
அந்தக் கூட்டத்திலேயே ஜெ. அன்பழகனுக்கு பதிலளித்த கே.என்.நேரு, “கலைஞர் எப்போதுமே கூட்டணிக் கட்சிகளை வெளியேற்ற மாட்டார். அவர்களே வெளியே செல்லும் நிலையை உண்டாக்கிவிடுவார். அதுபோல் ஸ்டாலினும் செய்வார்”என்று சொல்லிவிட்டு இன்னொரு விளக்கம் கொடுத்தார்.
“2006 தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தேமுதிகவோடு சேரப் போவதாக ஒரு தகவல் எனக்குக் கிடைத்து அதைக் கலைஞரிடம் சொன்னேன். அப்போது கலைஞர், ‘கம்யூனிஸ்டுகளைப் பற்றி எனக்குத் தெரியும். அவர்கள் இன்னொரு கட்சி வளர்வதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே தேமுதிகவோடு கூட்டணி சேர மாட்டார்கள் என்று அடித்து சொன்னார்.
அதுபோலவே கம்யூனிஸ்டுகள் தேமுதிகவோடு சேரவில்லை. (ஆனால் அதே கம்யூனிஸ்டுகள் 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விஜயகாந்தையே முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார்கள்) எனவே ஒவ்வொரு கட்சிகளின் வெளி செயல்பாடு வேறு, உள் நகர்வு வேறு. அதையறிந்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத் தலைவர் மேற்கொள்வார்”என்று பதில் கூறினார் நேரு.
மாசெக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டணி விவகாரம் பற்றிய தகவலை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் வெளியிட்டதை தொடர்ந்து திமுக கூட்டணிக்குள் ஏற்கனவே இருந்து வரும் சலசலப்புகள் அதிகமாகியுள்ளன.
ஏற்கனவே விக்கிரவாண்டி தேர்தல் தோல்வி விவகாரத்தில் திருமாவளவன் சொன்ன கருத்துகள் திமுகவினரை எரிச்சல் படுத்தின. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பற்றியெல்லாம் திமுக யோசிக்கவே இல்லை. மேலும், திமுகவில் இப்போது பிரசாந்த் கிஷோர் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். கூட்டணி விஷயத்தில் அவர் எடுக்கும் முடிவுதான் முக்கியத்துவம் பெறும் என்பதால் திமுக கூட்டணி இப்படியே நீடிக்குமா என்பது குறித்து திமுக அணிக்குள்ளேயே விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக