ஞாயிறு, 8 டிசம்பர், 2019

திரிபுரா 17 வயது இளம் பெண் எரித்துக் கொலை ..


தினமணி : திரிபுராவில் வரதட்சணை கேட்டு 17 வயது இளம் பெண் எரித்துக் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தெற்கு திரிபுரா சண்டீர்பஸார் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி நாராயண் சந்திர சாஹா தெரிவிக்கையில்,
"அஜோய் ருத்ர பால் (21) கோவாய் மாவட்டத்தின் சுக்லா சௌதரியை திருமணம் செய்துகொள்வதற்காக ரகசியமாக வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதையடுத்து, டிசம்பர் 11-ஆம் தேதி முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அஜோய் ருத்ர பால்லின் தாயார் மினாடி, அந்தப் பெண்ணின் பெற்றோர்களை டிசம்பர் 6-ஆம் தேதி சந்தித்து ரூ. 50,000 வரதட்சணை கோரியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் தங்களது பொருளாதார சூழ்நிலையைக் குறிப்பிட்டு ரூ. 15,000 மட்டுமே ஈட்டுள்ளனர். இதையடுத்து சில மணி நேரங்களுக்குப் பிறகு 90 சதவீத தீக்காயத்துடன் அந்த இளம் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.

இதுகுறித்து அஜோய் ருத்ர பால் தெரிவிக்கையில், அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தார். ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் இதை மறுத்துவிட்டனர்.
தினக்கூலியான அஜோய் ருத்ர பால் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுக்லா கத்தும் சத்தம் கேட்கும்போது நான் அடுத்த அறையில் இருந்தேன். அதன்பிறகு, கிராமத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்" என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் தெரிவிக்கையில்,
"எனது மூத்த மகளுக்கு வெறும் 17 வயதுதான். அவள் அஜோய் வீட்டுக்குச் சென்றதையடுத்து, முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்தோம். அஜோய் ருத்ர பால்லின் தாய் ரூ. 50,000 கேட்டார். ஆனால் எங்களால் ரூ. 15,000 மட்டுமே ஈட்ட முடிந்தது. அன்றைய இரவு எனது மகளுடன் பேச விரும்பினேன். ஆனால், அஜோய் என்னை அனுமதிக்கவில்லை.
இதன்பிறகு எனது மகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதுதான் எங்களுக்கு கிடைத்த செய்தி" என்றார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அஜோய் ருத்ர பால் மற்றும் அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: