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்குமாறு அமித் ஷா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் சில வழக்கறிஞர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறது. இந்த வழக்கால் ஸ்டாலினுக்கு சட்ட ரீதியாக நெருக்கடி எதுவும் இல்லையென்றாலும் 2011 தேர்தல் வெற்றியை சந்தேகத்திற்கிடமாக்கி அவருக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகளைத் தரமுடியுமா என்று பாஜக முயற்சி செய்து பார்க்கிறது.

இதைத்தாண்டி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்பட்சத்தில் அவருக்கு எதிராக கொளத்தூரில் கடுமையான போட்டியைத் தரும் வேட்பாளரை நிறுத்துவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. திமுகவிலிருந்து காங்கிரஸுக்குச் சென்று காங்கிரஸிலிருந்து அண்மையில் பாஜகவுக்குச் சென்றிருக்கும் குஷ்புவை ஸ்டாலினுக்கு எதிராகப் போட்டியிட வைக்கலாம் என்ற ஒரு திட்டமும் பாஜகவிடம் இருக்கிறது. திமுகவில் இருந்து வெளியேறிய பிறகு அதன் காரணம் பற்றி குஷ்பு தனது நண்பர்கள் வட்டாரத்தில் குறிப்பிடும்போது... ஸ்டாலின் கொடுத்த நெருக்கடி காரணமாகவே கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது என்று கூறியுள்ளார். இந்த அடிப்படையில் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்வதற்கு ஏற்ற வேட்பாளர் குஷ்பு என்ற பாஜக முடிவு செய்து இது பற்றி குஷ்புவிடமும் பேசப்பட்டுள்ளது. யோசித்துச் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் குஷ்பு.

கொளத்தூரில் ஸ்டாலினுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்து ராகுல் காந்தியை அமேதியில் தோற்கடித்ததைப் போல தோற்கடிக்க வேண்டுமென்பது பாஜகவின் திட்டம். வலுவான வேட்பாளரை நிறுத்தி அதன் மூலம் ஸ்டாலின் தன் அதிக கவனத்தை கொளத்தூரில் செலுத்தினால், தமிழகம் முழுவதும் அவரது பிரச்சாரத்தைக் குறைக்கலாம் என்றும் திட்டமிடுகிறது பாஜக.

அதேநேரம் அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிரான வேட்பாளராக நிறுத்தலாம் என்றும் பாஜக ஒரு திட்டம் வைத்துள்ளது. பாஜக தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொல்கிறதோ அங்கே போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, உதயநிதிக்கு எதிராகப் போட்டியிட்டு அவரை ஒரே மேடையில் விவாதத்துக்கு அழைப்பதிலும் ஆர்வமாக இருக்கிறார் என்கிறார்கள் பாஜக தரப்பில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் சென்றது வாட்ஸ்அப்.

 

கருத்துகள் இல்லை: