வெள்ளி, 13 டிசம்பர், 2019

ரேப் இன் இந்தியா: நாடாளுமன்றத்தை அதிரவைத்த கனிமொழி . வீடியோ


மின்னம்பலம் : இந்தியாவில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது என்பதை ஹைதராபாத், உன்னாவ் சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்நிலையில் நேற்று ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாலியல் வன்கொடுமைகள் குறித்துப் பேசியிருந்தார்.
ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டம் சிறப்பாக நடப்பதாகக் கூறுகிறார். ஆனால் இந்தியாவிலோ, பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் ரேப் இன் இந்தியா திட்டம்தான் அவர்களால் நடத்தப்படுகிறது. இதுபற்றி மோடி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை’ என்று கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் இந்த கருத்து டிசம்பர் 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. கேள்வி நேரத்தின்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்பிக்கள் சேர்ந்துகொண்டு, ‘ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று முழக்கமிட்டார்கள். நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடைசி நாளான இன்று பாஜக பெண் எம்.பிக்கள், ராகுலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். போபால் எம்.பி, பிரக்யா தாக்கூர், லாக்கெட் சட்டர்ஜி உள்ளிட்ட பெண் எம்.பி.க்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஒத்தி வைப்பு தீர்மானத்தை அளித்தனர். கடும் அமளியால் இன்று அவை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது. லாக்கெட் சட்டர்ஜி பேசுகையில் எல்லா ஆண்களும் வன்கொடுமையாளர்கள் அல்ல. ராகுல் காந்தி அனைத்து ஆண்களையும் அவமதித்து விட்டார் என்று கூறினார்.
அப்போது பாஜக தரப்பில் இருந்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு கனிமொழியும், சுப்ரியா சுலேவும் என்ன பதில் சொல்கிறார்கள்?’ என்று கேட்டார்.
இதைக் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொந்தளித்தனர். ஏன் குறிப்பிட்ட இரு பெண் எம்.பி.க்களையும் அமைச்சர் பெயர் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்று எதிர்க் குரல்கள் கிளப்பினர். அப்போது கனிமொழி தன் இருக்கையில் இருந்து எழுந்தார். சில தமிழக எம்பி.க்களே, ‘உட்காரும்மா.. உட்காரும்மா’ என்று கனிமொழியிடமே கூற, ‘இருங்க... என் பேரை சொல்றாங்க. நான் பதில் சொல்லியே ஆகணும்’ என்று எழுந்தார்.
கூச்சல்களுக்கிடையே கனிமொழி சபாநாயகரைப் பார்த்து, ‘சபாநாயகர் அவர்களே... இது கேள்வி நேரம். சபை உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா?” என்று இருமுறை குரலை உயர்த்தினார்.
சபையின் கூச்சல் அடங்கியது. பின் தன் எதிரே ஆளுங்கட்சி பெண் உறுப்பினர்கள் அனைவரும் நின்றிருக்க எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒற்றைப் பெண்ணாய் எழுந்து நின்ற கனிமொழி, “அமைச்சர் என் பெயரையும், சுப்ரியா சுலே பெயரையும் குறிப்பிட்டு எங்கள் பதிலை எதிர்பார்ப்பதாகக் கூறினார். முதலில் இந்த விவகாரம் அவைக்கு வெளியே நடந்தது” என்ற சொன்னவுடனேயே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மறுபடியும் கூச்சல் எழுப்பினர்.
அவர்களை அமைதிப்படுத்திவிட்டுத் தொடர்ந்து பேசிய கனிமொழி, “மேக் இன் இந்தியா திட்டம் பற்றி பிரதமர் எப்போதும் பேசி வருகிறார். அதை நாங்கள் மதிக்கிறோம். மேக் இன் இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு இந்தியா வலுவான பொருளாதாரமாக மாற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகிறோம். ஆனால் நாட்டில் நடப்பது என்ன? அதைதான் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் கூறியிருக்கிறார். மேக் இன் இந்தியாவுக்கு பதிலாக துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்றுதான் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இது நாட்டைப் பற்றிய அவரது கவலை. இதில் என்ன தவறிருக்கிறது?” என்று கனிமொழி திடமாக பதில் கூற, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் கூச்சல் எழுப்பத் தொடங்கினர்.
அதேநேரம் கனிமொழி அளித்த பதிலைப் பாராட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி அருகே வந்து பாராட்டியதோடு, ‘நீங்கள் கொடுத்தது சிறந்த பதில்’ என்று கூறினார்கள்.

இதனிடையே பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாலியல் வன்கொடுமைக்காக ஆண்களை இந்தியாவுக்கு அழைப்பு விடுப்பது போல் இருக்கிறது ராகுல் காந்தியின் பேச்சு. இதுதான் நாட்டு மக்களுக்கு அவர் சொல்லும் செய்தியா?. இது இந்தியாவுக்கு பெரும் அவமானம். அவருக்கு 50 வயதாகிறது எனினும் அவரது கருத்து பாலியல் வன்கொடுமைக்காக அழைப்பு விடுப்பது போல் இருக்கிறது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்று கடுமையாக சாடினார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாமில் நடைபெறும் போராட்டங்களைத் திசை திருப்பவே பாஜக தன் மீது குறி வைப்பதாகக் குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை: