வியாழன், 12 டிசம்பர், 2019

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை! உச்சநீதிமன்றம்

தினமலர் : புதுடில்லி : தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், '2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில், ஊரகம், நகர்ப்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகளில், 1.50 லட்சம் பதவிகள் உள்ளன.
இப்பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில், மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. இதற்காக, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டு வரையறை செய்யப்பட்டது. இட ஒதுக்கீடு அடிப்படையில், சில உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே பிரிக்கப்பட்டன. இதற்கிடையே, விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி, வேலுார் மாவட்டங்களைப் பிரித்து, அரசு, ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மட்டும், மாநில தேர்தல் ஆணையம், கடந்த, 2ம் தேதி, தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.




புதிய மாவட்டங்கள்
'இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும்; புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை செய்ய வேண்டும்; அதன் பின்னரே, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'பழைய மற்றும் அதிலிருந்து பிரிக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை முடிக்காமல், உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது.

மற்ற பகுதிகளில், உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டது; 7ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, தி.மு.க., சார்பில், உச்ச நீதிமன்றத்தில், இரண்டாவது முறையாக, 9ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது: வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு நடைமுறைகளை, உள்ளாட்சி தேர்தலில் முறையாக பின்பற்ற வேண்டும் என, சட்டம் உள்ளது.

ஆனால், தமிழக தேர்தல் ஆணையம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ், பெண்கள், எஸ்.சி., மற்றும், எஸ்.டி., வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அளிக்காமல், 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ், உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறது. எனவே, இந்த தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று நடந்தது. தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: தமிழக உள்ளாட்சி அமைப்புகளில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம், இட ஒதுக்கீடு கடைப்பிடிக்க வேண்டும். வார்டுக்கு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் கடைப்பிடிக்கின்றனர், ஆனால் பஞ்சாயத்து யூனியன் பதவிக்கு, 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், கடைப்பிடிக்கின்றனர். அதே போல், சுழற்சி முறை, பெண்களுக்கான இட ஒதுக்கீடு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்படவில்லை.

ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு, 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்துவதை தேர்தல் ஆணையம் தரப்பிலும், அரசுத் தரப்பிலும், தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் உறுதிப்படுத்திப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த, தற்போதுள்ள, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதி மறுவரை செய்யப்பட்டதே தவிர, ஊராட்சி தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் போன்ற பதவிகளுக்கு, பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே, இட ஒதுக்கீடு போன்றவை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என, கூறுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான, முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல், முகுல் ரோஹத்கி கூறுகையில், ''உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட்டு பின், மீண்டும் தடை கோரி வருகின்றனர். தேர்தல் நடக்க வேண்டுமா; வேண்டாமா,'' என்றார். இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், '2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நடத்தலாமா' என, கேட்டனர். இதற்கு, தி.மு.க., தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ''அதை தான் நாங்கள் கேட்டு வருகிறோம்,'' என்றார்.

தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி கூறுகையில், '' உச்ச நீதிமன்றம் கூறியது போல, ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து, பிற மாவட்டங்களுக்கு, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மறுவரையறை செய்யப்பட்டது. அதே கணக்கின் அடிப்படையில், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படுகிறது,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். வார்டு முதல் நிர்வாகிகள் வரை அனைத்துக்கும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி, சட்டபூர்வ நடவடிக்கைளின் அடிப்படையில், தேர்தல் நடத்த வேண்டும்.

மேலும், ஒன்பது மாவட்டங்களுக்கு, 2011 -மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மறுவரையறை, இட ஒதுக்கீடு செய்து, நான்கு மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என உத்தரவிட்டிருந்தோம். அது, இப்போது, மூன்று மாதங்களாக குறைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: