வியாழன், 12 டிசம்பர், 2019

இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு


dinakaran : சென்னை: இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற பாஜ அரசு முயற்சிக்கிறது என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் குற்றம்சாட்டியுள்ளார்.  பாரதியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ரிவல்ல பிரசாத் மற்றும் கோபண்ணா, தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், வக்கீல் செல்வம், செல்வபெருந்தகை, சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்ன், மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது, உள்நோக்கத்துடன் கூடிய இந்த சட்ட திருத்தத்தை காங்கிரஸ் ஆதரிக்காது. இது இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியாக அமையவில்லை.இந்தியாவை மத சார்புள்ள நாடாக மாற்ற வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. அதன் அடிப்படையில் திட்டமிட்டு மத்திய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது.


இதை எதிர்த்து நாடு முழுவதும் நாங்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தற்போது கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறி வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு. மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்திவிடும். இதை காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம், தவறான கொள்கைகளினால் அரசின் திட்டங்களை செயல்படுத்தக் கூட நிதி இல்லாத நிலை உருவாகியுள்ளது. மோடி அரசின் தோல்விகளை திசை திருப்பவே இதுபோன்ற நடவடிக்கைகளில் பாஜ அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மசோதாவை அமல்படுத்துவதன் மூலம் உலக அளவில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இச்சட்ட திருத்தத்தை அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும்

கருத்துகள் இல்லை: